சர்க்கரைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அபாயம், உடலில் கூடுதலாக இருக்கும் சோடியம் – உப்பு தான்!
AHA எனப்படும் அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேஷன் ஒரு நாளைக்கு ஒருவர் 2300 மில்லிகிராம் உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால் ஒவ்வொரு அமெரிக்கரும் 3500 மில்லிகிராம் உப்பை ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த 2300 மில்லிகிராமையும் குறைத்து இலட்சிய அளவான ஒரு நாளைக்கு 1500 மில்லிகிராம் என்ற அளவை ஒவ்வொரு அமெரிக்கரும் அடைய வேண்டும் என்று மேலும் அது பரிந்துரைக்கிறது.
இதை விட இப்போது முக்கியமாக TRENDING ஆகப் பேசப்படும் பேசுபொருளாக ஆகி இருப்பது சோடியம் - பொடாஸியம் விகிதம் தான்!
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டியது இந்த விகிதத்தின் மீதுதான் என்பது லேடஸ்ட் அறிவுரை.
இலட்சிய அளவாக அனைத்து நிபுணர்களும் பரிந்துரைப்பது 4700 மில்லிகிராம் பொடாஸியமும் 2300 மில்லிகிராம் சோடியமும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சோடியமும் பொடாஸியமும் தான் உடல் இயக்கத்திற்கான முக்கியமான எலக்ட்ரொலைட்டுகளாகும்.
சோடியம் ப்ளூயிட் பாலன்ஸையும் இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கிறது.
பொடாஸியமோ தசை இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த இரண்டும் சரியான அளவில் இருந்தால் சக்தி வாய்ந்த உடல் ஆரோக்கியத்திற்கான கூட்டு சக்தியைத் தருகிறது.
ஒவ்வொருவரும் 4700 மில்லிகிராம் பொடாஸியம் சேர்த்துக் கொள்வதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். உப்பை 2300 மில்லிகிராமாகக் குறைக்க வேண்டும்.
இதை எப்படி அடைவது?
வாழைப்பழம், அவகாடோ எனப்படும் பட்டர் பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பொடாஸியம் அதிகம். உருளைக்கிழங்கு, பால், யோகர்ட் இவற்றிலும் பொடாஸியம் இருக்கிறது. இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது சிறுநீரில் ஆக்கபூர்வமான நல்ல விளைவை ஏற்படுத்தும்.
உப்பை அன்றாட உணவில் குறைப்பது மட்டும் போதாது, பதப்படுத்தப்பட்ட உணவையும் உட்கொள்ளக் கூடாது. இதில் அதிகமாக உப்பு உள்ளது. ஆகவே தவிர்க்க வேண்டும்.
கடைக்குச் சென்று அப்போதே சந்தைக்கு வரும் கறிகாய்களை வாங்குவது எப்போதுமே நல்லது.
கடையில் வாங்கவிருக்கும் உணவுப்பொருள்களின் லேபிளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். அதில் உப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்து அதிகமாக இருந்தால் அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு நல்ல சோடியம் – பொடாஸியம் விகிதமானது பக்கவாதம் வராமல் தடுக்கும். சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும்.
இப்போது யாரும் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதால் ஆரோக்கியமான உலகை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புள்ள அனைவரும் இந்த விஷயத்தை முதலும் முக்கியமுமான பேசுபொருளாக்கி விட்டார்கள்.
ஆக வளமோடு வாழ அளவோடு உப்பு – அவ்வளவுதாங்க!