மன நலம் காக்க மகத்தான நான்கு வழிகள்!

மன நலம் காக்க மகத்தான நான்கு வழிகள்!

ற்காலத்தில் உடல் நிலையைக் காட்டிலும் மனநிலை என்பது மனிதர்களுக்கு அவ்வளவு சீராக இல்லை. காரணம், குடும்பப் பிரச்னைகள், பணியிடப் பிரச்னைகள், சுற்றுப்புறச் சூழல் பிரச்னைகள் எனப் பல தரப்பட்ட பிரச்னைகள்தான். இந்த மாதிரியான மன பிரச்னைகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான வழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. குடும்பத்தினர், நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிடுங்கள்: ஒவ்வொருவருக்கும் தனியாகச் சிறிது நேரம் தேவைதான். ஆனால், மற்றவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதும் மிக மிக அவசியம். நீங்கள் தனிமையாக உணர்ந்தால், தன்னார்வத்துடன் பொதுச்சேவை செய்ய முயற்சிக்கவும். புதிய நபர்களைச் சந்திப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். மற்றவர்களுக்கு உதவுவதால் நீங்கள் நன்றாக உணர்வீர்கள். அடுத்து, உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்தால், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், உங்கள் உடல்நிலையும் ஆரோக்கியமும் நன்றாக உள்ளதா? உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி அவர்களிடம் அதிகமாகப் பேசவும். உங்களை ஆதரிக்கும்படி அவர்களிடம் கேட்கவும். மனம் விட்டுப் பேசவும். இப்படி யாரிடமாவது மனம்விட்டு பேசும்போது, அது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

2. கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி உடலுக்கு நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அது உங்கள் மன ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா? வழக்கமான உடற்பயிற்சி உண்மையில் கவலை மற்றும் மனச்சோர்வைச் சமாளிக்க உதவும். அதனால், மன அழுத்தம் குறைகிறது. பூங்காவிலோ அல்லது பசுமை சூழ்ந்த இடங்களிலோ, கடற்கரையை ஒட்டியோ நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இயற்கையோடு ஒன்றி, நமது மன ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்ள முடியும்.

3. உணவு முறை: உங்கள் உணவு முறையும் உங்கள் மனநிலையை மாற்றும். துரித உணவு, கேக், சாக்லேட் போன்றவற்றைச் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் மனம் சோர்வாக இருக்கும். நீங்கள் போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுவதால் உடல் நலமாகும். உள் மனமும் சீராகும். தாகமாக இருந்தால் தெளிவாகச் சிந்திப்பது கடினமாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் மனநலத்துக்கு முக்கியம்.

4. பணியிடத்தில் மனநலம்: இன்றைய காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான காரணம் பணியிடத்தில் ஏற்படும் பணிச்சுமைதான். இதனால் பலர் இறக்கும் தருவாய் வரைக்கும் செல்கின்றனர். இதனைத் தடுக்க நல்ல மன ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சூழலை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அவ்வப்போது ஓய்வு மற்றும் விடுமுறைகளை எடுக்க ஊக்குவிப்பதன் மூலம், பணியாளர்கள் நல்ல வேலை - வாழ்க்கை சமநிலையை (Work-Life Balance) பெற்று, நல்ல மனநிலை அடையப் பெறுகிறார்கள். பணியாளர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும். தங்கள் ஒரு நாளையப் பணியை நல்ல வகையில் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுத்தி தங்கள் வேலை பளுவை குறைத்துக்கொள்ள வேண்டும். முதலாளிகளும் பணியாளர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து ஆதரவாக இருந்தால் இரு தரப்பிலும் மனநலம் காக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com