நமது உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் உள்ளது. கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்போதும் சிறப்பான ஒன்றாகும். கல்லீரல் நன்றாக இயங்கினால்தான் உடலை வேறு எந்த நோயும் தாக்காது. நமது உடல் நலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணமாக உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை உள்ளன. மோசமான வாழ்க்கை முறை உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து பல்வேறு வகையான நோய்களுக்கு இடம் அளிக்கிறது.
மோசமான உணவுமுறை கல்லீரல், இதயம், செரிமான மண்டலம் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கிறது. கொழுப்பு மிகுந்த உணவு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பைச் சேர்த்து கல்லீரல் கொழுப்பு நோய்க்கு வழிவகுக்கிறது. கல்லீரல் கொழுப்பு நோயை சில பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். ஆரம்ப காலத்திலேயே கல்லீரல் கொழுப்பை சரியாக சிகிச்சை அளித்து குணப்படுத்தினால் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை பெருமளவில் குணப்படுத்த முடியும். சரியான உணவுப் பழக்க வழக்கங்களுடன் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த வகை தேநீர் கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கோப்பை தேநீர் ஒரு மாதத்திற்கு குடித்து வந்தால், அது கல்லீரலின் கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியத்தை விரைவாக மேம்படுத்துகிறது.
கொத்தமல்லி ஏலக்காய் தேநீர்
ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள் மற்றும் 2 நசுக்கிய ஏலக்காயை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். 2 கப் தண்ணீர் நன்கு ஆவியாகி ஒரு கப் தண்ணீராக மாறும் வரையில் கொதிக்க விடவும். பிறகு தேநீரை வடிகட்டி விட்டு மிதமான சூட்டில் பருகவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன்களை தரும். இரவு கூட இந்த கொத்தமல்லி ஏலக்காய் தேநீர் பருகி விட்டு படுக்கலாம். நல்ல தூக்கம் வரும். இந்த தேநீர் கல்லீரலை சீர் படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுகிறது.
பலன்கள்:
ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இரண்டும் தினசரி சமையலில் பயன்படுத்தும் பொருளாக இருப்பதால் தேவையற்ற செலவும் கிடையாது. கொத்தமல்லி இலைகள் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. கொத்தமல்லி நிறைய ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது கல்லீரலை ஆரோக்கியமாக்குகிறது.
கொத்தமல்லி இலைகளில் காணப்படும் சாறு கல்லீரலில் உள்ள நச்சினை நீக்குகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நோய்களில் இருந்து காக்கிறது.
கொத்தமல்லி நார்ச்சத்து நிறைந்ததால் இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கொத்தமல்லியிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொழுப்பு நிறைந்த கல்லீரலை குணப்படுத்த உதவுகின்றன.
ஏலக்காயில் ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ஏலக்காயில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் கல்லீரல் நொதிகளின் சுரப்பை அதிகரிக்கின்றன. ஏலக்காய் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரலை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை அளிக்கிறது. இது இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை நீக்குவதால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இந்த வகையில் ஏலக்காய் - கொத்தமல்லி தேநீர் கல்லீரல் கொழுப்பு நீக்கும் பானமாக உள்ளது.
எனினும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இந்த தேநீர் பருகும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும் .