
மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நீரில் பரவும் நோய்களும் காற்றில் பரவும் நோய்களும் அதிகரிக்கும். நிறைய கொசுக்களும் நோய் கிருமிகளும் உற்பத்தியாகும் இந்த காலகட்டத்தில் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் தேவை. அந்த வகையில் மழைக்காலத்தில் கவனமுடன் சாப்பிட வேண்டிய 6 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. இலை வடிவ காய்கறிகள் மற்றும் கீரைகள்:
மழைக்காலங்களில் கீரைகள் மற்றும் இலை வடிவ காய்கறிகளான ஸ்பினச், முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவை விளையும் மண்ணில் நிறைய பூச்சிகள் வரும் என்பதால் நிறைய பூச்சிக்கொல்லிகள் சேர்க்கப்பட்டு இருக்கும். இவற்றை சாப்பிடும் போது நோய் தொற்று, உணவு ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து ஊற விட்டு நன்கு கழுவி சமைக்க வேண்டும். இல்லையெனில், மழைக்காலங்களில் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2. சாலையோரக் கடை எண்ணெய் பலகாரங்கள்:
மழைக்காலங்களில் சூடாக சாப்பிட தோன்றும் வடை, சமோசா, பக்கோடா போன்றவை மாசு படிந்த எண்ணெயில் செய்யப்படும் பலகாரங்களாக இருப்பதாலும், சுகாதாரமற்ற தண்ணீரால் தயாரிக்கப்படுவதாலும் அவற்றை சாப்பிடும் போது வயிற்றில் நோய்க்கிருமிகளை உண்டாக்கும். ஆகவே, மழைக்காலங்களில் சாலையோர எண்ணெய் பலகாரங்கள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
3. கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும்:
மழைக்காலம் கடல் மீன்கள், கடல் நண்டு மற்றும் இறால்களின் இனப்பெருக்க காலமாக இருப்பதால் அந்த சமயத்தில் நிறைய நோய் கிருமிகள், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருக்கும். ஆகவே மழைக்காலங்களில் இந்த வகை கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது ஃபுட் பாய்சன் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பதே சிறந்தது.
4. வெளியிடங்களில் விற்கும் ப்ரூட் சாலட்:
முன்கூட்டியே வெட்டி வைக்கப்படும் பழங்களில் நீர் சத்துக்கள் வெளியேறி ஈக்கள் மொய்க்க தொடங்கும் என்பதால் வெளியிடங்களில் விற்கும் ஃப்ரூட் சாலட் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
மழைக்காலத்தில் மாசுக்களில் உட்கார்ந்த ஈக்கள் பழங்களிலும் உட்காருவதில் நீரில் பரவும் நோய்கள் மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கும் என்பதால் வீட்டில் ஃபிரஷ்ஷாக கட் செய்து சாப்பிடுவதே சிறந்தது.
5. கார்பனேட்டட் பானங்கள்:
சர்க்கரை சேர்த்த சோடா உள்ளிட்ட கார்பனேட்டட் பானங்கள் ஏற்கனவே உடலில் இருக்கும் மினரல்களையும் ஜீரண சக்தியையும் குறைத்து விடும். மழைக்காலத்தில் ஜீரண மண்டலத்தின் செயல் திறன் குறைவாக இருக்கும் என்பதால் அஜீரணம் சார்ந்த பிரச்னைகளும் வயிறு மந்தமும் ஏற்படும் என்பதால் கார்பனேட்டட் பானங்களை தவிர்க்க வேண்டும்.
6. தயிர் மற்றும் மோர்:
வெயில் காலங்களில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரியும் தயிர் மற்றும் மோர் போன்ற பிற பால் பொருட்கள் மழைக்காலத்தில் ஜீரணிக்க அதிக சிரமத்தை ஏற்படுத்தி வயிறு உப்புசம், வாய்வு தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, மழைக்காலத்தில் தயிர் மற்றும் மோருக்கு நோ சொல்ல வேண்டும்.
மேற்கூறிய 6 வகை உணவுகளையும் மழைக்காலங்களில் சாப்பிடும் போது அதிக கவனமுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும் .
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)