

ஐஸ்கிரீம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நா ஊறும். ஐஸ்கிரீமின் மென்மையான சுவையும், அதன் குளிர்ச்சியும் பலரையும் அதற்கு அடிமையாக்கி உள்ளது என்றால் மிகையல்ல. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐஸ்கிரீமை ஒரு வேளை முழு உணவாகக் கூட சாப்பிடுகின்றனர். அவர்கள் சாப்பிடும் அளவும் அதிகம். தினசரி உணவுப் பட்டியலில் ஐஸ்கிரீம் பல நாடுகளில் இடம் பிடித்துள்ளது.
வயது வரம்பின்றி அனைவரையும் கவர்ந்த ஐஸ்கிரீம், இந்தியா போன்ற அதிக வெப்பநிலையில் இருக்கும் நாடுகளில் கோடைக் காலத்தில் மட்டும் முன்பு அதிகம் விற்பனை ஆனது. தற்போது கோடைக் காலத்தில் மட்டுமில்லாமல், பனிக்காலத்திலும் ஐஸ்கிரீமை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். நடுங்கும் குளிரில் ஐஸ்கிரீமை சாப்பிடவும் ஒரு கூட்டம் இருக்கிறது. பனிக்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதில் அறிவியல் உண்மை உள்ளதா? இதற்கு மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்னவென்று பார்ப்போம்.
ஐஸ்கிரீமிற்கும் சளிக்கும் என்ன தொடர்பு உள்ளது?
அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாகப் பார்க்கும் போது, ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் சளி நேரடியாக உருவாகுவதில்லை. ஐஸ்கிரீம் தரும் குளிர்ச்சிக்கும் உடலில் ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது போன்ற ஆரோக்கிய குறைபாடுகளுக்கு உணவின் குளிர்ச்சி காரணமல்ல, மாறாக வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளால் இது போன்ற சூழல் ஏற்படுகிறது.
பொதுவாக மனித உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கும் தனித்துவமான திறனைக் கொண்டது. நாம் சாப்பிடும் குளிர்ந்த ஐஸ்கிரீம் வயிற்றுக்குள் சென்றவுடன், அதன் குளிர்ச்சி உடனே குறைந்து, உடல் வெப்ப நிலைக்கு ஏற்பச் சூடாகத் தொடங்கிவிடும். அதனால் வயிற்றுக்குள்ளும் ஐஸ்கிரீம் குளுமையாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிடும் போது ஒரு நன்மை நிகழ்கிறது. அப்போது மூளையில் 'டோபமைன்' என்ற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மனதை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அவர்களின் முகத்தை பாருங்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள்; அப்போது கோவம் வெளிப்படாது.
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் தீமை யாருக்கு?
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஆரோக்கியமான நபர்களுக்கு எந்த தீமையும் இல்லை.
1. தொடர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது நீரிழிவு, இரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்டிரால் உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. இந்த நோய்களின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
2. சுவாசப் பிரச்னைகள், ஆஸ்துமா, சைனஸ் உள்ளவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஏனெனில், குளிர்ந்த உணவுகள் தொண்டையில் உள்ள திசுக்களைத் தூண்டி இருமலை ஏற்படுத்தும்.
3. பல் கூச்சம் உள்ளவர்களுக்குக் குளிர்ச்சியான உணவுகள் கூர்மையான வலியைத் தரும்.
4. தொண்டை புண் அல்லது தொற்று இருப்பவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அந்த இடத்திலுள்ள புண்ணை அதிகமாக்கும்.
5. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் ஐஸ்கிரீம் உள்ளிட்ட குளுமையான உணவினை தவிர்க்க வேண்டும்.
ஐஸ்கிரீம் இல்லாமல் சளி, காய்ச்சலுக்கு என்ன காரணம்?குளிர்காலம் வரும் போது, உடல்நிலையில் வெப்ப மாற்றம் வரும்; உடல் அதிக குளிர்ச்சியை உணர்கிறது. இந்த காலத்தில் வைரஸ், பாக்டீரியாக்கள் அதிகம் பரவத் தொடங்கி தொற்றை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சாதாரண குடிக்கும் தண்ணீர் மூலம் கூட தொற்று பரவலாம்.
இது மட்டுமல்லாமல் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தின் தரமும் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது. தரமற்ற சுகாதாரமற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள், அசுத்தமான தண்ணீர், கெட்டுப் போன பால் போன்றவற்றை உபயோகப் படுத்துவதால் நோய் தொற்று ஏற்படுகிறது. ஆனால், தரமான சுகாதாரமான ஐஸ்கிரீம் எந்த தொற்றையும் ஏற்படுத்தாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)