பப்பாளி விதையை சாப்பிடலாம்; ஆனால்... இந்தத் தப்பை மட்டும் செய்திடாதீங்க!

Papaya seeds
Papaya seedsImg credit: AI Image
Updated on

பப்பாளி பழம் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக, ஜீரணத்தை மேம்படுத்தவும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. ஆனால், பழத்தைச் சாப்பிட்டுவிட்டு குப்பையில் வீசும் அதன் விதைகளில் அற்புதமான நன்மைகள் உள்ளன. பப்பாளி விதைகளின் நன்மைகள் என்ன? அவற்றை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம்? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பப்பாளி விதைகள் வைட்டமின்கள், சிங்க், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல சத்துக்களால் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்கும் திறன் கொண்டவை. பப்பாளி விதைகளின் சந்தை விலை கூட ஒரு கிலோக்கு 2000 ரூபாய்க்கும் மேல் இருக்கக்கூடும்.

பப்பாளி விதைகளில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்க உதவுகின்றன. இதனால் செரிமான முறை சீராக செயல்படுகிறது. குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்னை குறைகிறது. தினசரி சிறிதளவு பப்பாளி விதைகளை எடுத்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

பப்பாளி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. ஆகையால், சர்க்கரை நோயாளிகள் இந்த விதைகளை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும், கொழுப்பு அளவை கட்டுப்படுத்துவதிலும் பப்பாளி விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள ஒலேயிக் அமிலம் உடலில் உள்ள தீய கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் நல்ல கொழுப்பு அளவு சீராக இருக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் பயனுள்ளதாகும்.

இதையும் படியுங்கள்:
Eye Floaters-ஆ? பயப்பட வேண்டாம்! ஆனால் இந்த ஒரு அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுங்கள்!
Papaya seeds

சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் பப்பாளி விதைகள் சிறந்த உதவியாக இருக்கின்றன. இவை உடலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை நீக்க உதவுகின்றன. குறிப்பாக, சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன. இயற்கையான டிடாக்ஸ் உணவாக பப்பாளி விதைகளை கருதலாம்.

பப்பாளி விதைகளின் பக்க விளைவுகள்:

பப்பாளி விதைகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்று எரிச்சல் அல்லது செரிமான பிரச்னைகள், நச்சுத்தன்மை அபாயம் ஏற்படலாம். மேலும், இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

எப்படி எடுத்துக்கொள்வது?

விதைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கலாம். தினமும் ஒரு சிறிய அளவு (அரை தேக்கரண்டி அளவு) மட்டும் எடுத்துக்கொள்வது போதுமானது. கர்ப்பிணிகள் மற்றும் சிறு குழந்தைகள் இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது. ஜூஸ், சாலட் அல்லது வெந்நீரில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம்

பப்பாளி விதைகளை சரியான அளவில் பயன்படுத்தினால், பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அடுத்த முறை பப்பாளி பழம் சாப்பிடும்போது அதன் விதைகளை தூக்கி எறியாமல், ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தத் தொடங்குங்கள்.

logo
Kalki Online
kalkionline.com