இன்று உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியின் மீது ஆர்வமாக இருக்கும் தலைமுறையினரிடம், கிரீன் டீ என்பது ஆரோக்கியத்தை பராமரிக்கும் ஒரு பானமாக மாறி உள்ளது. கிரீன் டீயில் 'கேடசின்ஸ்' (Catechins) என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்க உதவுகின்றன.
இதனால், இது உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் தேநீராக இருக்கிறது. என்னதான் நன்மை இருந்தாலும் கிரீன் டீ பருகும் போது, அதன் கசப்பான சுவை ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. கிரீன் டீயில் ஒரு சில மாறுதல்களை செய்து அதை அருந்துவதை சுவை மிகுந்ததாக மாற்றலாம். அதற்கான மாற்றங்களை பின்வருவனவற்றில் அறியலாம்.
கிரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலப்பதன் மூலம், அதன் சுவையை மாற்றுவதோடு, அதன் மணத்தின் மூலம் புத்துணர்ச்சியையும் அதிகரிக்க முடியும். எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது. இந்தக் கூட்டணி உடல் எடையை குறைப்பதில் இரட்டை ஆற்றலுடன் செயல்படும்.
இஞ்சி மற்றும் துளசியில் சளி மற்றும் இருமல்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், துளசியின் கிருமிநாசினி பண்புகளும் இணைந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை இரும்புக்கவசமாய் மாற்றுகின்றன. குளிர் மற்றும் மழைக்காலத்தில் இந்த தேநீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
கிரீன் டீயில் தேன் சேர்ப்பதால் அதன் கசப்புத் தன்மை பெருமளவில் குறையும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தொண்டை புண்ணைக் குணப்படுத்துவதோடு, செரிமான மண்டலத்தையும் சீராக வைக்க உதவுகிறது.
புதினாவை உணவில் சேர்க்கும் போது அது புத்துணர்ச்சியை அதிகரிக்கவும் மன அழுத்தத்தினை குறைக்கவும் செயலாற்றுகிறது. மேலும் வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் பயன்படுகிறது.
ஸ்ட்ராபெரி அல்லது ஆரஞ்சின் சாற்றை கிரீன் டீயில் கலந்து அருந்தலாம். இவற்றில் இரத்தத்தில் சேரும் சர்க்கரை குறைவாக இருப்பதால் கலோரிகளை ஏற்றாது. அதே நேரம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும் இவற்றில் இருந்து கிடைக்கும்.
கிரீன் டீயில் செம்பருத்தி பூவை சேர்த்து பருகும் போது, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் கிடைக்கும். இரத்த அழுத்தம், மன அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை குறைப்பதில் இது நல்ல பலன் தருகிறது.
கிரீன் டீ தயாரிக்கும் முறை:
கிரீன் டீயை தயாரிக்கையில், தண்ணீர் கொதிக்கும் போது அதில் இலைகளை போடக் கூடாது. கொதிநிலை நின்ற பிறகு, அதில் பச்சை தேயிலை மற்றும் உங்களுக்கு விருப்பமான கூடுதல் பொருளை சேர்த்துக் கொள்ளலாம். கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடிப்பது எப்போதும் அதிக பலனை தருகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள், உணவு உண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து அருந்துவது சிறப்பு.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)