காபி குடிக்காமல் தினசரி வேலைகளை ஆரம்பிப்பது பலருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயம். அதேபோல் ஜிம்முக்குப் போய் பல வகையான உடற்பயிற்சி செய்பவர்கள் பயிற்சியை ஆரம்பிக்கும் முன்பு தொடர் சக்தி பெறவும் ஸ்டெமினாவை அதிகரிக்கச் செய்யவும் வாழைப்பழம் காபி போன்ற சக்தி அளிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது வழக்கம்.
அந்த மாதிரி நேரங்களில் பால் சேர்த்து வழக்கமான முறையில் தயாரிக்கப்படும் காபிக்குப் பதில் பிளாக் காபியில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து அருந்துவது பயிற்சிக்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டிய மிகச் சரியான உணவு எனக் கூறப்படுகிறது. அது எவ்வாறு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. காபியில் அதிகளவில் நிறைந்துள்ள காஃபினானது, உடலின் மெட்டபாலிஸ அளவு அதிகரிக்கவும், கொழுப்புகளை எரிக்கவும், உடற்பயிற்சியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் சகிப்புத் தன்மையை வளர்க்கவும் உதவி புரிவதாகும். இதன் மூலம் உடல் எடையை சம நிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.
2. பிளாக் காபியில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கும்போது பிளாக் காபியில் உள்ள கசப்புத்தன்மை குறையும். மேலும், அதிலுள்ள எலக்ட்ரோலைட்களின் அளவும் சமநிலை பெறும். இதனால் நீண்ட நேரப் பயிற்சிக்குத் தேவையான சக்தி கிடைக்கும்; உடலில் பிடிப்புகள் ஏற்படும் அபாயமும் நீங்கும்.
3. உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன்பு இந்த பானம் அருந்துவதால் உடலின் நீர்சத்து அதிகரிக்கும். பயிற்சியை முழு முனைப்புடனும் சகிப்புத்தன்மையுடனும் சோர்வின்றி தொடர முடியும்.
4. காபியில் கலக்கப்படும் உப்பானது உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும். இதனால் பயிற்சியின்போது டீஹைட்ரேஷன் ஆகும் வாய்ப்பு குறையும். சோர்வின்றி, மேம்பட்ட தரத்துடன் பயிற்சியை செய்து முடிக்க முடியும்.
5. உபயோகிக்கும் உப்பிலிருந்து அதிகளவு கனிமச் சத்துக்களைப் பெற ஹிமாலயன் பிங்க் சால்ட் அல்லது கடல் உப்பை உபயோகிப்பது நல்லது. இந்தக் காபியை அதிகளவில் அருந்துவதும் ஆரோக்கியக் கேடுகளையே உண்டுபண்ணும். அளவுக்கு அதிகமான காஃபின் பதற்றத்தை உண்டுபண்ணி இதயத் துடிப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும். உடலில் நீர்ச்சத்து குறையவும் வாய்ப்பளிக்கும். மாடரேஷன் ஈஸ் கீ (Moderation is key) என்ற தத்துவத்தைப் பின்பற்றுவதே புத்திசாலித்தனம்.
6. காஃபினிலிருந்து கிடைக்கும் நன்மைகளை முழுமையாகப் பெற உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பே இந்த காபியைக் குடித்து விடுவது நலம்.
7. தனிப்பட்ட நபரின் தாங்கும் சக்தி மற்றும் உடல் எடை ஆகியவற்றின் அடிப்படையில் உட்கொள்ளும் காஃபின் அளவு ஒரு பவுண்டு எடைக்கு 0.9 மில்லி கிராம் முதல் 2.7 மில்லி கிராம் வரை இருக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
8. காஃபின் அல்லது சால்ட் சென்சிட்டிவிட்டி உடையவர்கள் மருத்துவ நோக்கில் அவர்கள் உடலுக்கு இக்கலவை கொண்டு தயாரிக்கப்படும் காபி எவ்வளவு தேவைப்படும் என்ற விவரங்களை மருத்துவரை கலந்து பேசி முடிவெடுப்பது நன்மை தரும்.