
அன்றாட வாழ்வில், தூக்கம் இன்றியமையாத ஒன்றாகும். தூக்கும்போது, ஒவ்வொருவரும் வெவ்வேறு தோரணைகளில் படுத்திருப்போம். அந்தவகையில், வீடுகளில் பெரியவர்கள் குப்புற படுத்து தூங்கக்கூடாது என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதையும் தாண்டி குப்புற படுத்து தூங்கும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. இவ்வாறு தூங்குவதால் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று இந்தப் பதிவில் காணலாம்.
குப்புற படுத்து தூங்குவது, குறட்டை விடுவதைக் குறைக்க உதவுதல் போன்ற நன்மைகளை வழங்கினாலும், அதைவிட மோசமான, எதிர்மறையான விளைவுகளை உடலில் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு தூங்குவது பெரியவர்களுக்கு வலி மற்றும் அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. அதே சமயம் குழந்தைகள் குப்புற படுத்து தூங்குவதால், திடீர் குழந்தை இறப்பு நோய்க்கான (SIDS) ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், குப்புறப் படுத்து தூங்குவது முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்தத்தைக் கொடுக்கிறது. இது மறுநாள் காலையில் எழும்போது, முதுகுவலி, தசை பிடிப்பு போன்ற சில அசௌகரியங்களை உண்டாக்குகிறது.
குப்புறப் படுத்துத் தூங்குவது முதுகுத் தண்டின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதுபோன்று வயிற்றை அமுக்கிக் கொண்டு தூங்கும்போது, முதுகு தண்டு வளைந்து அதன் சீரான அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இது முதுகுவலிக்கு காரணமாகிறது.
இந்த தூக்க நிலையில் நாம் தூங்கும்போது, மூச்சு விடுவதற்காக கழுத்தை ஒருபக்கமாக திருப்பிப் படுத்திருப்போம். இது கழுத்து வலி ஏற்பட வழிவகுக்கிறது.
கூடுதலாக, இந்த மோசமான தூக்க நிலை தலைவலி, தோள்பட்டை வலி மற்றும் கை வலி போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். இவ்வாறு தூங்கும்போது, மூளைக்கு செல்லும் ஆக்சிஜனில் தடை ஏற்படுகிறது.
குறிப்பாக, கர்ப்பகாலத்தில் பெண்கள் குப்புற படுத்து தூங்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவாக, இவ்வாறு தூங்கும் போது நம் முகத்தை ஒரு பக்கமாக தலையணையில் அழுத்திக் கொண்டு தூங்குவோம். அந்த சமயத்தில் முகத்தை அசைக்கும்போது, சருமத்தை இழுத்து அல்லது நீட்டி அதிக அழுத்தம் கொடுக்க நேரிடும். இது சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.
மல்லாந்து (முதுகு தரையில் பதியுமாறு) அல்லது பக்கவாட்டில் தூங்குவது அதிக ஆரோக்கிய நன்மைகளையும் குறைவான அசௌகரியங்களையும் தருகிறது. அதோடு, முதுகுவலியுடன் தூங்குபவர்கள் பற்றிய ஒரு ஆய்வில், பக்கவாட்டில் அல்லது முதுகு தரையில் பதியுமாறு தூங்கும் நிலைக்கு மாறியவர்களுக்கு முதுகுவலி கணிசமாகக் குறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலோனோர் குப்புற படுத்து தூங்குவதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் உணரும் வசதி. இவர்கள், தலையணை ஒன்றை வயிற்றுப பகுதிக்கு அருகில் வைத்து பக்கவாட்டில் தூங்குவதன் வழியாக குப்புற படுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கலாம்.