

வயிற்று சூடு என்பது ஒரு பொதுவான பிரச்னை. ஆனால், எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் அதனை திறம்பட நிர்வகிக்க முடியும். நீரேற்றத்துடன் இருப்பதும், குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சி பண்புகள் மூலம் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அசிடிட்டி, நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னை மற்றும் உடல் வெப்பத்தை உடனடியாக குறைக்க உதவும்.
1) வயிற்றுக்கு குளிர்ச்சி தரும் பொருட்கள்:
இளநீர், நுங்கு, மோர், வெங்காயம், வெள்ளரிக்காய், தர்பூசணி, திராட்சை போன்றவை உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் வயிற்றுக்கும் இதம் தரும்.
இளநீர் உடலுக்கு இயற்கையான புத்துணர்ச்சியை அளித்து வெப்பநிலையை சீராக்கும்.
மோர் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து குளிர்ச்சியை தரும் சிறந்த பானமாகும்.
வெள்ளரிக்காயில் அதிக நீர் சத்து உள்ளதால் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
தர்பூசணியில் நீர்ச்சத்து மிகுந்திருப்பதால் வயிற்றுக்கு இதம் தரும்.
புதினா இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது வயிற்று எரிச்சலை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும்.
2) சாதம் வடித்த கஞ்சி:
இந்த எளிய பாரம்பரிய பானம் உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதுடன், ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். காலை எழுந்ததும் சாதம் வடித்த கஞ்சியை குடிப்பது வயிற்று சூட்டை போக்க உதவும். சாதம் வடித்த கஞ்சியுடன் மோர், சிறிது உப்பு கலந்து காலையில் குடிப்பது உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வெறும் வயிற்றில் டீ, காபி போன்ற பானங்களை அருந்துவதை தவிர்த்து விடலாம். சாதம் வடித்த கஞ்சி அல்லது முன்தினம் வடித்த சாதத்தில் இரவு தண்ணீர் விட்டு வைத்து, காலையில் அந்த நீருடன் பழைய சாதத்தைக் கரைத்து சிறிது மோர் கலந்து உப்பு, சின்ன வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது சேர்த்து சாப்பிட வயிற்று சூடு காணாமல் போய்விடும்.
3) சூட்டை அதிகரிக்கும் காரம் மற்றும் வறுத்த உணவுகள்:
காரமான மற்றும் எண்ணெய் பலகாரங்கள், அதிக மசாலா உணவுகள் உடல் சூட்டை அதிகரித்து வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை (acidity) மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். உணவில் உப்பு காரத்தின் அளவை கட்டுக்குள் வைப்பதும், மசாலா உணவுகளுடன் தயிர், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து சமைப்பதும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தடுக்க உதவும். அத்துடன் காரமான உணவுகள், அதிக எண்ணெய் பலகாரங்கள் மற்றும் காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பது வயிற்றுச் சூடு மீண்டும் ஏற்படாமல் தடுக்க உதவும்.
4) மோர்:
தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்படும் மோர் வயிற்றுச் சூட்டை போக்க மிகச்சிறந்த வழி. இதில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று எரிச்சலை குறைக்கின்றன. இது ஒரு இயற்கையான குளிர்ச்சி பானமாகும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கி சோர்வை போக்கும் இதனை மசாலா மோர், புதினா மோர் என விதவிதமாக செய்து சாப்பிடலாம். கோடைக் காலத்தில் உடல் சூட்டை சீராக வைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அஜீரணக் கோளாறுகளை போக்கி உடனடி உடல் குளிர்ச்சிக்கும் உதவும்.
5) கற்றாழை:
உடல் மற்றும் வயிற்றுச் சூட்டை தணிப்பதில் சோற்றுக்கற்றாழை ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். கற்றாழை ஜெல் வயிற்றை குளிர்வித்து வயிற்று எரிச்சலை தணிக்கும் குணம் கொண்டது. கற்றாழைச் சாறு, உடல் வெப்பநிலை மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தையும் வயிற்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கற்றாழையின் சதைப்பகுதியை வெறும் வயிற்றில் ஜூஸ் அல்லது மோர் கலந்து குடிப்பது வயிற்றுப் புண் மற்றும் வயிற்று சூட்டை சரி செய்ய உதவும். இதில் உள்ள விட்டமின் ஏ, சி, இ மற்றும் பி 12 ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
6) ஓட்ஸ்:
வயிற்றுச் சூட்டை தணிப்பதில் ஓட்ஸ் சிறந்த உணவாகும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, வயிற்று எரிச்சல் மற்றும் குடல் கோளாறுகளைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்று அமிலத்தன்மையை உறிஞ்சி, வயிற்று எரிச்சலை குறைக்கும் பண்புடையது.
மேற்கண்ட இந்த உணவுகளை உணவில் முடிந்த அளவு சேர்த்து வர, வயிற்றுச் சூட்டினால் ஏற்படும் அசௌகரியங்கள் போய் வயிறு குளிர்ச்சி அடையும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)