பெரியவர்களின் புகைப் பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் 8 ஆபத்துகள்!

ஜன்னலைத் திறந்தாலும் அகலாத மூன்றாம் நிலைப் புகை; காதுத் தொற்று மற்றும் ஆஸ்துமா அபாயம்!
Smoking - புகைப்பழக்கம்
Smoking - புகைப்பழக்கம்
Dr K. Ravanan M.D, Paediatrics

டாக்டர். க. இராவணன் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் M.B.B.S. பட்டப்படிப்பினையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவத்தில் M.D (Paed) உயர் பட்டப்படிப்பினையும் படித்தவர். குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது அரக்கோணத்தில் Dr. RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். Indian Medical Association, Indian Academy of Pediatrics & Infectious Disease Chapter IAP முதலான அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராவார். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களால் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் ‘குழந்தை நலம்’ மற்றும் 'ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்' ஆகும்.

Updated on: 

பெரியவர்களின் புகைப் பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, காதுத் தொற்று, SIDS மரண அபாயம் மற்றும் மூன்றாம் நிலைப் புகை தாக்கம் ஆகிய ஆபத்துகள் குறித்து விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.

Q

புகையிலைப் புகை பெரியவர்களை விட குழந்தைகளை ஏன் அதிகமாகப் பாதிக்கிறது?

A

குழந்தைகளின் சுவாச மண்டலமும், நோய் எதிர்ப்பு அமைப்பும் முழுவளர்ச்சியடையாதவை, வலிமை குறைந்தவை. வயது வந்தவர்களைக் காட்டிலும் குழந்தைகள் நிமிடத்திற்கு அதிக முறை சுவாசிப்பதாலும், உடல் எடைக்குரிய காற்றை அதிகம் உட்கொள்வதாலும் புகையிலைப் புகையின் நச்சுக்கள் அவர்கள்உடலில் மிக எளிதாக ஊடுருவுகின்றன.

Q

'மூன்றாம் நிலைப் புகைத் தாக்கம்' என்றால் என்ன?

A

புகைப்பிடித்த பிறகு காற்றில் கலந்த நச்சுக்கள் மறைந்துவிட்டாலும், நிக்கோட்டின் மற்றும் கார்சினோஜென்கள் (புற்றுநோய் காரணிகள்) வீட்டின் தரை, உடைகள், மேசைகள் மற்றும் திரைச்சீலைகளின் மேற்பரப்பில் தங்கிவிடுகின்றன. இந்த எச்சங்கள் உட்புறக் காற்றிலுள்ள மூலக்கூறுகளுடன் இணைந்து தொடர் நச்சுத் தன்மையை ஏற்படுத்துகின்றன.

Q

'குழந்தை இல்லாத அறையில் புகைப்பது' அல்லது 'ஜன்னலைத் திறந்து வைப்பது' ஏன் போதுமான பாதுகாப்பு அல்ல?

A

கதவு, ஜன்னல் திறந்திருந்தாலும் அல்லது மின்விசிறி இயங்கினாலும் புகையின் நச்சுத் துகள்கள் முழுமையாக அகலாது. அவை சுவர்கள் மற்றும் பொருட்களின் மீது படிந்து, தரையில் ஊர்ந்து விளையாடும் குழந்தைகள் கைகளை வாயில் வைக்கும்போது அவர்களை நேரடியாகச் சென்றடைகின்றன.

Q

புகையிலைப் புகை குழந்தைகளின் நுரையீரலின் இயக்கத்தை எவ்வாறு சிதைக்கிறது?

A

புகையிலைப் புகையில் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் நுரையீரல் காற்று நுண்ணறைகளின் இயல்பான வளர்ச்சியைத் தடை செய்கின்றன. மேலும், நுரையீரலின் இயற்கையான தூய்மைப்படுத்தும் இயக்கமான 'மியூகோசிலியரிகிளியரன்ஸ்' (Mucociliary clearance) பாதிக்கப்படுவதால், சளி மற்றும் நச்சுக்கள் வெளியேறுவது தடைபட்டு மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா ஏற்படுகிறது.

Smoking - புகைப்பழக்கம்
Smoking - புகைப்பழக்கம்Image credit: ChatGPT
Q

ஆஸ்துமா உள்ள மற்றும் இல்லாத குழந்தைகளை புகை எவ்வாறு பாதிக்கிறது?

A

ஆஸ்துமா உள்ள குழந்தைகளில் இது கடுமையான மூச்சுக்குழாய்ச் சுருக்கத்தை (Bronchospasm) ஏற்படுத்தி ஆபத்தான மூச்சுத் திணறலை உண்டாக்கும். ஆஸ்துமா இல்லாத குழந்தைகளுக்கும் இது நாள்பட்ட காற்றுப்பாதை அழற்சியைத் தூண்டி, எதிர்காலத்தில் ஆஸ்துமா உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா? இந்த 5 பயிற்சிகளைத் தருவீர்!
Smoking - புகைப்பழக்கம்
Q

குழந்தைகளின் காதுகளை எவ்வாறு புகையிலைப் புகை பாதிக்கிறது?

A

புகையிலைப் புகை நடுக்காதுப் பாதையில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு நடுக்காதுத் தொற்று (Otitis Media) மற்றும் காதில் திரவம் தேங்குதல் போன்ற சிக்கல்கள் உண்டாகி, காதுவலி மற்றும் கேட்கும் திறன் பாதிப்புக்குள்ளாகிறது.

Q

கைக்குழந்தைகளுக்கு திடீர் மரண அபாயம் (SIDS) எவ்வாறு புகையிலைப் புகையுடன் தொடர்புடையது?

A

நிகோட்டின் போன்ற தீவிர நச்சுகள் கைக்குழந்தைகளின் மூளைத் தண்டுவடத்தின் (Brainstem) சுவாசக் கட்டுப்பாட்டு மையங்களை நேரடியாகப் பாதிக்கின்றன. இதனால் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் தடை காரணமாக திடீர் கைக்குழந்தை இறப்பு எனும் (Sudden Infant Death Syndrome - SIDS) அபாயம் பலமடங்கு அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து ஏன் அவசியம்? பெற்றோர் அறிய வேண்டியவை!
Smoking - புகைப்பழக்கம்
Q

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான உண்மையான அறிவியல் பூர்வமான பாதுகாப்பு என்ன?

A

'குழந்தையின் அருகில் புகைக்காமல் இருப்பது' அல்லது 'வேறு அறைக்குச் சென்று புகைப்பது' என்பது மட்டும் முழுமையான தீர்வு அல்ல.

வீடுகளிலும் வாகனங்களிலும் எவரும் எந்தச் சூழலிலும் புகைக்கக் கூடாது என்ற முழுமையான புகையற்ற சூழலை உருவாக்குவதே குழந்தைகளின் பாதுகாப்பான சுவாச வளர்ச்சிக்குரிய ஒரே அறிவியல் பூர்வமான வழியாகும்.

logo
Kalki Online
kalkionline.com