உங்க கால் விரல்கள் சொல்லும் பகீர் உண்மைகள்… அலட்சியப்படுத்தினா உயிருக்கே ஆபத்து வரலாம்!

Health symptoms in legs
Health symptoms in legs
Published on

நம்மில் பலரும் முகம் அழகாக இருக்க வேண்டும், முடி கொட்டாமல் இருக்க வேண்டும் என்று பல ஆயிரங்களை செலவு செய்து பராமரிப்போம். ஆனால், நாள் முழுவதும் நமது ஒட்டுமொத்த உடல் எடையையும் தாங்கி நிற்கும் கால்கள் மற்றும் பாதங்களை பெரிய அளவில் கண்டுகொள்ளவே மாட்டோம். நிஜத்தில் நமது உடலின் உள்ளுறுப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை காட்டிக்கொடுக்கும் ஒரு பெரிய கண்ணாடிதான் நமது பாதங்கள். 

உடலில் உள்ள இதயம், சிறுநீரகம், ரத்த ஓட்ட மண்டலம் போன்றவற்றில் ஏதேனும் பிரச்னை வந்தால், அதற்கான முதல் அறிகுறியை நமது கால்கள்தான் மிகத் தெளிவாக வெளிக்காட்டும். அப்படி நமது கால்கள் மூலம் உடல் நமக்கு சொல்ல வரும் சில முக்கியமான எச்சரிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அடிக்கடி வரும் பாத வீக்கம்!

பொதுவாக ரொம்ப நேரம் பேருந்தில் பயணம் செய்தால் அல்லது ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்ந்து வேலை பார்த்தால் பாதங்களில் லேசான வீக்கம் வருவது இயல்புதான். ஆனால் எந்த ஒரு கடினமான வேலையும் செய்யாமல் அடிக்கடி பாதம் மற்றும் கணுக்கால் வீங்கினால் அதை சாதாரணமாக விடக்கூடாது. 

நமது இதயம் ரத்தத்தை சரியாக பம்ப் செய்ய சிரமப்படும்போது அல்லது சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகளை சரியாக வெளியேற்றாத போதுதான் கால்களில் இப்படி நீர் கோர்த்துக்கொண்டு வீக்கம் ஏற்படும்.

மரத்துப்போதல், கூச்ச உணர்வு!

சில நேரங்களில் கால்களில் எறும்புகள் ஊர்வது போல ஒரு உணர்வு இருக்கும், அல்லது பாதங்கள் அடிக்கடி முழுவதுமாக மரத்துப்போய் விடும். இது உடலில் சர்க்கரை நோய் இருப்பதற்கான மிக முக்கியமான ஒரு ஆரம்பகால அறிகுறியாகும்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை: பளபளக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நம்பி வாங்காதீர்கள்...!
Health symptoms in legs

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது அது கால்களுக்கு செல்லும் மெல்லிய நரம்புகளை மெல்ல மெல்ல பாதிக்க தொடங்கும். இதனால்தான் பாதங்களில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாதது போன்ற ஒரு ஆபத்தான நிலை ஏற்படுகிறது.

எப்பொழுதும் ஜில்லென்று இருக்கும் பாதங்கள்!

அடிக்கிற வெயில் காலமாகவே இருந்தாலும் சிலருக்கு பாதங்கள் மட்டும் எப்போதுமே ஐஸ் கட்டி போல ரொம்பவே ஜில்லென்று இருக்கும். இதற்கு முக்கிய காரணம் ரத்த ஓட்ட குறைபாடுதான். இதயம் பம்ப் செய்யும் ரத்தம் கால்களின் கடைசிப் பகுதிக்கு சரியாக சென்று சேராத பட்சத்தில் இப்படி நடக்கும். மேலும் இது தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்பதையும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதையும் நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள்:
தீரா வலி தரும் தசை பிடிப்பு... இதுவும் ஒரு காரணம்!
Health symptoms in legs

திடீர் தசை பிடிப்பு!

இரவில் நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருக்கும்போது திடீரென கால்களில் நரம்பு இழுத்து பிடித்துக்கொண்டு உயிர் போகும் அளவுக்கு வலியை கொடுக்கும். உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லாத போதும், அல்லது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் குறையும் போதும் இந்த தசை பிடிப்பு அடிக்கடி ஏற்படும்.

இது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்து பார்ப்பது மிகவும் சிறந்தது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com