கொலாஜன் என்பது உடலில் உள்ள முக்கியமான ஒரு கட்டமைப்பு புரதம் ஆகும். இது முதன்மையாக சருமம், எலும்புகள், தசைநாண்கள், தசை நார்கள் மற்றும் குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் காணப்படுகிறது. இது பல்வேறு திசுக்களுக்கு வலிமை நெகிழ்ச்சி மற்றும் கட்டமைப்பை வழங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முகச்சுருக்கங்களை இது குறைக்கிறது. இளமைத் தோற்றத்தை பராமரிக்க உதவும் எலாஸ்டின் மற்றும் கேரட்டின் உடன் இணைந்து கொலாஜன் செயல்படுகிறது. கொலாஜன் உள்ள உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கொலாஜனை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்: உடலில் கொலாஜன் அளவை அதிகரிக்க சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காரணமாக உடலில் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து இளமை தோற்றத்தைத் தக்க வைக்கிறது.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் பழங்கள்:
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை பழம் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் தொகுப்புக்கு மிகவும் முக்கியமானது. உடலில் ஏற்கெனவே உள்ள கொலாஜனை ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இந்தப் பழங்களை தினசரி அல்லது அடிக்கடி எடுத்துக்கொண்டால் சருமம் நெகிழ்ச்சியாக இருக்கும். சுருக்கங்கள் மறைந்து இளமையாகக் காட்சி தரலாம். மேலும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பெர்ரி பழங்கள்: ஸ்ட்ராபெர், பிளாக் பெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் அவுரி நெல்லிகள் போன்றவற்றில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இவை கொலாஜனை பாதுகாக்க உதவுவதோடு, சரும நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்கின்றன. இவற்றில் உள்ள உயர் ஆக்சிஜனேற்ற உள்ளடக்கம், கொலாஜனை சேதப்படுத்தும் ஃப்ரீரேடிகல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
அன்னாசி, மாம்பழம், கிவி: அன்னாசிப் பழத்தில் கொலாஜன் தொகுப்பை ஊக்குவிக்கும் மற்றும் வீக்கத்தை குறைக்கும் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்கின்றன. கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை கிவியில் அதிக அளவு பெறலாம்.
கொலாஜன் அளவை அதிகரிக்கும் காய்கறிகள்: கீரைகள், முட்டைக்கோஸ், சிவப்பு குடை மிளகாய் போன்றவற்றில் கொலாஜன் அளவை அதிகரிக்கும் சேர்மானங்கள் உள்ளன. இலைக் கீரைகளில் குளோரோஃபில் அதிகமாக உள்ளது. இது உடலில் கொலாஜன் அளவுகளை அதிகரிக்கிறது. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன. இவை சருமத்தை பாதுகாக்கவும் கொலாஜன் முறிவைத் தடுக்கவும் உதவுகின்றன.
சிவப்பு குடை மிளகாய்: இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் ஏ உள்ளடக்கம் சருமத்தின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது.
பூண்டு: பூண்டில் கந்தகம் நிறைந்துள்ளது. இது கொலாஜன் தொகுப்புக்கு மிகவும் முக்கியமானது. சேதமடைந்த கொலாஜன் இழைகளை சரிசெய்ய உதவும் டாரின் மற்றும் லிபோயிக் அமிலமும் பூண்டில் நிறைந்துள்ளது.
தக்காளி: தக்காளியில் உள்ள லைகோபின் என்கிற மூலப்பொருள் புற ஊதா கதிர்வீச்சு சேதத்தில் இருந்து கொலாஜனை பாதுகாக்கும் ஒரு ஆக்சிஜனேற்றியாகும். தக்காளியை தினமும் உடலில் சேர்த்துக்கொள்ளும்போது அது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் பழங்களையும் காய்கறிகளையும் தொடர்ந்து உண்டு வரும்போது இளமையான சருமத் தோற்றம் கிடைக்கும். மேலும், உடலையும் அது ஆரோக்கியமாக வைக்கிறது.