தினமும் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதால் என்ன ஆகும் தெரியுமா?

தினமும் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதால் என்ன ஆகும் தெரியுமா?

டைப்பயிற்சி தினசரி வாழ்க்கையில் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று. உடல் எடையை குறைப்பதற்காகத்தான் நடைப்பயிற்சி என்ற கருத்து மாறி, உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள தினசரி உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிற புரிதலுக்கு வந்துவிட்டோம். ஒரு நாளில் எவ்வளவு தொலைவு நடக்க வேண்டும், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும், வேகமாக நடக்க வேண்டுமா, மெதுவாக நடக்க வேண்டுமா? போன்ற பல சந்தேகங்கள் நடைப்பயிற்சி குறித்து இருக்கின்றன.

10,000 ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி: ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி செய்வது நிறைய ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன. குறிப்பாக, உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் நினைப்பவர்கள் 10,000 ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அப்படி நடக்கும்போது நம்முடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்.

மனதை உற்சாகப்படுத்தும்: ஆரம்ப நாட்களில் தினமும் 10000 ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது கொஞ்சம் சிரமமானதாகத் தோன்றலாம். ஆனால், நடக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்முடைய மனதுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அந்த உற்சாகத்திலேயே அடுத்தடுத்த நாட்கள் இன்னும் விரைவாக நடக்கத் தொடங்கலாம். ஒரு நாள் நீங்கள் சோர்வாக உணர்ந்தாலும் உங்களுடைய மனசே உங்களை நடப்பதற்கு உசுப்பி விடும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: தினசரி உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும்போது நம்முடைய ரத்தத்தில் ஆக்சிஜனேற்றப் பண்புகள் அதிகரிக்கச் செய்யும். தசை மற்றும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். இதயத்திற்கு ஆக்சிஜனும் ரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். இதனால், இதய ஆரோக்கியம் மேம்படும்.

நுரையீரலை வலுப்படுத்தும்: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் தொலைவு நடைப்பயிற்சி செய்வது நம்முடைய நுரையீரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த உதவும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவும் அடர்த்தியும் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுவாசிப்பது எளிதாகும். இதனால் இயல்பாகவே உடலின் இயல்திறன்கள் அதிகரிக்கும்.

கவனச் சிதறலைக் குறைக்கும்: நம்முடைய உடல் செயல்பாடுகள் அதிகரிக்கும் போது, உடல் சுறுசுறுப்படையும். கவனச் சிதறல் பிரச்னை உள்ளவர்களுக்கு அந்த பிரச்னை சரியாக ஆரம்பிக்கும். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு வரை நடக்கும்போது நம்முடைய மூளைக்கு செல்லும் நரம்புகள் சுறுசுறுப்படையும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைத்து நினைவுத் திறனை மேம்படுத்த உதவும். மூளை ஆக்டிவ்வாக செயல்படும்.

எலும்புகளை உறுதியாக்கும்: தினசரி உடற்பயிற்சி, குறிப்பாக நடைப்பயிற்சி, ஜாகிங் உள்ளிட்டவை நம்முடைய எலும்புகளுக்கு கூடுதலாக ஒருவித அழுத்தம் கொடுக்கும். அப்படி கொடுப்பதன் மூலம் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொண்டால் எலும்புகள் உறுதியாகி ஆஸ்டிரியோபொராசிஸ் போன்ற பிரச்னைகளைக் குறைக்கும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும்: நமது உடல் சுறுசுறுப்பாக இருக்கும்போது, உடற்பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு அதிகப்படியான அளவு குளுக்கோஸ் தேவைப்படும். ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சி தசைகளுக்கு ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவை வராமல் தடுக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்யும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்: தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய உடல் இலகுவாக இருக்கும். இதனால் கார்டிசோல் ஹர்மோன் உற்பத்தி குறைந்து மன அழுத்தம் வராமல் தடுக்க முடியும். குறிப்பாக 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரைக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்முடைய உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.

உடல் எடையை குறைக்கும்: உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நிறைய பேர் நடைப்பயிற்சி செய்தும் எடை குறையவில்லை என்று கூறுவார்கள். அதற்குக் காரணம் எவ்வளவு வேகத்தில் நடக்கிறோம், எவ்வளவு தொலைவு நடக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீண்ட தொலைவு நடக்கும்போதுதான் அதிகப்படியான கலோரிகளை எரிக்க முடியும். வேகமாக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com