நரம்பியல் விஞ்ஞானி பகீர் எச்சரிக்கை..! கையால் எழுதுங்கள்; இல்லையெனில் உங்கள் மூளை மங்கிவிடும்..!

கீபோர்டில் டைப் செய்வதால் சோம்பேறியாகும் மூளை; கைகளால் எழுதுவதால் பெருகும் அதீத நினைவாற்றல்!
கையால் எழுதுவது
கையால் எழுதுவது
Updated on

கையால் எழுதுங்கள் இல்லை என்றால் மூளை மழுங்கிவிடும் ஆபத்து இருப்பதாக புதிய ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.குறிப்பாக புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானி ஆட்ரி வான் டெர் மீர் ஆய்வின்படி, எழுதுவது நினைவாற்றல் மற்றும் கற்றல் மையங்களை ஒன்றிணைக்கிறது ; மாறாக,கீ போர்டில் டைப் செய்வது மூளையை ஆட்டோ பைலட் முறையில் சோம்பேறி ஆக்குகிறது என தற்போது கூறியுள்ளது உளவியல் ரீதியாக பெரும் கவனம் பெற்று வருகிறது.

ஆட்ரி வான் டெர் மீர் (Audrey van der Meer) நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTNU) புகழ்பெற்ற நரம்பியல் உளவியல் (Neuropsychology) பேராசிரியர் ஆவார். மனித வளர்ச்சியை வாழ்நாள் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யும் இவர் வளர்ச்சி, கற்றல் மற்றும் அறிவாற்றல் முதுமை ஆகியவற்றை வழிநடத்தும் அடிப்படை கொள்கைகளை பற்றிய சிறந்த புரிதல், கற்றலை எளிதாக்கவும் சிக்கல்களை தடுக்கவும் உதவும் செயல் முறைகளை ஆய்வு செய்து வருகிறார்.குறிப்பாக, 0-3 வயதுக்குட்பட்ட, வேகமாக வளரும் மற்றும் மிகுந்த நெகிழ்வுத்தன்மையையும் கற்றலுக்கான மகத்தான ஆற்றலையும் கொண்ட பச்சிளங்குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறித்த இவரது ஆய்வுகள் உலகளவில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.

இவர் தான் இந்த எச்சரிக்கையைத் தந்துள்ளார். தற்போது வயது பாகுபாடின்றி அனைவரும் அனைத்து விபரங்களையும் கணினி உதவியுடன் கற்றும் பெற்றும் வருகிறோம். கணினி இல்லாமல் எந்த துறையிலும் தற்போது பணிகள் இல்லை என்பதுதான் உண்மை.சமீப காலமாக பள்ளி குழந்தைகள் கூட கைகளால் எழுத சோம்பல் பட்டு கணினி உதவியுடன் பாடங்களை அச்சில் பிரிண்ட் எடுத்து படிக்கின்றனர். ஆனால் இதனால் வரும் தீய விளைவைத் தான் இந்த விஞ்ஞானி சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆம், கணினியில் தட்டச்சு செய்வதை விட, கையால் எழுதுவது மூளையின் பல பகுதிகளை இணைத்து, ஆழமான கற்றலுக்கும் அதீத நினைவாற்றலுக்கும் உதவுகிறது என்பதை நரம்பியல் சோதனைகள் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். அவரது ஆய்வுகளின் படி கையால் எழுதும் போது அல்லது வரையும் போது, மூளையின் பல்வேறு பகுதிகள் ஒத்திசைந்து அதிகமாக செயல்படுவதாகவும் இது புதிய தகவல்களைப் புரிந்துகொள்ளவும், நீண்டகால நினைவாற்றலை உருவாக்கவும் உதவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் விசைப்பலகையில் எனப்படும் கீபோர்டில் தட்டச்சு செய்யும் போது, விரல்கள் ஒரே மாதிரியான எளிய அசைவுகளை மட்டுமே செய்கின்றன. இதனால், மூளையின் கற்றல் மையங்கள் பெரியளவில் தூண்டப்படுவதில்லை எனவும் அவரது ஆய்வுகள் கூறுகின்றன.

