

நம்மில் பலருக்கு காலை நேரத்தை உற்சாகமாகத் தொடங்கவும், மாலை நேர அலுப்பைத் தீர்க்கவும் டீ குடிப்பது ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாக உள்ளது. சிலருக்கு டீயோடு சேர்த்து ஏதேனும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் பழக்கமும் உண்டு. ஆனால், டீ உடன் நாம் உட்கொள்ளும் சில உணவுகள், உடல் நலனுக்குத் தீங்கு ஏற்படுத்தலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதனடிப்படையில், டீ உடன் எந்தெந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிடக்கூடாது; எந்தெந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிடலாம் என இக்கட்டுரையில் பார்க்கலாம்.
1. இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் சோயா போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். டீயில் உள்ள டானின்கள், இந்த உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது, நாளடைவில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
2. இரும்புச்சத்து மாத்திரைகள்:
சிலருக்கு மாத்திரைகளை தண்ணீருக்குப் பதில் டீ உடன் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. குறிப்பாக, மருத்துவர் பரிந்துரைத்த இரும்புச்சத்து மாத்திரைகளைத் டீ உடன் உட்கொள்ளாதீர்கள். டீ மாத்திரையின் வீரியத்தைக் குறைத்து, அதன் பலனை உடல் முழுமையாகப் பெற முடியாமல் செய்துவிடும். மாத்திரை எடுத்துக்கொள்வதற்கும், டீ அருந்துவதற்கும் இடையே குறைந்தது ஒரு மணிநேர இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.
3. எண்ணெயில் பொரித்த உணவுகள்:
சமோசா, கச்சோரி, பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை டீ உடன் உண்பது பலருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இது நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை உண்டாக்கும்.
4. காரமான உணவுகள்:
அதிக காரம் மிகுந்த உணவுகளைத் டீ உடன் சேர்த்து உண்பது, வயிற்று எரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். உங்களுக்கு ஏற்கனவே வாயுத் தொல்லை, அசிடிட்டி அல்லது செரிமானக் குறைபாடுகள் இருந்தால், இந்த வகை உணவுப் பழக்கம் உங்கள் உடல் நலனை மேலும் மோசமாக்கும்.
டீ உடன் சேர்த்து உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுகள்:
1. சுட்ட அல்லது வேகவைத்த தானியங்கள்:
எண்ணெயில் பொரித்த உணவுகளுக்குப் பதிலாக, வேகவைத்த சுண்டல், நிலக்கடலை அல்லது வறுத்த அவல் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவை புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. டீ உடன் இவை சேரும்போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைப்பதுடன், செரிமானத்திற்கும் உதவுகின்றன.
2. பாதாம் மற்றும் பருப்பு வகைகள்:
பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகள் டீ-க்கு மிகச் சிறந்த துணையாக இருக்கும். இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், டீயில் உள்ள காஃபின் ஏற்படுத்தும் அமிலத்தன்மையைக் குறைக்க உதவும். இருப்பினும், மிகக் குறைந்த அளவில் உட்கொள்வதே சிறந்தது.
3. மசாலா சேர்க்கப்பட்ட தேநீர்:
டீ உடன் கூடுதல் சுவை சேர்க்க விரும்பினால், இஞ்சி, ஏலக்காய், பட்டை அல்லது துளசி சேர்த்துப் பருகலாம். இவை டீயின் சுவையை அதிகரிப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், செரிமானத்தைத் தூண்டவும் உதவுகின்றன.
4 சிறுதானிய பிஸ்கட்:
மைதா அல்லது சர்க்கரை அதிகம் கலந்த பிஸ்கட்டுகளைத் தவிர்த்து, ராகி, கம்பு அல்லது திணை போன்ற சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கட்டுகளைத் தேர்வு செய்யலாம்.
டீ குடிப்பது என்பது ஒரு ரசனைமிகு அனுபவம். அந்த அனுபவம் ஆரோக்கியமானதாக இருக்க, எதைச் சாப்பிடுகிறோம் என்பதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் கையில் உள்ளது.
References:
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்).