‘பிராணாயாமம்’ - சுவாசத்தின் போக்குவரத்தை சீராக்கும் யோகப் பயிற்சி!

International Day Of Yoga - 21st June, 2025
Pranayama doing method
Pranayama doing method
Published on

பிராணாயாமம் என்பது மூச்சை ஒழுங்குபடுத்துதல் என்று பொருள். ஆசனப் பயிற்சி, பிராணாயாமத்திற்கு தயார் செய்கின்றது. பிராணாயாமம் தியானத்திற்கு தயார் செய்கின்றது. பண்டைய யோகிகள் பிராணாயாமத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். மகாபாரதத்தை இயற்றிய வியாசர் பிராணாயாமத்தை மனித உடலை தூய்மைப்படுத்த மிகச்சிறந்த உத்தி என்று கூறியிருக்கிறார்.

பிராணாயாமம் என்பதன் உட்கூறுகள் :

மூச்சை வெளி விடுதல்(ரேசகம்), மூச்சை உள் இழுத்தல்(ஊரகம்), மூச்சை தக்க வைத்துக் கொள்ளுதல் (கும்பகம்) என்பன.

ஆசனங்கள் மற்றும் பிராணாயாமம் செய்யும் பொழுது மூச்சை சரியாக பிரயோகித்தல் ஒரு முக்கியமான அம்சமாகும். மூச்சை நிலைப்படுத்தாத ஆசனப் பயிற்சி இல்லை.

உஜ்ஜயி பிராணாயாமம் என்பது மூக்கின் வழியே மூச்சு விடும் பொழுது தொண்டையில் சிறிய தடை உள்ளவாறு செய்து தொண்டையில் மெல்லிய ஓசை வரும்படி செய்ய வேண்டும். இதற்கு உஜ்ஜயீ பிராணாயாமம் என்று பெயர்.

மூச்சை வெளியிடுதல் கீழ் வயிற்றுப்பகுதியில் ஆரம்பித்து மார்புப் பகுதிக்கும், மூச்சை உள் இழுத்தல் மார்பு பகுதியில் ஆரம்பித்து வயிற்றுப் பகுதிக்குக் கீழ் நோக்கியும் வரவேண்டும்.

சரியான முறையில் மூச்சு விட பயிலும் பொழுது முதுகு தண்டிற்கு மெல்லிய அசைவு கொடுக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது மார்பு விரிவடைந்து முதுகுத்தண்டு மேலும் நிமிர்கிறது. மூச்சை வெளியிடும்போது வயிற்றுப் பகுதி சுருங்கி பின்னோக்கி முதுகுத்தண்டின் பக்கம் சென்று மார்பும் சுருங்குகின்றது.

இதையும் படியுங்கள்:
'என் சுவாசக் காற்றே' - நீடித்து வாழ சுவாச ரகசியம்!
Pranayama doing method

நாசி துவாரம் வழியாக மூச்சு விடுதல்:

இந்த முறை ஒரு துவாரத்தின் வழியாக மூச்சு விடுதலையும் விரல்களின் பிரயோகத்தையும் குறிக்கின்றது. யோகக் கலை, விரல்களால் கட்டுப்படுத்தி நாசித்துவாரம் மூலமாக மூச்சு விடும் பல உத்திகளை உள்ளடக்கி உள்ளது .

பிராணாயாமங்கள் சிலவற்றில் உள்ளிழுத்தல் இரு நாசி துவாரங்களிலும் மாற்றி மாற்றியும், சிலவற்றில் வெளி விடுதல் மாற்றி மாற்றி செய்யப்பட வேண்டும். சிலவற்றில் உள்ளிழுத்தல் வெளிவிடுதல் ஆகிய இரண்டும் மாற்றி மாற்றி செய்யப்படுகின்றன. இம்முறை ஒவ்வொரு உத்திக்கேற்ப மாறி பல நன்மைகளை அளிக்க வல்லது.

இந்த முறையில் பயிற்சி செய்வதற்கு ஒரு துவாரத்தை மொத்தமாக மூடி மறுதுவாரத்தை பாதி திறந்து (அதாவது எதன் வழியாக மூச்சு விடுகின்றோமோ) வைத்திருக்க வேண்டும். இதற்கு கைவிரல்களை ம்ருகி முத்திரை என்ற நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆள்காட்டி விரலும் நடு விரலும் உள்ளங்கையை நோக்கி மடிந்திருக்க, இந்த விரல்களை கட்டை விரலால் அழுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.

