
மிக விரைவில் தயாரிக்க கூடிய உணவு வகைகளான ஓட்ஸ் மற்றும் மியூஸ்லி இரண்டும் தற்போது பலராலும் விரும்பி உண்ணப்படும் காலை உணவு வகைகள். இவற்றுடன் சிறிது பால் அல்லது தயிர் மற்றும் பழங்களைச் சேர்த்தால் ஆரோக்கியமான காலை உணவு தயார். இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றிப் பார்ப்போம்
ஓட்ஸ் நன்மைகள்:
ஓட்ஸ் என்பது நூறு சதவீதம் முழு தானியமாகும். அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டது. பொதுவாக தண்ணீர் அல்லது பாலில் கலந்து அருந்தலாம். பேக்கிங் ஸ்மூத்திகள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
இதில் உள்ள கரையாத நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து காரணமாக இதை உண்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பசியும் எடுக்காமல் இருக்கிறது. இதனால் தேவையில்லாத தீனிகள் மற்றும் பிற உணவுகளை உட்கொள்வதை தடுத்து எடையை ஆரோக்கியமாக வைக்கிறது.
இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த சர்க்கரையின் திடீர் அதிகரிப்பை தடுக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதால் ரத்த அழுத்தம் மேம்படுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
ஓட்சை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்துவதால் மனித ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது. சரும பிரச்சனைகளை சரிசெய்து, புற்றுநோய் போன்ற நோய்களையும் தடுக்க உதவுகிறது.
மியூஸ்லி நன்மைகள்:
இது ஸ்விட்சர்லாந்தில் தோன்றிய ஒரு காலை உணவாகும். ஓட்ஸ், கோதுமை, உலர்ந்த பழங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் பிற தானியங்களின் கலவைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான சத்தான உணவு. பால், தண்ணீர், சாலடுகள் மற்றும் பழச்சாறுகளுடன் கலந்து உண்ணலாம். மேலும் பீட்ரூட் கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்தும், வால்நட், பாதாம், ஆப்பிரிக்காட், திராட்சை போன்ற உலர்ந்த பழங்களை சேர்த்தும் உண்ணலாம் என்பது இதனுடைய சிறப்பு அம்சமாகும்.
இதை காலை, மதியம், இரவு அல்லது மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால் ஆரோக்கியமான செரிமானம் தருகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் உள்ள கொட்டைகள் மற்றும் விதைகள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்கி கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்க உதவுகின்றன. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றன. சரியான ரத்த சர்க்கரை அளவை நிர்ணயிக்க உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.
ஓட்ஸ் vs மியூஸ்லி: இரண்டில் எது ஆரோக்கியமானது?
இவை இரண்டுமே ஆரோக்கியமான உணவு வகைகள் தான். ஆனால், எளிமையான குறைந்த கலோரி மற்றும் குறைந்த சர்க்கரை அளவு உள்ள உணவை விரும்புபவர்களுக்கு ஓட்ஸ் சிறந்தது. குறிப்பாக வயதானவர்கள் சர்க்கரை நோயாளிகள், மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவாகும்.
மியூஸ்லியில் கொட்டைகள் விதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்க்கப்படுவதால் இது மாறுபட்ட ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் வணிக ரீதியாக இதில் சேர்க்கப்படும் சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அதைத் தேர்ந்தெடுக்கும் போது இனிப்பு சேர்க்காத வகைகளை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும். இளம் வயதினருக்கு மியூஸ்லி உகந்ததாக இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)