
உள்ளாடை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், அவை நம் உடல் நலத்திலும், வசதியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உள்ளாடைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது துணியின் தரம், அதன் சுவாசிக்கும் தன்மை, சரியான அளவை தேர்ந்தெடுப்பது மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ற (விளையாட்டு, பயணம் போன்ற செயல்பாடுகளுக்கு ஏற்ற) உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.
பெரும்பாலும் வெளிப்புற ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாம் உள்ளாடைகளுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பழைய இறுக்கமான, நைந்து போன உள்ளாடைகளை அணிவது சரும நோய்களை உண்டாக்கும்.
வெளிப்புற ஆடையைக் காட்டிலும் உள்ளாடைகளுக்கு அதிக கவனமும் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். ஏனென்றால், அவை அதிக சென்சிடிவான அந்தரங்க பகுதிகளை பாதுகாக்கும் ஆடையாகும். பருத்தி மற்றும் மூங்கில் உள்ளாடைகள் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. எனவே, உடற்பயிற்சி செய்யும் சமயங்களிலும், பயணம் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையிது.
அவரவர் உடலுக்கு ஏற்றபடி அதிக இறுக்கமற்ற பருத்தியாலான உள்ளாடைகளை அணிவதும், பள்ளி, அலுவலகம், கல்லூரி என செல்லும் நபர்கள் வீட்டுக்கு வந்தவுடன் உள்ளாடைகளை மாற்றி வேறொரு உள்ளாடையை அணிவதும் சிறப்பு.
அதேபோல் இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கலாம். இதன் மூலம் நம் சருமம் சிறிது நேரமாவது நல்ல காற்றோட்டத்துடன் இருப்பதால் அலர்ஜி, அரிப்பு, தடித்து போகுதல், சிவந்து போகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
உள்ளாடைகளைப் பொருத்தவரை நோய் தொற்றுகளை அதிகரிக்கும் என்பதால், ஒவ்வொரு முறை உபயோகத்திற்கு பின்பும் முறையாக துவைக்க வேண்டும். அந்தரங்க உறுப்புகளை பாதுகாக்கும் இவை அணியும் போது ஈரம் இல்லாமல் உலர்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஈரமான உள்ளாடைகள் சரும எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் சூரிய ஒளிபடும் இடத்தில் துவைத்து காய வைக்க வேண்டும். மற்ற ஆடைகளுடன் உள்ளாடைகளை சேர்த்து துவைப்பதை தவிர்க்க வேண்டும். சரும நோய்கள் எதுவும் இருந்தால் உள்ளாடைகளை துவைப்பதற்கென்று தனி சோப் பயன்படுத்த வேண்டும்.
உள்ளாடைகளை நீண்ட நாட்கள் உபயோகிப்பதை தவிர்த்து வழக்கமான இடைவெளிகளில் மாற்றுவது நல்லது. குழந்தைகளுக்கான உள்ளாடைகளை தேர்வு செய்யும் போது அதிக கவனம் தேவை. குழந்தைகளின் சருமம் மென்மையானது என்பதால் இயற்கையான, மென்மையான பருத்தி துணியாலான உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.
பெண்களுக்கான உள்ளாடை விஷயங்களில் வசதி, ஸ்டைல், கவரேஜ் மற்றும் ஆடைகளின் பொருத்தமான தன்மை ஆகியவை மிகவும் முக்கியம். உள்ளாடை தேர்வு என்பது ஒருவரின் உடலமைப்பு, தினசரி பயன்பாடு மற்றும் அணியும் ஆடைகள் போன்ற பல காரணிகளை பொறுத்தது.
உள்ளாடைகள் அணிவது வசதியாக இருப்பதுடன் போதுமான கவரேஜையும் வழங்க வேண்டும். மிகவும் இறுக்கமான அல்லது மிகவும் தளர்வான உள்ளாடைகள் வசதியற்றதாக சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, சரியான அளவுள்ள உள்ளாடைகளை தேர்வு செய்வது, சருமத்துடன் உராய்வைக் தவிர்ப்பதுடன் வசதியாகவும், நீண்ட நேரம் அணியக் கூடிய வகையிலும் இருக்கும்.
ஆண்களுக்கான உள்ளாடை விஷயங்களில் உடலுக்கு பொருத்தமான அளவு, வசதியான மற்றும் சுவாசிக்கக் கூடிய பருத்தி மற்றும் மூங்கில் போன்ற துணியாலான உள்ளாடைகளை அணிவதும், அன்றாட உபயோகத்திற்கு ஏற்ற பாக்ஸர்கள், ட்ரங்குகள் போன்ற வடிவமைப்பு மற்றும் தரம் வாய்ந்த தயாரிப்புகளையும் அணியலாம்.
முழுமையான கவரேஜ் மற்றும் வசதியை விரும்புபவர்களுக்கு பாக்ஸர்கள்(Boxers) ஏற்றது. இறுக்கமான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு ட்ரங்குகள்(Trunks/Boxer Briefs) ஏற்றது. சிலருக்கு மிகவும் குறைந்த கவரேஜை வழங்கும் ப்ரீப்ஸ்(Briefs) பொருத்தமாக இருக்கும். இது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.
உள்ளாடைகள் வெறும் ஆடையல்ல. அவை சருமத்தை பாதுகாக்கும் கவசங்கள் என்பதால் உடல் வகைக்கு ஏற்றவாறு சரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். உள்ளாடைகளை துவைக்கும் பொழுது ப்ளீச் மற்றும் வாசனை திரவியங்கள் இல்லாத, மென்மையான சலவை சோப்பை பயன்படுத்த வேண்டும்.