தனது ஆய்வில் பங்கேற்றவர்களின் மூளையின் மின் செயல்பாடுகளை மின்முனை வரைவி (EEG) சோதனை மூலம் பதிவு செய்ததன் மூலம், கையெழுத்து மூளையில் பரவலான நரம்பியல் இணைப்புகளை உருவாக்குகிறது என்பதை ஆட்ரி மற்றும் அவரது கணவர் ரூட் வான் டெர் வீல் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

கல்வியிலும் டிஜிட்டல் மயமான இன்றைய காலகட்டத்தில், பள்ளிகளில் குழந்தைகள் கையால் எழுதுவதைப் குறிப்பாக குறிப்பேடுகளில் எழுதுவது புறக்கணிக்கக் கூடாது என்றும், இது சிறந்த மூளை வளர்ச்சிக்கு அவசியமானது என்றும் அவர் எச்சரிக்கிறார். கையில் எழுதப்படும் விதங்களில் வகுப்பில் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு பாடங்களை எடுக்க வேண்டும் என இன்றைய கல்வி முறைக்கு அறிவுரை தந்துள்ளார்.

அந்தக் காலத்தில் நமது தாத்தா பாட்டி கண்ணாடி போடாமலேயே கைகளால் தங்கள் சிறு நோட்டில் அவ்வப்போது மாதாந்திர செலவுகள் மற்றும் குறிப்புகளை எழுதி வைப்பதைப் பார்த்திருப்போம். எப்போது கேட்டாலும் புள்ளிவிபரங்களை அவர்கள் தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கும் ஞாபகசக்தி நமக்கு ஆச்சரியம் தந்த ஒன்று. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் லேப்டாப் உபயோகிக்காமல் இருந்தது தான். இன்றைய சூழலில் மடிக்கணினி அவசியம் என்றாலும், எழுதுவதற்கு கைகளை பயன்படுத்துவது மூளைக்கு மிகவும் நல்லது.

Source Link : https://www.charlotteobserver.com/living/article315907012.html

Typing vs writing facts
Typing vs writing facts

கைகளால் எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள் :

  • கையால் எழுதுவது வெறும் எழுத்து மட்டும் அல்ல. அது நினைவாற்றல், சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் ஒரு பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள்.

  • கைகளால் எழுதும்போது மூளை அதிகமாக செயல்படுகிறது.படித்த விஷயங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது.. குறிப்பாக நினைவாற்றலை மேம்படுத்தும் என்பதால் மாணவர்களுக்கு பாடங்களைப் புரிந்துகொள்வதிலும் மனப்பாடம் செய்வதிலும் உதவுகிறது.

  • எழுதும் செயலில் முழு கவனமும் ஈடுபடுவதால் கவனச்சிதறல் குறைகிறது.சிந்தனைகளை ஒழுங்குபடுத்தும் திறன் வளர்கிறது. குறிப்புகள் எடுப்பது தகவல்களை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. எழுதிக்கொண்டு படிப்பது கற்றலை வலுப்படுத்துகிறது. நல்ல கற்றல் திறனை உயர்த்தும்.

  • கையால் எழுதுவது கற்பனை வளம் மிக்கவரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும். கதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை கையால் எழுதும்போது புதிய சிந்தனைகள் உருவாக வாய்ப்புள்ளது. முக்கியமாக சுய நம்பிக்கையை மேம்படுத்துகிறது.

  • எழுதும் போது கை மற்றும் கண்கள் இணைந்து செயல்படுவதால் நரம்பு மற்றும் தசை இயக்கங்கள் மேம்படுகின்றன. மாணவர்களின் நுண்திறன் வளர்ச்சிக்கு உதவுகிறது.

  • அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை தினசரி குறிப்புகளாக எழுதுவது மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவதுடன் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

  • நினைவில் வார்த்தைகளைக் கோர்த்து நிதானமாக எழுதுவது எழுத்துத் திறனை மேம்படுத்தும். சொற்களஞ்சியம், இலக்கணம் மற்றும் மொழித்திறன் வளர உதவுகிறது. முக்கியமாக தெளிவாகவும் அழகாகவும் எழுதும் கையெழுத்துப் பழக்கம் உருவாகிறது.

மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் :

தொடர்ந்து எழுதும் பழக்கம் மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது.வயது முதிர்வில் நினைவாற்றல் குறைபாட்டை தாமதப்படுத்த உதவலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையே மேலே குறிப்பிட்ட விஞ்ஞானி ஆட்ரி வான் டெர் மீரும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இனி லேப்டாப்புக்கு விடுதலை தந்து பேனாவை எடுத்து தினமும் 10–15 நிமிடங்களாவது கைகளால் எழுதும் பழக்கத்தை பிள்ளைகள் முதல் நாமும் வளர்த்துக்கொள்வது எதிர்கால ஆரோக்கியத்துக்கு நல்லது.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
கையால் எழுதுவது
logo
Kalki Online
kalkionline.com