சத்துக்கள் நிறைந்த நெய்யும் வெண்ணெயும் நம் சாப்பாட்டில் அவசியம் உண்டு. இவற்றை உணவில் எடுப்பதன் மூலம் உடல் புஷ்டியாக இருக்கும் என்பது பலரின் கருத்து. உண்மையில் நெய் வெண்ணெயில் சத்துக்கள் உண்டா? இரண்டின் குணங்களும் ஒன்றா? எதை அதிகம் பயன்படுத்தினால் நலனுக்கு உகந்தது?
நெய் vs வெண்ணெய் இரண்டின் தனித்துவமான பண்புகள், ஊட்டச்சத்து விவரங்கள் பற்றி இந்தப் பதிவில் அறிவோம்.
நெய் நன்மைகள்:
வெண்ணெயை விட நெய்யில் அதிக புகை அழுத்தம் (485°F/252°C) உள்ளது. இதனால் இது அதிக வெப்ப சமையலுக்கு ஏற்றதாக அமைகிறது. நெய் லாக்டோஸ்- மற்றும் கேசீன் இல்லாதது என்பதால் பால் உணவில் விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ, மற்றும் கே சத்துக்கள் நிறைந்ததாக நெய் உள்ளது. மேலும் உணவுகளின் சுவையை அதிகரிக்கும் ஒரு தனித்துவமான சுவை கொண்டதாகவும் ஆகிறது.
நெய்யின் நலபாதிப்புகள்
நெய்யில் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) கொழுப்பு உட்பட குறிப்பிடத்தக்க அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. ஆகவே அதிகமாக உட்கொண்டால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், குறிப்பாக அஜீரணக் கோளாறு, மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்த அளவு எடுக்க வேண்டும்.
மேலும் காய்ச்சல் போன்ற பருவ தொற்றுக்கள் ஏற்படும் காலங்களில் நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
வெண்ணெய் நன்மைகள்:
வெண்ணெய்யில் CLA எனும் நன்மை பயக்கும் கொழுப்பு அமிலம். உள்ளது. குறைந்த ஸ்மோக் பாயிண்ட் மற்றும் சுவை மற்றும் மென்மை சேர்க்கும் திறன் காரணமாக வெண்ணெய் பெரும்பாலும் கேக் போன்ற பேக்கிங் உணவுகளில் விரும்பப்படுகிறது. வெண்ணெய் உணவுகளுக்கு செழுமையான, கிரீமி சுவை மற்றும் அமைப்பை சேர்க்கிறது.
வெண்ணெய் தீமைகள்:
வெண்ணெய் அதிகமாக சாப்பிடுவதால் உடலுக்கு பல தீமைகளும் உண்டு. அதிக வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும். மேலும் உடலில் கொழுப்பு சேரக் காரணமாகும்.
நெய் அல்லது வெண்ணெய் எது சிறந்தது?
நமது தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள், உணவுத் தேவைகள் மற்றும் சமையல் நோக்கங்களைப் பொறுத்து இரண்டையும் தேர்வு செய்யலாம். அதிக ஸ்மோக் பாயிண்ட் கொண்ட ஆரோக்கியமான விருப்பத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், நெய் சிறந்த தேர்வாக இருக்கலாம். நீங்கள் லாக்டோஸ் ஒவ்வாமை அல்லது வேறு பாதிப்பு இருக்கும் பட்சத்தில் மருத்துவ பரிந்துரையில் நெய் சிறந்தது.
மேம்பட்ட உடல் எடைக்கு வெண்ணெய் சிறந்தது. அதே போல் சமையலில் பேக்கிங் மற்றும் குறிப்பிட்ட உணவுகளில் ரிச்சான உயர்தர கிரீமி சுவையைச் சேர்க்க விரும்பினால், வெண்ணெய் நல்ல சாய்ஸ்.
உடலுக்கு ஊட்டம் அளிக்கும் நெய் மற்றும் வெண்ணெய் எதுவாக இருந்தாலும் குறைந்த அளவு பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு சிறந்தது.