'சுத்தம் சோறு போடும்'... அப்படியானால், 'எது குழம்பு ஊற்றும்?'

Washing hands
Washing hands
Published on

‘சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழியை, ‘அப்படியானால் எது குழம்பு ஊற்றும்?’ என்று கேட்டு கிண்டல் செய்யும் நம்முடைய மனப்பக்குவத்தாலோ என்னவோ, சுத்தம் நம்மை நெருங்கவே பயப்படுகிறது. அடிப்படை சுத்தம்கூட பயிற்றுவித்தால்தான் அறியப்படுகிறது!

பரந்த மனப்பான்மை கொண்டால்தான் எங்கும், எதிலும் சுத்தத்தை நாம் பெருமைபடுத்த முடியும். தன் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் நம் வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டிற்குள் ரகசியமாகக் கொட்டுவதிலிருந்து, சாலையில் எங்கும், எப்படியும் அசுத்தம் செய்யலாம் என்று அந்தப் பண்பை ஜீவாதார உரிமையாகவே பழகிவிட்டதுவரை நாம் அசுத்தத்துக்குத் துணை போகிறோம்.

வீட்டுனுள் சுத்தத்தை ஓரளவுக்காவது கடைப்பிடிக்க முடிந்த நம்மால், அதே நாகரிகத்தை சாலை போன்ற வெளியிடங்களில் அனுசரிக்க முடியாதது ஏன்? வேண்டாத தாளை அல்லது பேருந்து பயணச் சீட்டை தெருவிலேயே கசக்கி எறிகிறோம்; நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் புகைப் பிடிப்பதால்தான் உண்டாகிறது என்ற உண்மையை விளக்கியும், இன்னமும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடமுடியாமல், ஊரெங்கும் நச்சுப் புகையைப் பரப்புவதோடு, சிகரெட் துண்டுகளைத் தெருவிலேயே அப்படியே போட்டு விடுகிறோம். வாய்ப் புற்று நோய், புகையிலையை வாயில் அடக்கிக் கொள்ளும் தீய வழக்கத்தாலேயே என்ற உண்மையை வலியுறுத்திச் சொல்லியும் அந்தப் பழக்கத்தை விடாததோடு, புகையிலை சாலையிலேயே துப்பவும் செய்கிறோம்.

தனிமனித ஒழுங்கீனம் தவிர, வாகனப் புகை, தொழிற்சாலைகள் புகை என்று சுற்றுச் சூழலை பெரிதும் மாசுபடுத்தும் அம்சங்களும் நம்மிடையே ஏராளமாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
உங்கள் ட்ரஸில் இருக்கும் XL, XXL அளவுகளில் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
Washing hands

இந்த வெளி மாசுகளுக்கிடையே புழங்கி, வீட்டிற்குத் திரும்பும் நாம் உடலெங்கும் மாசு அணுக்களை சுமந்து வருகிறோம். அந்த காலத்தில், வெளியே போய்விட்டு வருபவர்களை வாசலிலேயே நிறுத்தி, கை, கால்களை நன்றாகக் கழுவிவிட்டு அதன்பிறகே வீட்டிற்குள் அனுமதித்தார்கள். விருந்தினர்களையும் அப்படிக் கேட்டுக்கொண்டதும் உண்டு. கை, கால் என்று குறிப்பாக ஏன்? இரு கைகளும், பாதங்களும்தான் வெளி அசுத்தத்துடன் நேரடி தொடர்பு கொள்பவை. நடந்து செல்வதால் பாதங்களிலும், வீசிச் செல்வதால் கைகளிலும் கிருமிகள் படிகின்றன; வீட்டிற்குள்ளும் வந்துவிடுகின்றன.

பெரும்பாலும் சிறு குழந்தைகள்தான் இந்தக் கிருமிகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட இரண்டு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர் என்ற புள்ளி விவரம் அதிர்ச்சியைத் தருகிறது. கைகளை சுத்தமாகக் கழுவுவதன் மூலம் வயிற்றுப் போக்கு பாதிப்பை 45 சதவிகித அளவுக்குக் குறைத்துவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோல, நிமோனியா பாதிப்பு ஏற்படாமலும் காக்க முடியும்.

வெளியேயிருந்து வீட்டிற்குள் நுழையும் நாம் முதலில் நம் கைகளை நன்றாக, சுத்தமாகக் கழுவிவிட்டு, நல்ல துணியால் துடைத்துக் கொண்டுதான், பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேபோல எதையும் சாப்பிட்ட பிறகு அந்தக் குழந்தைகளுக்கு முழுமையாகக் கை கழுவி விடவேண்டும். தரையில் அமர்ந்து, தரையைத் தொட்டு அல்லது ஏதேனும் விளையாட்டுப் பொருட்களோடு விளையாடும் குழந்தைகளுக்கு அவ்வப்போது கை கழுவி விடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
இந்தப் பழத்தோடு இதையும் சேர்த்து சாப்பிட்டால் பிரச்னைதான்!
Washing hands

இயல்பாகவே வாயில் கை விரல்களைப் போட்டுக் குழப்பிக் கொள்வது பல குழந்தைகளுக்கு இயல்பு. இதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். வெளியிலிருந்து வந்ததும் பசிக்கு முன்னுரிமைக் கொடுத்து கைகளை சுத்தமாகக் கழுவிக்கொள்ளாமல் அப்படியே சாப்பாட்டுத் தட்டின் முன் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

கைகளைக் கழுவி, கிருமிகளை விலக்கி, வயிற்றையும், உயிரையும் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com