
பொதுவாக பழ வகைகளில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதென்றும் அவற்றை நம் தினசரி உணவுகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்வது அவசியம் என்றும் நாம் அறிவோம். ஆனால், இப்பதிவில் கூறப்பட்டுள்ள நான்கு வகைப் பழங்களை ஃபிரஷ்ஷாக வாங்கி உண்பதை விட ஃபிரீஸ் (Freeze) செய்து விற்கப்படுவதை வாங்கி உண்பது ஆரோக்கியம் என்றும் அதற்கான காரணங்களையும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்குகின்றனர். அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலங்களில் சில வாரங்கள் மட்டுமே நன்கு பழுத்த வைல்ட் ப்ளூபெரீஸ் பழங்கள் கிடைக்கும். அந்த நேரத்தில் அவற்றை அறுவடை செய்து 24 மணி நேரத்திற்குள் உறைந்த நிலையில் (Frozen) வைத்து விடுகின்றனர். அதனால் இப்பழங்களின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நீண்ட காலம் வரை பாதுகாக்கப்படுகின்றன. ஃபிரஷ் பழங்களை ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே உண்ண முடியும்.
ஆனால், frozen பழங்களை அதிக நாட்கள் வேண்டுமானாலும் வைத்து உண்ணலாம். இதன் மூலம் அவற்றிலுள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றை நாம் எல்லா காலங்களிலும் பெற முடியும்.
சாதாரண ப்ளூ பெரி பழங்களில் இருப்பதை விட வைல்ட் ப்ளூபெரியில் ஆந்தோசயனின் எனப்படும் நிறமி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
மாம்பழங்களை ஃபிரஷ்ஷாக உட்கொள்ளும்போது சுவை மிக்கதாகவே இருக்கும். ஆனால் அவை சரியான முறையில் பழுத்துள்ளதா என்பதைக் கண்டறிவது சிரமம். சரியாக பழுக்காதவற்றில், ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும். அதிகம் பழுத்துவிட்டால் அழுகிவிடும்; தூர எறிய வேண்டியதுதான். எனவே, நன்கு பழுத்த பழங்களை பறித்து, உடனே பைகளில் அடைத்து ஃபிரீஸ் (Freeze) பண்ணி விற்கப்படும் பழங்களை வாங்கி உட்கொள்வது அதிக நன்மை தரும்.
செரி பழங்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டும் கிடைக்கக் கூடியவை. மேலும், அவற்றிலுள்ள விதைகளை நீக்குவதும் கடினம். ஃபுரோஸன் செரி, விதை நீக்கப்பட்டு எல்லா நேரமும் கிடைக்கக் கூடியது. நன்கு பழுத்த செரி பழங்கள் பழுத்த உடனே பறிக்கப்பட்டு ஃபிரீஸ் செய்யப்பட்டுவிடுவதால் அவற்றின் இனிப்பு சுவை மற்றும் அவற்றிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிஃபினால்ஸ், ஆந்தோசயனின் போன்ற சத்துக்கள் சிறிதும் குறைவின்றி பாதுகாக்கப்படுகின்றன. முறையாக ஃபிரீஸ் செய்யப்பட்ட செரி பழங்களை சாப்பிடுவதால் அவற்றிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் உடலின் வீக்கங்களை குறைத்து ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
ஸ்ட்ராபெரி பழங்கள் பொதுவாக அதிகளவு நீர்ச் சத்தும், மென்மையான டெக்சரும் கொண்டவை. இவை நன்கு பழுத்த நிலையில் பறிக்கப்பட்டு, சில மணி நேரங்களில் ஃபிரீஸ் பண்ணப்பட்டுவிடுவதால், அவற்றின் இனிப்பு சுவை, மிருதுத் தன்மை, ஊட்டச்சத்துக்கள் ஆகியவை சிறிதும் குறையாமல் பாதுகாக்கப்படுகின்றன. கடைகளில் ஃபிரஷ் பழங்களை வாங்கி உட்கொள்வதை விட frozen பழங்கள் அதிக சத்துக்கள் தரும். வைட்டமின் C மற்றும் பாலிஃபினால்ஸ் போன்ற சத்துக்கள் ஃபிரீஸ் பண்ணிய ஸ்ட்ராபெரி பழங்களில், ஃபிரஷ் பழங்களில் இருப்பதை விட சற்று கூடுதலாகவே இருக்கும்.
பழங்கள் மரத்திலிருந்து பறிக்கப்படும் நேரத்திலிருந்து பயனாளர்களின் கைக்கு சென்றடையும் வரை போக்குவரத்து, சேமிப்பு அறைகளில் வைத்திருப்பது போன்ற செயல்பாடுகளுக்கு உட்பட்டு அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. அந்த நேரத்தில், ஸ்ட்ராபெரீஸ், கிவி, மாம்பழம், அன்னாசிப்பழம் போன்றவற்றில் உள்ள வைட்டமின் C மற்றும் ஃபொலேட் போன்ற சத்துகள் தங்கள் சக்தியை இழக்க ஆரம்பித்துவிடுகின்றன.
ஏனெனில், நீரில் கரையக்கூடிய வைட்டமின் C மிகவும் சென்சிடிவ் ஆனது. உஷ்ணம், வெளிச்சம் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவை அதன் மீது படும்போது அதன் வீரியம் குறைந்து விடுகிறது. ஃபிரீஸ் பண்ணிய பழங்களை லேசாக சூடு பண்ணி, ஸ்மூத்தி, சாலட், டெசர்ட் போன்ற உணவுகளாக்கி உண்ணும்போது அவற்றின் சத்துக்களோ சுவையோ சிறிதும் குறைவதில்லை.
குறிப்பாக, மேலே கூறப்பட்ட நான்கு வகைப் பழங்களை உறைந்த நிலையில் விற்கப்படுவதை வாங்கி உண்பதே அதிக ஊட்டச்சத்து தரும் என்று பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)