"ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை" என்பது பழமொழி. அந்த அளவுக்கு பழங்கள் நமக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பழங்களின் இந்த வரிசையில், எளிதாகக் கிடைக்கும் வாழைப்பழமும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையக்கூடும் என்று சமீபத்திய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது உப்பைக் குறைப்பதுதான் முதல் ஆலோசனையாக இருக்கும். ஆனால், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜி - சிறுநீரக உடலியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதை விட, பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை நமது உணவில் அதிகமாகச் சேர்ப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளது. வாழைப்பழம், இனிப்பு வள்ளிக்கிழங்கு, பசலைக்கீரை போன்ற பல உணவுகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
குறிப்பாக, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நீங்கள் சிறிதளவு உப்பு அதிகமாகச் சாப்பிட்டாலும்கூட இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்பது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும். சோடியம் (உப்பு) மற்றும் பொட்டாசியத்திற்கு மனித உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை ஆய்வு செய்ததில், பொட்டாசியம் உட்கொள்ளலை இரு மடங்காக அதிகரிக்கும்போது, ஆண்களுக்கு 14 மிமீஹெச்ஜி வரையிலும், பெண்களுக்கு 10 மிமீஹெச்ஜி வரையிலும் இரத்த அழுத்தம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.
ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த இரத்த அழுத்தக் குறைப்பு சோடியம் அளவு அதிகமாக இருந்தபோதும் நிகழ்ந்துள்ளது. இது ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.மேலும், இந்த ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான பாலின வேறுபாடும் தெரியவந்துள்ளது.
பெண்களின் சிறுநீரகங்கள் இயற்கையாகவே சோடியத்தை நிர்வகிக்கும் திறன் கொண்டவை, குறிப்பாக மாதவிடாய் நிற்பதற்கு முன்பு வரை அவர்களுக்கு ஒருவித இயற்கையான பாதுகாப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஆண்கள் சோடியத்தை நிர்வகிப்பதில் அவ்வளவு திறமையானவர்கள் அல்ல என்றும், அவர்களுக்கு பொட்டாசியம் அதிகமாகத் தேவைப்படும் என்றும் ஆய்வு கூறுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் கட்டுப்படுத்துவதுடன், வாழைப்பழங்கள் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.