சளி, காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் தேவையா? ICMR கொடுக்கும் அதிர்ச்சி எச்சரிக்கை!

மருத்துவர் பரிந்துரை இன்றி ஆன்டிபயாட்டிக் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த உண்மைகளை உடனடியாக தெரிந்துகொள்ளுங்கள்.
Antibiotic Medicine | ஆன்டிபயாட்டிக் மருந்துகள்
Antibiotic Medicine | ஆன்டிபயாட்டிக் மருந்துகள்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சிலர் காய்ச்சல் வந்தாலே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல; உடல் கிருமிகளுடன் போராடும்போது ஏற்படும் அறிகுறி மட்டுமே. அதாவது நம் உடலுக்குள் ஏதேனும் நோய்த்தொற்று (Infection) ஏற்பட்டு இருந்தால் அதன் வெளிப்பாடாகவே காய்ச்சல் வரும்.

காய்ச்சலுக்கான காரணங்கள் ஏராளமாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் என அதற்கு வைரஸ் தொற்று தான் முக்கிய காரணமாக இருக்கும். பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. ஆனால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியா கிருமிகளை மட்டுமே அழிக்க வல்லவை.

சில நேரங்களில் பாக்டீரியா தொற்றுக்களாலும் காய்ச்சல் வரலாம். உதாரணத்திற்கு நீரிழிவு நோயாளிகளுக்கு சருமத்தில் ஏற்படும் புண்கள், பற்களில் ஏற்படும் தொற்று, பித்தப்பை கற்களால் ஏற்படும் சீழ் தொற்று என்று பல்வேறு காரணங்களாலும் காய்ச்சல் வரலாம். வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று, பூஞ்சைத் தொற்று என்று தொற்றுகளில் பலவகைகள் உண்டு. இதில் பாக்டீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

Q

அப்படியானால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எப்பொழுது தேவை?

Cold - Antibiotic Medicine | ஆன்டிபயாட்டிக் மருந்துகள்
Cold - Antibiotic Medicine | ஆன்டிபயாட்டிக் மருந்துகள்

சளி, ப்ளூ (flu) மற்றும் சாதாரண காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உதவாது. ரத்தப் பரிசோதனை அல்லது மருத்துவர் பரிசோதனையில் பாக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மருத்துவர் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை பரிந்துரைப்பார். எனவே நாமாகக் கடையில் சென்று ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுகளை, உதாரணத்திற்கு டைபாய்டு, சிறுநீரகத் தொற்று, நிமோனியா போன்றவற்றை மட்டுமே குணப்படுத்தும். பெரும்பாலான சாதாரண காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வைரஸ் தொற்றுகளால் (Viral Infections) ஏற்படுபவை. எனவே வைரஸ்களுக்கு எதிராக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எந்த பலனும் அளிப்பதில்லை.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) லேசான காய்ச்சலுக்குத் தேவையின்றி ஆன்டிபயாட்டிக் எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது. அத்துடன் சுய மருத்துவம் செய்வதால் தேவையற்ற விளைவுகள் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிட்டால், உடலின் பாக்டீரியாக்கள் அதற்குப் பழகிவிடும். எதிர்காலத்தில் உண்மையான பெரிய கிருமித் தொற்றுகள் ஏற்படும் போது அந்த மருந்துகள் உடலில் வேலை செய்யாமல் போய்விடும். அதாவது கிருமிகள் அந்த மருந்துக்கு பயப்படாமல் வாழப் பழகி விடுவதால் சாதாரண கிருமித்தொற்று கூட தீவிரமடைந்து குணப்படுத்த முடியாத நிலையை உருவாக்கும்.

குடலில் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, தீவிரமான வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

தேவையற்ற ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடு உடலில் ஒவ்வாமை (allergy), குமட்டல், வாந்தி மற்றும் தோல் அரிப்பு போன்ற உடனடி பக்க விளைவுகளைத் தரும். அத்துடன் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவது போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம்: உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்த ரகசியம்!
Antibiotic Medicine | ஆன்டிபயாட்டிக் மருந்துகள்

உடல் இயற்கையாகவே கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை இழந்து, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும்.

உடலிலுள்ள பாதுகாப்பான நுண்ணுயிரிகள் சமநிலை மாறுவதால் வாயிலோ அல்லது பிறப்பு உறுப்புகளிலோ ஈஸ்ட் (Yeast) தொற்று உண்டாகும்.

பாதுகாப்பான வழிமுறைகள்:

காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு பாராசிட்டமால் போன்ற எளிய காய்ச்சல் தணிக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

உடல் நலனைப் பேண நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். அத்துடன் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர், கஞ்சி அல்லது பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ளலாம். அத்துடன் மருத்துவரின் பரிந்துரையின்படி மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அவர் குறிப்பிட்ட நாட்கள் முழுவதும் (full course) அதை சரியாக உட்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நடக்கும்போது ஊசி போல் குத்துதா? கால் ஆணியை விரட்ட சூப்பர் டிப்ஸ்!
Antibiotic Medicine | ஆன்டிபயாட்டிக் மருந்துகள்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com