நம் வீடுகளில் தினமும் பல்வேறு பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். பல பொருட்கள் வெளிப்பார்வைக்கு நல்ல நிலையில் இருப்பது போலத் தோன்றும். ஆனால் அவற்றை எப்போது மாற்ற வேண்டும் என்பதில் பலருக்கும் சரியான விழிப்புணர்வு இருப்பதில்லை. நீண்ட காலம் ஒரே பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துவது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே, நோய்களைத் தவிர்க்க நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமது அன்றாட வாழ்வில் சுகாதார பராமரிப்பு மிகவும் அவசியம். குறிப்பாக நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ், தலை சீவும் சீப்பு மற்றும் தூங்கும் தலையணை ஆகிய மூன்று பொருட்களையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டாயம் மாற்ற வேண்டும்.
பற்களைப் பாதுகாக்கும் டூத் பிரஷ்!
நமது பற்களை சுத்தம் செய்யப் பயன்படும் பிரஷ்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்ற வேண்டும். பல் மருத்துவர்களின் அறிவுரைப்படி சாதாரண டூத் பிரஷ் மற்றும் எலக்ட்ரிக் பிரஷ்களை 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். பிரஷ்ஷின் இழைகள் வளைந்து விரிந்திருந்தால் பற்களில் உள்ள அழுக்குகளை முழுமையாகச் சுத்தம் செய்ய முடியாது. பற்களின் இடுக்குகளில் அழுக்கு அப்படியே தங்கிவிடும். இது ஈறுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் காய்ச்சல், சளி அல்லது தொண்டை வலி வந்து குணமானவுடன் பழைய பிரஷ்ஷை உடனடியாக வீசிவிட வேண்டும். பழைய பிரஷ்ஷை மீண்டும் பயன்படுத்தினால் அதில் தங்கியிருக்கும் கிருமிகள் மீண்டும் உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. சிறு குழந்தைகள் பிரஷ்ஷை மிகவும் அழுத்தித் தேய்ப்பார்கள். இதனால் பிரஷ் சீக்கிரமாகவே வளைந்துவிடும். எனவே குழந்தைகளுக்கு 2 முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை புதிய பிரஷ் வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறந்தது.
தலைமுடியைப் பராமரிக்கும் சீப்பு!
நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சீப்புகள் மற்றும் ஹேர் பிரஷ்களை 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்ல பழக்கம். சீப்பின் பற்கள் உடைந்தாலோ அல்லது நுனிப்பகுதி மிகவும் கூர்மையாக மாறினாலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. உடைந்த சீப்பைப் பயன்படுத்தும்போது உச்சந்தலையில் காயங்கள் ஏற்படுவதுடன் முடி உதிர்வும் அதிகரிக்கும்.
சீப்பில் தங்கும் அழுக்குகளைத் தொடர்ந்து அடிக்கடி சுத்தம் செய்வது கட்டாயமான ஒரு விஷயமாகும். சீப்பில் படிந்துள்ள எண்ணெய் பசை மற்றும் பொடுகை நீக்க வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மைல்டு ஷாம்பூ கலந்து நன்றாகக் கழுவ வேண்டும். சாதாரண பிளாஸ்டிக் சீப்புகளுக்குப் பதிலாகச் சந்தையில் கிடைக்கும் தரமான மரச் சீப்புகளைப் பயன்படுத்தினால் அவை 2 முதல் 3 ஆண்டுகள் வரை உழைக்கும்.
நிம்மதியான தூக்கத்தைத் தரும் தலையணை!
நாம் தினமும் இரவில் தூங்கும் தலையணைகளை 1 முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தலையணையின் ஆயுட்காலம் அதன் வகையைப் பொறுத்து மாறுபடும். பாலியஸ்டர் மற்றும் பஞ்சு தலையணைகள் பயன்படுத்த ஆரம்பித்த சில மாதங்களிலேயே சீக்கிரமாகத் தட்டையாகிவிடும். கழுத்து வலியைத் தவிர்க்க அவற்றை 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்குள் மாற்றிவிட வேண்டும். அதேசமயம் மெமரி ஃபோம் மற்றும் லேடெக்ஸ் தலையணைகள் நீண்ட காலம் வடிவம் மாறாமல் உழைக்கும்.
இவற்றை 2 முதல் 4 ஆண்டுகள் வரை தாராளமாக பயன்படுத்தலாம். நீண்ட காலம் பயன்படுத்தும் தலையணைகளில் வியர்வை, இறந்த சரும செல்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத தூசிப் பூச்சிகள் அதிக அளவில் சேரும். இது முகத்தில் முகப்பரு, ஒவ்வாமை, தும்மல் போன்ற தேவையற்ற சுவாசப் பிரச்சனைகளை அதிக அளவில் உண்டாக்கும்.
தலையணை உறையை வாரம் ஒருமுறை தவறாமல் துவைக்க வேண்டும். தலையணையை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை துவைத்து நல்ல வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
Disclaimer: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference