
வெயில் காலம் தொடங்கி விட்டாலே தெருவோரங்களில் ஆங்காங்கே கூழ் கடை தென்பட தொடங்கி விடும். சென்னையில், தாம்பரம் தொடங்கி ஆவடி வரை கூழ் கடைகளைப் பரவலாகப் பார்க்க முடியும். காலையில் மெரினா கடற்கரையில் வாக்கிங் போகும் நபர்கள் மட்டுமின்றி இந்த கூழ் குடிக்க வருபவர்கள் என இந்தக் கடைகளுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் எல்லாம் உண்டு. அத்தனை அபூர்வமானது கூழ்! தற்போது நம் பாரம்பர்ய கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகுக் கூழின் அருமையையும், மகத்துவத்தையும் மனிதர்கள் நன்கு உணர தொடங்கி விட்டனர். எளிய, ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய அற்புதமான உணவு கூழ்.
சிறு தானியங்களில் ‘பென்னிசெட்டம் கிளாகம்' என்ற அறிவியல் பெயர் கொண்ட கம்பு தானியமானது, அதிக அளவில் ஊட்டச்சத்துகளை கொண்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் களைப்பு, நீர்ச்சத்து இழப்பை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. சிறு தானியங்களிலேயே அதிக அளவாக கம்பு தானியத்தில் 11.8 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
ஆரோக்கியமான சருமம், தெளிவான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின்-ஏ சத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் என்பது கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பு தானியத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் இதன் கிளைசெமிக் குறியீடு காரணமாக உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
கம்பு தானியத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. வாரம் இருமுறை கம்பங்கூழ் உண்டு வரலாம். மலச்சிக்கலை தடுக்க கம்பு தானிய உணவு உதவுகிறது. கம்பு உணவை அடிக்கடி உட்கொள்ளும்போது ரத்தத்தில் இருக்கும் செல்கள் ஆக்சிஜன் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகின்றன. இதனால், சரும சுருக்கங்கள் ஏற்படுவது குறைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கம்பங்கூழில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது,
பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படும். கம்பங்கூழை அடிக்கடி உட்கொள்ளும்போது மாதவிடாய் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.
அதோடு, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதில் இருக்கும். நார்ச்சத்துக்கு உண்டு. வயிற்றில் இருந்து செரிமானமாகி குடலுக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனே பசிக்காது. எனவே டயட்டில் இருப்பவர்களுக்கும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது சிறந்த உணவாகும்.
சிலருக்கு எப்போதும் உடலில் அதிகப்படியான சூடு காணப்படும். தினமும் சிறிதளவு கம்பங்கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும். வெயில் காலத்தில் தவிர்க்கக்கூடாத தானியம் கம்பு ஆகும்.