

இந்திய உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் திகழ்வதற்குக் காரணம், 2008 முதல் மூளை இறப்பு சான்றிதழ் கட்டாயம், TRANSTAN மூலம் மையப்படுத்தப்பட்ட காத்திருப்பு பட்டியல், பசுமை தாழ்வாரங்கள், அரசு ஒருங்கிணைப்பு, தன்னார்வ அமைப்புகளின் பங்கு போன்ற திட்டமிட்ட நடவடிக்கைகள். இதனால் 6,249 உறுப்புகள் 1,706 நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.
மகாபாரதக் கதையில் கர்ணனின் உடலிலிருந்த கவசக் குண்டலங்களை இந்திரன் யாசித்துப்பெற்றான் என்று அறிந்திருக்கிறோம். அது யாருக்காவது பயன்பட்டதா என்று நமக்குத் தெரியாது. ஆனால் தற்காலத்தில், நம் உடல் உறுப்புக்களைத் தானமாகக் கொடுத்தால், அதை உயிர்களைக் காக்கும் தர்மமாக இன்றைய மருத்துவம் மாற்றுகிறது.
இந்திய உறுப்பு தானத் தினம் ஆகஸ்ட் 3, உலக உறுப்பு தானத் தினம் ஆகஸ்ட் 13 அனுசரிக்கிறோம். பத்து லட்சம் மக்கள்தொகைக்கு, 1.8 பேர்கள் என்ற விகிதத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதால், இந்தியாவில் தமிழ்நாடு (2022ஆம் ஆண்டு) முதல் முதலிடத்தில் வகிக்கிறது. இது தேசியச் சராசரியை (0.05-0.08) விட ஏழு மடங்கு அதிகமாகும்.
20 செப்டம்பர் 2008 அன்று, ஹிதேந்திரன் என்ற பதினைந்து வயது இளைஞர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவப் பெற்றோர்களான அசோகனும், புஷ்பாஞ்சலியும் முடிவு செய்தனர். ஹிதேந்திரனின் உறுப்பு தானத்தால் ஏழு பேர் பயனடைந்தனர்.
உறுப்பு தானம் என்பது இறந்தவர்களின் உறுப்பையோ தசையையோ தானமாகத் தருவது. இதன் மூலம் தானம் பெற்றவர் குறைபாடு நீங்கி நலம் பெறுவார்.
ஒருவர் உயிருடன் இருக்கும் போது (அன்பினாலும், உறவினாலும்) ஒரு சிறுநீரகம், கணையம் மற்றும், கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகக் கொடுக்கலாம்.
இறந்த பிறகு உறுப்புகளில் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம், குடல் மற்றும் கைகளையும், மேலும் தசைகளில் சருமம், இதய வால்வுகள், எலும்பு, தசை நாண்கள், தமனிகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கலாம்.
மூளைத் தண்டு இறப்பு ஏற்பட்டால் ஆறு உயிர் காக்கும் உறுப்புகள் உட்பட, முப்பத்தேழு வகை உடற்பகுதிகளைத் தானமாகக் கொடுக்கலாம்.
இதய மரணம் ஏற்பட்டால் கண்கள், எலும்பு, சருமம், இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் தசைகளைக் கொடுக்கலாம்.
உச்ச வயது வரம்பு கிடையாது. இந்த மாற்று அறுவை இறந்தவரின் உடலில் எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தாது.
இதற்குக் காரணிகளாக அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ்க்கண்ட செயல்களை அடுக்கலாம்:
இந்தியாவிலேயே முதலாவதாக, 2008-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மூளை இறப்பு சான்றிதழைக் கட்டாயமாக்கியது.
மூளை மரணத்தைச் சான்றளிக்கக்கூடிய உறுப்பினர்களின் குழுவை விரிவுபடுத்தியது.
செப்டம்பர் 2008-இல் தமிழ்நாடு பிண மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை (CTP) தொடங்கியது.
தமிழ்நாடு மாற்று ஆணையம் (TRANSTAN) மூலம் மூளை மரணம் குறித்த தெளிவான நடைமுறைகளை நிறுவியது.
