காபி, டீ குடித்தால் குழந்தைகளுக்கு ரத்தசோகை வருமா? அதிர்ச்சி தகவல்கள்!

காபி, டீ குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? – பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும்.
Child Drink Coffee - குழந்தைகளுக்கு காபி டீ
Child Drink Coffee - குழந்தைகளுக்கு காபி டீ
Updated on: 
Q

குழந்தைகளுக்குக் காபி, டீ கொடுப்பது சரியா?

A

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் காபி, தேநீர் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியக் குழந்தை மருத்துவக் கழகம் (IAP) பரிந்துரைக்கிறது. ஐந்து வயதைக் கடந்த குழந்தைகளிடமும் இவற்றை வலிந்து திணிக்க வேண்டாம். வளரும் மூளைக்கும், உடலுக்கும் கஃபீன் முக்கியமான ஒன்றல்ல.

Q

காபி, டீயில் உள்ள கஃபீன் என்ன செய்கிறது?

A

கஃபீன் (Caffeine) என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தூண்டும் வேதிப்பொருள். இது தற்காலிகமாக விழிப்புணர்வை அதிகரித்தாலும், குழந்தைகளில் அமைதியின்மை, பதற்றம், எரிச்சல், இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.

Q

குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுக்குமா?

A

ஆமாம்! குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஆழ்ந்த, போதுமான தூக்கம் மிகவும் அவசியம். கஃபீன் தூக்கம் வருவதைக் தாமதப்படுத்துவதுடன், ஆழ்ந்த தூக்கத்தை தடுக்கிறது. இதனால் மறுநாள் சோர்வு, கவனக்குறைவு, கற்றலில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.

Q

தேநீர் குடிப்பதால் ரத்தசோகை ஏற்படுமா?

A

தேநீரில் உள்ள டானின்கள் (Tannins) உணவில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதைக் குறைக்கின்றன. குறிப்பாக கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை குடல் உறிஞ்சுவதை இவை தடுக்கின்றன. எனவே குழந்தைகளுக்கு உணவுடன் தேநீர் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Q

பாலுடன் கலந்து கொடுத்தால் பாதிப்பு குறையுமா?

A

பாலில் கலந்து கொடுத்தாலும் கஃபீனின் பக்க விளைவுகள் நீங்கிவிடுவதில்லை. மேலும், சர்க்கரை சேர்த்த தேநீர் அல்லது காபி குழந்தைகளின் பல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். பால் தனியாக வழங்கப்படும்போது கிடைக்கும் ஊட்டச்சத்துப் பயனை, சர்க்கரை கலந்த காபி அல்லது தேநீரால் தர முடியாது.

ஃபில்டர் காபி - Coffee
ஃபில்டர் காபி - Coffee Image credit: ChatGPT
Q

எந்த வயதில் எவ்வளவு கொடுக்கலாம்?

A

இந்தியக் குழந்தை மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி:

5 வயதுக்குக் கீழ்: காபி, தேநீர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

5–9 வயது: பிற கஃபீன் உணவுகள் அல்லது பானங்கள் உட்கொள்ளாத நிலையில், அதிகபட்சம் 100 மி.லி. வரை மட்டும் பயன்படுத்தலாம்

10–18 வயது: பிற கஃபீன் மூலங்கள் இல்லாத நிலையில், அதிகபட்சம் 200 மி.லி. வரை மட்டும் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு கஃபீன் முக்கியமில்லை என்பதால், இயன்றவரை தவிர்ப்பதே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
பெரியவர்களின் புகைப் பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் 8 ஆபத்துகள்!
Child Drink Coffee - குழந்தைகளுக்கு காபி டீ
Q

காபி, தேநீரைத் தவிர வேறு எவற்றில் கஃபீன் உள்ளது?

A

குளிர்பானங்கள், சக்தி பானங்கள், சாக்லேட், குளிரூட்டப்பட்ட தேநீர், காபிச் சுவையூட்டப்பட்ட இனிப்புகள் போன்றவற்றிலும் கஃபீன் இருக்கலாம். குறிப்பாக சக்தி பானங்கள் குழந்தைகளுக்கும் வளர் இளம் பருவத்தினருக்கும் ஏற்றவை அல்ல. பாக்கெட் மீது அச்சடிக்கப்பட்டுள்ள மூலப்பொருள் விவரங்களைப் படிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

Q

காபி, டீக்குப் பதிலாக எவற்றைக் கொடுக்கலாம்?

A

தண்ணீர், வயதுக்கேற்ற அளவில் பால், வீட்டில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்காத பானங்கள், இளநீர் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். பழச்சாறுகளைவிட பழங்களாகவே உண்பது மேலும் சிறந்தது. குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கத் தேவையானது கஃபீன் அல்ல, சத்தான உணவு, போதுமான தூக்கம், விளையாட்டு மற்றும் மகிழ்ச்சியான குடும்பச் சூழல்தான்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா? இந்த 5 பயிற்சிகளைத் தருவீர்!
Child Drink Coffee - குழந்தைகளுக்கு காபி டீ

பெற்றோர்களே!

குழந்தை நம்மைப் பார்த்துத்தான் பல பழக்கங்களைக் கற்றுக்கொள்கிறது. காலை எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கத்தைப் பார்த்து, அதையே தானும் விரும்பத் தொடங்கலாம்.

குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்கும், அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் இடையே நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும்

logo
Kalki Online
kalkionline.com