ரத்த சோகையா? மாத்திரை இல்லாமல் ஹீமோகுளோபினை உயர்த்தும் உணவுகள்!

முருங்கைக்கீரை, பீட்ரூட் முதல் உலர் பழங்கள் வரை - இயற்கை வழியில் ரத்த உற்பத்தியை பெருக்கும் வழிகள்!
Anaemia - ரத்த சோகை
Anaemia - ரத்த சோகை
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ரத்த சோகை என்பது உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல போதுமான ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு ரத்தத்தில் குறைந்து காணப்படும் ஒரு மருத்துவ நிலையாகும்.

ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதமாகும். இதுதான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.

இந்த ரத்த சோகை (Anemia) எனப்படும் உடலின் ரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைபாட்டை தடுக்கவும், குணப்படுத்தவும் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் விட்டமின் பி12 நிறைந்த உணவுகள் மிகவும் அவசியமாகும். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் ஏழு சிறந்த உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

முருங்கைக்கீரை மற்றும் பச்சைக் கீரைகள்:

கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை, முளைக்கீரை மற்றும் பாலக்கீரை போன்றவற்றில் நான்-ஹீம் (Non-Heme) எனப்படும் தாவர அடிப்படையிலான இரும்பு சத்தும், ஃபோலேட்டும் மிக அதிக அளவில் உள்ளன. இவை ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை நேரடியாக அதிகரிக்க உதவுகின்றன. இவற்றை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ, சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை வேகமாக உயர்த்தும்.

கல்லீரல் மற்றும் சிவப்பு இறைச்சி:

அசைவ உணவுகளில் உள்ள 'ஹீம் இரும்பு' (Haem Iron) உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. ஆட்டின் கல்லீரல், கோழி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகள் ஆகியவை ரத்த சோகையை விரைவாக குணப்படுத்த சிறந்தவை. ஆனால் இதயம் சார்ந்த கோளாறுகள் அல்லது கொலஸ்ட்ரால் இருந்தால் சிவப்பு இறைச்சியை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம்.

பருப்புகள் மற்றும் சுண்டல் வகைகள்:

சைவ உணவு உண்பவர்களுக்கு பாசிப்பயறு, கொண்டைக்கடலை (சுண்டல்), ராஜ்மா (Kidney Beans), துவரம் பருப்பு மற்றும் சோயா பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் ஒரு வரப்பிரசாதமாகும். இவற்றில் இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளன. பருப்பு வகைகளை முளைகட்டி (Sprouted) வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள இரும்புச்சத்தை உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும்.

Dry fruits - ரத்த சோகை
Dry fruits - ரத்த சோகை

பேரிச்சம்பழம் மற்றும் உலர் திராட்சை:

உலர் பழங்களான பேரிச்சம்பழம், உலர் திராட்சை, அத்திப்பழம் (Figs) மற்றும் ஆப்ரிகாட் ஆகியவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டு வருவது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும். அத்துடன் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலையும் தரும்.

முட்டை:

முட்டையில் உயர்தர புரதத்துடன் இரும்புச்சத்தும், இரத்த உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் பி12 சத்தும் அடங்கியுள்ளன. தினமும் ஒரு முழு வேகவைத்த முட்டையை சாப்பிடுவது ரத்த சோகை வராமல் தடுக்க உதவும்.

பூசணி விதைகள் மற்றும் கொட்டைகள்:

பூசணி விதைகள் (Pumpkin seeds), பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரச்சத்து (Copper) நிறைந்துள்ளது. மாலை நேர சிற்றுண்டியாக ஒரு கைப்பிடி அளவு பூசணி விதைகள் அல்லது சிறிது பாதாம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது.

மாதுளம் பழம், பீட்ரூட் மற்றும் சிட்ரஸ் பழங்கள்:

மாதுளையில் இரும்புச்சத்து உள்ளது. அத்துடன் எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடும் போது, அது நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் எளிதாக உறிஞ்ச வழி வகுக்கிறது. பீட்ரூட் மற்றும் மாதுளை ஆகியவை ரத்த உற்பத்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இவற்றை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ தினமும் குடித்து வரலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து ஏன் அவசியம்? பெற்றோர் அறிய வேண்டியவை!
Anaemia - ரத்த சோகை

பாரம்பரிய உணவுகளில் வெல்லம் இயற்கையான இரும்புச்சத்து நிறைந்ததாகும். இதை எள்ளுருண்டை அல்லது வேர்க்கடலை உருண்டையாக செய்து சாப்பிடலாம். எள் மற்றும் கருப்பட்டி இரும்பு சத்துக்களும் தாதுக்களும் நிறைந்தவை. கம்பு, கேழ்வரகு போன்ற பாரம்பரிய தானியங்களில் கஞ்சி அல்லது கூழாக செய்து குடிக்கலாம்.

உணவை இரும்புப் பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உணவில் இரும்புச்சத்தின் அளவை இயற்கையாகவே அதிகரிக்க உதவும். அதேபோல் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் டீ, காபி போன்றவற்றை உணவோடு சேர்த்து அல்லது உணவு சாப்பிட்ட உடனே குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை இரும்புச்சத்து உடலில் சேர்வதைத் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
டெங்கு vs உண்ணிக் காய்ச்சல்: ஒரே மாதிரி அறிகுறிகள்... உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள்!
Anaemia - ரத்த சோகை

Reference:

logo
Kalki Online
kalkionline.com