

சுக்கு பல்வேறு உடல் நல பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவ பொருள். அவற்றினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
இஞ்சியை சுண்ணாம்பு நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்துகிறார்கள். அப்படி காய்ந்த இஞ்சியே சுக்கு ஆகிறது.
வீட்டு வைத்தியத்துக்கு உதவும் மருந்து சரக்குகளில் சுக்கு முதலிடம் பெறுகிறது. இது சுலபமாகக் கடைகளில் கிடைக்கிறது. எப்போதும் வீடுகளில் இருப்பது; எச்சமயத்திலும் முதல் உதவிக்கு உதவும் மருந்து என்று சுக்கைக் கூறலாம்.
பித்தம்:
சிலருக்கு பித்தம் அடிக்கடி தலை தூக்கும். தலைவலி, உடம்பில் வலி, தலை சுற்றல், வாந்தி, பேதி முதலியன ஏற்படும். உடம்பில் ஓச்சல் அதிகமாக இருக்கும். சுக்குப் பொடியை தேனில் குழைத்தோ, சர்க்கரையில் கலந்தோ உட்கொண்டால் நோய் தீரும்.
வயிற்று நோய்:
சாப்பிடும் பொருட்களில் சிறு சுக்குப் பொடியை கலந்தால் உணவு ஜீரணமாக உதவும். வயிற்று வலி இருந்தால் அடியோடு மறைந்துவிடும்.
அஜீரணம்:
சுக்கு உணவில் ஜீரணத்தை தூண்டுவதால் பேதிக்கு மருந்து சாப்பிடும் போது சுக்கு கசாயத்தை அனுபானமாக சாப்பிடுவது உண்டு. மிளகு ரசத்திலும் சிறிது சுக்கை சேர்க்கலாம்.
தலை நோய்:
தலைவலி கடுமையாக இருந்தாலும் கூட தண்ணீர் விட்டு சுக்கை உரைத்து பொட்டுகளில் தடவினால் சரியாகும்.
கக்குவான் இருமல்:
சுக்கை உப்பு நீரில் / இந்துப்பு நீரில் அரை மணி நேரம் ஊறவைத்தபின் தணலில் இட்டு சுட வேண்டும். பிறகு சுக்கின் மேல் தோலை அகற்றி எடுத்துவிட்டு உட்பகுதியை பொடி செய்து தினந்தோறும் அதிகாலையில் உட்கொண்டு வந்தால் கக்குவான், இருமல் முதலாக எல்லா வித இருமல்களும் குணமாகும்.
பேதிகள்:
எந்தவிதமான பேதியானாலும் பசுமோரில் அரைத்த சுக்கினை ஒரு ஸ்பூன் அளவு கலந்து தினந்தோறும் இரண்டு முறை உட்கொண்டால் நின்று விடும்.
குளிர் ஜூரம்:
மிளகு, கிராம்பு, பொரித்த வெண்காரம் இவற்றை சம பாகம் சேர்த்து பொடி செய்து தேன் கலந்து மாத்திரை செய்து தினந்தோறும் மூன்று மாத்திரைகள் உட்கொண்டால் குளிர் சுரம் நீங்கும்.
விக்கல்:
சுக்குப்பொடியை தேனில் கலந்து விக்கல் வந்த சமயத்தில் கொடுத்தால் தொடர் விக்கல் நின்று விடும்.
முகப்பருக்கள்:
பருக்களின் மேல் சுக்கு விழுதை அடிக்கடி தடவினால் சில நாட்களில் பருக்கள் மறைந்து விடும்.
வீக்கம், கீழ் வாயுக்கள்:
உடலில் எந்த பாகத்திலாவது வீக்கமோ கீழ்வாயுவோ தொந்தரவு செய்தால் சுக்கை அரைத்து தடவி சூடு காண்பித்தால் அந்த நோய் நீங்கிவிடும்.
தேள் கொட்டு:
அரைத்த சுக்கு விழுதை தேள் கொட்டுவாயில் தடவி நெருப்பு சூடு காட்டினால் தேள் விஷம் நீங்கும்.
சுக்கு கசாயம்:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் சுக்கு பொடியை கொதிக்க விட்டு இறக்கவும் இதுதான் சுக்கு கசாயம்.
ஒரு பெரிய டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சுக்குப்பொடியை சேர்த்து இதில் சிறிது பாலும், சர்க்கரையும் கலந்து தினம் காப்பிக்கு பதிலாக போட்டு அருந்தி வந்தால் சில மாதங்கள் சாப்பிட்டபின் இதன் பயன் தெரியும். இதனால் கண்கள் தெளிவு பெறும். ஜீரண சக்தி, மிகவும் மந்தம், அஜீரணம், வாதம், வயிற்று நோய், குளிர் ஜுரம், மலச்சிக்கல், மூலநோய், வயிற்றில் கட்டி முதலிய நோய்கள் நீங்கும் மற்றும் யானைக்கால் வியாதி தொடங்கும் பொழுதே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அந்த நோயிலும் தப்பலாம்.
சரியாக கசாயத்தை உபயோகித்து வந்தால் இனம் தெரியாத பல நோய்கள் தீருவதுடன் உடலில் நோய் வராமலே பாதுகாக்கலாம். சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் முதன்மை பெற்றதால் "சுக்கிற்கு மிஞ்சின வைத்தியம் இல்லை" என்ற முதுமொழியே இதற்கு சான்று பகிர்கிறது.
சுக்கு சூரணம்:
நன்கு இடித்த சுக்கு பொடி கால் டம்ளர் எடுத்து, ஒரு டம்ளர் புளித்த தயிரில் கலந்து வெயிலில் நன்றாக உலர்த்தவும். அதனுடன் மிளகு, அரிசி திப்பிலி, இந்துப்பு, சீரகம் அனைத்தையும் கால் டம்ளர் அளவும் பெருங்காயம் சிறிதளவு எடுத்து பொரித்து நன்றாக பொடித்து, அவற்றை இதனுடன் கலந்து தினசரி காலை, மாலை ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர வயிற்று உபாதைகள் அனைத்தும் நீங்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)