
பெரும்பாலும் ஒரு மனிதனுக்கு ஒன்றிலிருந்து இருபது வயது வரை கவலையில்லா வாழ்க்கையாக அமையும். இருபத்தி ஒன்றிலிருந்து நாற்பது வயதுவரை பெரும்பாலும் பல கஷ்டங்களைத் தாண்டிக் கடக்க வேண்டியதிருக்கும். நாற்பது வயது முதல் அறுபது வயது வரை பல கடமைகளை நிறைவேற்றிய கட்டாயத்தில் இருப்பர்.
நாற்பது வயதில் வீடு கட்டுதல், பிள்ளைகளைப் படிக்க வைத்தல், பின்னர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தல் என வரிசையாக கடமைகள் காத்திருக்கும். இத்தகைய கடமைகளை சுறுசுறுப்பாக நிறைவேற்ற நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஆண் பெண் என இருபாலருக்கும் நாற்பது வயதைக் கடந்ததும் ஒவ்வொரு வியாதியாக எட்டிப் பார்க்கத் தொடங்கும். முதலில் நம்மிடம் நட்புக்கரத்தை நீட்டத் துடிக்கும் வியாதி சர்க்கரை நோய். அடுத்து அலுவலகம் மற்றும் வீட்டில் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்திப்பதன் மூலம் நம்மைத் தேடி வரும் மற்றொரு வியாதி விருந்தாளி இரத்தக்கொதிப்பு. இவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் நமக்கு முதல் எதிரிகள் என்பதை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு எதிரிகளையும் நம்மை நெருங்கவிடாமல் தடுப்பதன் மூலம் ஒருவர் மாரடைப்பைத் தவிர்த்து விடலாம்.
நாற்பது வயதை நெருங்கியதும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது இரத்தஅழுத்தம் (Blood Pressure), நீரிழிவு நோய் ((Diabetes) அதாவது சர்க்கரை வியாதி, லிப்பிட் புரொபைல் (Lipid Profile Test) எனப்படும் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கண்டறியும் சோதனை. இந்த மூன்றையும் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும். நமக்குத்தான் ஒன்றுமில்லையே என நினைத்து அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து இத்தகைய சோதனைகளைச் செய்து கொள்ள இருப்பதாகக் கூறினால் அவரே இரத்த அழுத்த சோதனையைச் செய்து விடுவார். நீரிழிவு நோய் மற்றும் கெட்ட கொழுப்பை கண்டறியும் சோதனைகளை எழுதித் தருவார். மேலும் தேவைப்படும் இதர சோதனைகளையும் செய்யச் சொல்லி அறிவுறுத்துவார். இத்தகைய சோதனைகளை உங்கள் அருகில் உள்ள இரத்த பரிசோதனை மையத்தில் செய்து கொள்ளலாம்.
பரிசோதனை முடிவுகளை மீண்டும் மருத்துவரை சந்தித்துக் காண்பித்தால் அந்த முடிவுகளின் அடிப்படையில் அவர் உங்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்குவார். எந்த ஒரு பிரச்சினையையும் தொடக்கத்தில கண்டறிந்து தீர்வு காண்பதே சிறந்த செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய சோதனைகளைச் செய்ய அதிக செலவும் ஆகாது.
நாற்பது வயதுக்குப் பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய சோதனைகளை ஒருவர் கண்டிப்பாகச் செய்து தம் உடல்நலத்தைப் பற்றி அறிந்து அதற்கேற்றாற் போல உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது.
நாற்பது வயதை நெருங்கியதும் காலையில் நடைபயிற்சியை மேற்கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள். இது எல்லாவிதமான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும். எண்ணெயில் செய்த உணவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை அல்லது உங்களுக்கான வார விடுமுறை அன்று உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சிகரமாக பொழுதைக் கழியுங்கள். இது உங்கள் குடும்பத்திரை மகிழ்ச்சி அடையச் செய்யும். உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த மகிழ்ச்சி உங்களையும் வந்தடையும். மகிழ்ச்சிகரமாக வாழ்ந்தால் வியாதிகள் உங்களை நெருங்க பயப்படும் என்பதும் உண்மை.
நாற்பது வயதைக் கடந்ததும் சோம்பல்படாமல் பயப்படாமல் மேற்காணும் சோதனைகளை உங்கள் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசித்து செய்யுங்கள். வந்த பின்னால் அவதியுறுவதை விட வருமுன் காப்பது சிறந்ததல்லவா ?