
அன்று எந்த உடல் பாதிப்பு என்றாலும் சமையலறையில் உள்ள சீரகம் , மிளகு, மஞ்சள் என எல்லா மசாலா பொருள்களும் பாட்டி வைத்தியமாக நமது வலிகளை போக்கியது. அந்த வரிசையில் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்ற 'மேஜிக்கல் சீட்ஸ்' அதாவது 'மாயவிதை'களாக உள்ளது வெந்தயம்.
வெறும் வயிற்று வலி மட்டுமல்ல... அதையும் விட பெரிய உடல் நலப்பிரச்சினைகளுக்கும் முறையாக பயன்படுத்தினால் நல்லதொரு தீர்வாகிறது முளைகட்டிய வெந்தயம். என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு தீர்வு என இங்கு காண்போம்.
முளை கட்டிய வெந்தயம்
வெந்தயத்தை அப்படியே விழுங்காமல் முளைகட்டி பயன்படுத்தும் போது அதீத பலன் தருவதாக மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆம். வைட்டமின் சி, இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய மூன்றும் ஒரு சேர கிடைக்க முளைக்கட்டி பயன்படுத்துவதே சிறந்த வழி.
வெந்தயத்தை ஆறு மணி நேரங்கள் ஊற வைத்து சுத்தமான துணியில் வடிகட்டி சுமார் 8 மணி நேரம் வைத்தால் முளைப்பு வந்துவிடும். ஒன்றரை சென்டிமீட்டருக்கும் சற்று அதிகமாக முளைப்பு வந்து விட்டால் அதில் இருக்கும் கசப்பு சுவை நீங்கிவிடுவதால் சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
நீரிழிவுக்கு நோ
தினம் 20 கிராம் அளவு முளைகட்டிய வெந்தயம் போதுமானது என்றும் நமது சர்க்கரை அளவை இரண்டு மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதை இரவு படுப்பதற்கு முன் அல்லது காலையில் உணவு உண்ட பிறகு சாப்பிடலாம். இரவில் சாப்பிட்ட உணவுக்கு வேலை இல்லை என்பதால் சர்க்கரை அதிகமாகும். அதை கட்டுக்குள் வைக்க இது மிகவும் பயன்படும். அதே நேரம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சர்க்கரை குறையும் வாய்ப்பு இருப்பதால், முளை கட்டிய வெந்தயத்தை காலை உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.
இதயத்தின் காவலன்
இதய பாதுகாப்பிற்கு இது மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குறிப்பாக இதயத்தை பாதிக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றான ரத்தக் குழாய்களில் சேகரமாகும் கொழுப்பை இது தடுக்கிறது.
பருமனுக்கு எதிரி..
பெருகும் உடல் எடையை கட்டுக்குள் வைத்து சீராக்க வெந்தயம் பயன்படுகிறது . அது மட்டுமல்ல அதிகப்படியான எடை இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறைந்து ஸ்லிம் அண்ட் பிட்டாக காட்டும் அற்புதத்தை செய்கிறது முளைகட்டிய வெந்தயம்.
முடி உதிர்தலுக்கு பை..
சிறியவர் முதல் அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனையும், பொடுகு தொல்லையும் கவலை தருகிறது. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வெந்தயம் தான். உணவாக உள்ளுக்கு எடுத்துக் கொண்டும், ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவிக் கொண்டும் இந்த பிரச்சனைக்கு பை சொல்லலாம்.
இரும்புச்சத்துக்கு வெல்கம்..
வெந்த+அயம் என்ற சொல் 'சமைத்த இரும்புச் சத்து' என்ற பொருளை தருகிறது என்று சித்த மருத்துவம் சொல்கிறது. அந்த அளவிற்கு இரும்பு சத்து அளவை சமன் செய்து நம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது இந்த மேஜிக் சீட்ஸ்.
மூலநோய் போயே போச்..
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து துவங்கி அதன் முற்றிய நிலையான மூலநோய் வரை சரி செய்கிறது முளைக்கட்டிய வெந்தயம்.
பீரியட்ஸ் வலிக்கு நிவாரணம்
மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதியுறும் பொழுது அந்த நாட்களில் வெந்தயம் சாப்பிடுவது சிறந்த பலன் தரும். வலி நிவாரணிகளை நாடாமல் முன்கூட்டியே திட்டமிட்டு முளைகட்டிய வெந்தயத்தை பெண்கள் எடுத்தால் வலிக்கு நிவாரணம் பெறலாம்.
பின்விளைவுகள் தராத முளைகட்டிய வெந்தயத்தின் மகிமைக்கு சிறு சான்றுகள்தான் இவை. இன்னும் கண்கள் பாதுகாப்பு, ஆண்களின் விந்தணுவை அதிகரிப்பது, அதிக உடல் சூடு தணிப்பது போன்ற பல பாதிப்புகளைத் தீர்த்து மாயமாக்கும் வெந்தயம் உண்மையில் ஒரு மேஜிக் விதைதானே?