சுண்டு விரல் மோதிர விரலை ஒட்டி இருக்க வேண்டும். நாசித்துவாரம் வழியாக மூச்சு விடுதல் நாடி சுத்தி பிராணாயாமத்தில் மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும் போதும் உபயோகப்படுத்தப்படுகின்றது. சீதலீ, அநுலோமா, விலோமா, பிரதி லோமா ஆகியவற்றின் ஒரு பகுதியில் உபயோகப்படுத்தப்படுகிறது.

வாய் வழியே மூச்சு விடுதல்;

சீதலி பிராணாயாமத்தில் நாக்கை ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்து பிரயோகிக்கப்படுகின்றது. இன்னொரு வகை மூச்சை வெளியிடும் போது வாயால் ஓசை எழுப்புவதாகும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு நடைபயிற்சி… மனதுக்கு மூச்சு பயிற்சி!
Pranayama doing method

எண்ணிக்கையும் எண்ணுதலும்: பிராணாயாமம் என்பது சுயநினைவோடு மூச்சை ஒழுங்குபடுத்துவதால் ஒரு மூச்சு ஒரு பிராணாயாமம் ஆகும். இதை பலமுறை செய்ய வேண்டும். இதையே பிராணாயாம பயிற்சி என்கிறோம். பொதுவாக இந்த பயிற்சி குறைந்தது 12 மூச்சுகள் கொண்டதாக இருக்கும். 16, 24 தடவைகளும் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. பல ஆரம்ப நிலை பயிற்சியாளர் 12 முறை மட்டுமே செய்ய முடியும். அப்பொழுது சில மாற்றங்கள் புகுத்தப்படுகின்றன. நான்கு முறை செய்த பின் சில நிமிடங்களுக்கு சிறிது ஓய்வு எடுத்து பயிற்சியை தொடர்கிறார்கள்.

நல்ல தூக்கத்திற்கு - மாலை நேர பயிற்சி : மூச்சை உள்ளிளுக்கும் போது மறையும் சூரியனை கற்பனை செய்து, வெளிவிடும் போது ஆசுவாசம் அடையலாம்.

தன்னம்பிக்கை வளர்வதற்கு - காலை நேர பயிற்சி: சக்தி உடலுக்குள் வருவதை உள்ளிழுக்கும் போது கற்பனை செய்து உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்வதை உள்ளிழுத்த பின் தக்க வைத்துக் கொள்ளும் போதும், மூச்சு வெளியிடும்போது மனதில் தன்னை நன்றாக நிலைப்படுத்துவது போன்றும் கற்பனை செய்யலாம்.

மேலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது இறைவனை மனதிற்குள் வரவழைப்பதும், பின் தக்க வைத்துக் கொள்ளும் போது அவருடைய தெய்வீகமான சக்தியை உணர்வதும், மூச்சை வெளியிடும் போது நாம் அன்பு செலுத்துபவர்களோடு அந்த தெய்வீக சக்தியை பகிர்ந்து கொள்வது போலவும், அதன் பின் தக்க வைத்துக் கொள்ளும் போது இறைவனிடம் சரண் அடைவது போலவும் கற்பனை செய்து கொள்ளலாம் . இதனால் பிராணாயாமத்தில் முழு பலனையும் அடைந்த திருப்தி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் 9 யோகா முறைகள்!
Pranayama doing method

பிராணாயாமத்தின் சிறப்புகள்:

பிராணாயாமம் செய்தல் மூலம் சுவாசத்தினுடைய போக்குவரத்து ஒழுங்காகிறது. பிராணனுடைய செயலும் அதனால் ஒழுங்குபடுகிறது. அத்துடன் பிராணாயாமத்தில் துணை கொண்டு உடலில் அடித்துக் கொண்டிருக்கின்ற நாடிகளை சுத்தப்படுத்தலாம். பிராணாயாமம் மூலம் தேகத்தை ஒரு தேவாலயமாக ஆக்கிவிடலாம். ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை அறியலாம். அப்போது காலம் கடந்து கொண்டிருப்பது சிறிதேனும் தெரியாது. காலத்தை கடந்த நிலையில் அமைதியுற்று இருக்கலாம். அப்போது மனிதனுக்கு சீரியத் தேக்கம் உண்டாகிறது. சமாதி நிலை என்று கூட அதை சொல்லலாம். இது ஒரு சிறப்பான நிலையாகும்.

இந்த நிலையில் சனியின் ஆதிக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது, ஏழரைச் சனியின் இன்னல்களைக் குறைக்க பிராணாயாமமும் ஒரு சிறந்த உபாயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com