தினமும் நாம் கடைகளில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு அருந்துவதை விட இளநீர் குடிப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். பழச்சாறுகளில் அதிக சர்க்கரை அளவு இருப்பது, பின்னர் கொழுப்பாக மாறத் தொடங்கும். கார்பனேட் சேர்க்கப்பட்ட பானங்கள் வயிறை புண்ணாக்கும். சில நேரம் புற்றுநோயையும் கொண்டு வரும். சர்க்கரை நோயையும் விரைவிலேயே கொண்டு வந்து விடும். இளநீரில் உள்ள சர்க்கரை அளவு மற்றவற்றை விட குறைவு தான்.
தினசரி இளநீர் குடிப்பதும், நல்ல ஆரோக்கியமான நிலையை தரும். தாகத்தையும் களைப்பையும் போக்கி உடனடியாக புத்துணர்ச்சியை கொடுக்கும் பானம் தான் இயற்கையாக கிடைக்கும் இளநீர். 100 மிலி இளநீரில் 90 சதவீதம் தண்ணீர். இது தவிர, இதில் 0.9 கிராம் கொழுப்பு, 0.6 கிராம் உப்பு, 6.3 கிராம் மாவுச்சத்து உள்ளது. ஒரு கிளாஸ் இளநீரில் அரை கிளாஸ் பாலின் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மற்ற பானங்களை விட இளநீர் வேகமாக தாகத்தை தணித்து, சோர்வை போக்குகிறது. செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. உடல் இளைக்க தினசரி இளநீர் பருகி வரலாம். மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும். அதோடு மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள், முதல் நாள் இரவில் இளநீர் மேல் தோலை சீவி விட்டு, அதை அப்படியே தண்ணீரில் போட்டு மறுநாள் காலை குடிப்பது, மஞ்சள் காமாலை நோயை போக்கும் மருந்துகளில் ஒன்றாக கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இளநீரில் உள்ள குளுக்கோஸ் களைப்பை உடனடியாக நீக்கும். குளுக்கோஸ் பானங்களை விட சர்க்கரை அளவு இளநீரில் குறைவுதான். மேலும் இதில் உள்ள வைட்டமின் பி முடி வளர்ச்சியிலும், காயத்தினை ஆற்றவும் உதவுகிறது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் சிறந்தது. மேலும் இதில் வைட்டமின் சி, கால்சியம், மக்னீசியம் போன்ற தேவையான சத்துக்களும் உள்ளன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது, தொடர்ந்து இளநீர் உட்கொள்வது நோயிலிருந்து விடுபட உதவும். இளநீர் சூட்டை குறைத்து எரிச்சல் இல்லாமல் சிறுநீர் வெளியேற உதவும். இளநீரில் முகம் கூட கழுவலாம். மூல நோயாளிகளின் உடல் சூட்டை குறைத்து நோயிலிருந்து விடுபட வைக்கிறது. மூளை நரம்பை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இளநீர் குடியுங்கள்.
பொதுவாக இளநீரில் நிறைய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள சர்க்கரை மற்ற பானங்களில் உள்ளதை விட குறைவு தான் என்றாலும், உடனடியாக குளுக்கோஸை ஏற்றும் இதன் தன்மையால் அதிக சர்க்கரை உள்ளவர்கள் இளநீரை தவிர்க்க வேண்டும். அது போல ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இளநீர் குடித்தால் சளி, இருமலை உண்டாக்கும். நுரையீரல் பிரச்சனை, ஆஸ்த்துமா தொல்லை, அதிக சளி, இருமல் உள்ளவர்கள் இளநீரை தவிர்ப்பது நல்லது.