உறுப்புகளின் சரியான ஒதுக்கீடுகளை உறுதி செய்வதற்காக மையப்படுத்தப்பட்ட காத்திருப்பு பட்டியல் அமைப்பை உருவாக்கியுள்ளது.
தானம் செய்யப்பட்ட உறுப்புகளை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 'பசுமை தாழ்வாரங்களை' உருவாக்கியது.
2023ம் ஆண்டில் பிறபித்த உத்தரவுப்படி உறுப்பு தானம் செய்தவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யத் தமிழக அரசு முடிவுசெய்தது.
(Sep 24, 2023: Organ donors will be accorded "full state honours" during their funeral in Tamil Nadu, chief minister MK Stalin announced on State Organ Donation Day - news paper report)
அரசாங்க ஒருங்கிணைப்புக்குப் பிறகு, 6 முதல் 8 மருத்துவமனைகளில் நடந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பணிகள் 40 - மருத்துவமனைகளாக உயர்ந்தது.
MOHAN (Multi Organ Harvesting Aid Network) அறக்கட்டளை போன்ற லாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் களப்பணிகள் பெரும் அளவில் உதவி வருகின்றன.
2008ல் ஏழு நன்கொடையாளர்களே இருந்தனர். அதன் பிறகான ஐந்து வருடத்தில் 2,000க்கும் மேற்பட்ட மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014 முதல் 2016 வரை, அரசு, 887 நன்கொடையாளர்களிடமிருந்து 4,938 உறுப்புகளை மாற்றியது.
2015-2020 ஆகிய ஆறு வருடங்கள் தொடர்ந்து இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்து வருகிறது தமிழகம்.
இது வரை தமிழகம் 6,249 உறுப்புகள் 1,706 பேர்களிடம் தானமாகக் கிடைத்துள்ளது
இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
TRANSTANஇன் உறுப்பினர் செயலாளர் R காந்திமதியின் கூற்றுப்படி, தமிழ்நாடு மட்டுமே "சருமம், திசுக்கள், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயம் போன்றவற்றை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறது, மற்ற மாநிலங்கள் இதயம் மற்றும் சிறுநீரகங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன."
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பானது (NOTTO) தேசிய உருப்பு மாற்றும் திசு மாற்று அமைப்பு தேசியச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் நிறுவனம் ( உதவி எண் : 1800 11 4770).
Organ india என்ற அமைப்பின் தகவல் படி ,மார்ச் 3, 2026 நிலவரப்படி இந்தியாவில் முக்கிய உறுப்புகளுக்கான மொத்தத் தேசிய காத்திருப்பு பட்டியல் 89,839ஆக உள்ளது. அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டு முழுவதும் நாடு, 20,019 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது.
சிறுநீரகம் - 63,000 பேர்களும், கல்லீரல்: 22,000, இதயம்: 1,695, நுரையீரல்: 970, கணையம்: 306, நோயாளிகள் இவ்வுறுப்புகள் வேண்டிக் காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் 1.5 லட்சம் பேர்கள் மூளைச் சாவு ஏற்பட்டு விபத்துகளில் இறக்கிறார்கள். இதில் வெறும் 0.86 சதவிகிதம் தான் உறுப்பு தானம் செய்கிறார்கள்.
வருடத்திற்கு 5 லட்சம் உறுப்புகள் தேவைப்படுகிறது. அவற்றுள் 2-3 சதவிகிதம் பேர்களை மட்டுமே நம்மால் காப்பாற்றமுடிகிறது.
ரத்த தானங்களைத் தொடர்ந்து கண் தானங்கள் பிரபலம் ஆனது போல மற்ற உடல் உறுப்பு தானங்களும் பரவலாக ஆகுமானால் இந்த காத்திருப்பு பட்டியலும் குறையும்.
நம் நெருக்கத்தில் “யார் அடுத்த கர்ண மகாப்பிரபு” என்று சொல்லும் காலம் வெகு விரைவில் வரும்!
மரணத்திற்குப் பிறகு மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னத வழிகளைத் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம், உங்களது குடும்பத்தினரின் எதிர்கால மருத்துவ விழிப்புணர்வை மேம்படுத்தி பல உயிர்களைக் காக்க உதவும் பங்களிப்பை உங்களால் வழங்க முடியும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference