
இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில் பலரும் உடல் எடை குறைப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பல வழிகளைத் தேடுகின்றனர். அவற்றில் பிரபலமானது இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் (Intermittent Fasting) முறை. இந்த பாஸ்டிங் முறையில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட எப்போது சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே உணவை எடுத்துக்கொண்டு, மற்ற நேரத்தில் உணவிற்கு இடைவெளிவிடும் ஒரு முறை ஆகும்.
இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் முறைகள்
இந்த பாஸ்டிங் முறைகள் பலவகையாக உள்ளன.
இதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறை 16/8 ஆகும். இதில் தினமும் 16 மணி நேரம் பாஸ்டிங்கில் இருந்து மீதமுள்ள 8 மணி நேரத்தில் உணவு உட்கொள்வதாகும்.
அதன்பின்னர் 5/2 முறை, இதில் வாரத்தில் ஐந்து நாட்கள் சாதாரணமாக உணவு சாப்பிடப்படுவதுடன், இரண்டு நாட்கள் மட்டும் குறைந்த கலோரி கொண்ட உணவை எடுத்துகொள்வதாகும்.
அதேபோல், OMAD (One Meal A Day) முறை என்பது ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது
என பல விதமாக இன்டெர்மெட்டென்ட் பாஸ்டிங் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம் பல நன்மைகளும் ஏற்படுகிறது.
இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் முறையின் நன்மைகள்:
வளர்ச்சிதை மாற்றங்களை சீராக வைத்திருக்கும்
உடல் எடையை குறைக்க உதவும்
கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும்
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்
ஹார்மோன் சுழற்சி சமநிலையாக இருக்கும்
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக அகற்றும்
புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை தடுக்க உதவும்
மறதி மற்றும் நரம்பு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த உதவும்
வாழ்நாளை நீடிக்கவும் இந்த பாஸ்டிங் முறை பெரிதும் உதவியாக இருக்கிறது.
பக்கவிளைவுகள்:
இதன் நன்மைகளை போலவே இந்த பாஸ்டிங் முறையை பின்பற்றுவதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் முக்கியமானவை,
ஆரம்ப நிலையில் அதிக பசிக்கு காரணமாக கோபம் மற்றும் சோர்வு ஏற்படலாம்
உடலில் சக்தி குறைவதால் மன அழுத்தம், கவலை போன்ற மனநல பிரச்னைகள் ஏற்படலாம்
சிலருக்கு தலைசுற்றல், கவனச் சிதறல் ஏற்படக்கூடும்
நீண்ட நேரம் உணவு இல்லாமல் இருப்பதால் சில சமயங்களில் மிகுந்த பசியால், அதிகமாக உணவு உண்ணும் வாய்ப்பு உருவாகலாம்.
கர்ப்பிணி பெண்கள் சரியான மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்ற பிறகே இந்த பாஸ்டிங் முறையை தொடங்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதே இந்த பாஸ்டிங் முறையின் சிறப்பாகும். இந்த காலத்தில் 40% மாவுப்பொருட்கள், 30% புரதம், 30% நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தியையும், செரிமானத்திற்கும் தேவையான சத்துக்களையும் பெறும். இந்நிலையில், இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் உணவு முறையை சரியாக பின்பற்றினால் அது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பல நன்மைகளை தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)