குழந்தைகளுக்கு தினமும் முட்டை தருவது நல்லதுதான்! ஆனால்... இது மட்டுமே போதுமா?

மூளை வளர்ச்சி, கண் பார்வை மற்றும் தசை உருவாக்கத்திற்கு முட்டை அளிக்கும் சத்துகளின் பட்டியல்.
Baby & Egg - குழந்தைகளுக்கு முட்டை
Baby & Egg - குழந்தைகளுக்கு முட்டை
Updated on

முட்டை என்பது எளிதில் கிடைக்கக்கூடிய உணவு மட்டுமல்ல; குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகளை ஒரே உணவில் வழங்கும் சிறந்ததொரு உணவாகும். உயர்தரப் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நல்ல கொழுப்புகள் உள்ளிட்ட பல சத்துக்கள் இதில் உள்ளன.

மேலும் இது குறித்து பெற்றோர்களுக்கு உள்ள பொதுவான சந்தேகங்களை முழுமையாக விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.

Q

வளர்ச்சிக்குத் தேவையான புரதம் கிடைக்குமா?

A

முட்டையில் உள்ள உயர்தரப் புரதம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், தசைகள் மற்றும் திசுக்களின் உருவாக்கம் மற்றும் பழுதுபார்ப்பிற்கும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் போதுமான புரதம் இருப்பது மிகவும் அவசியம்.

Q

மூளை வளர்ச்சிக்கு முட்டை எப்படி உதவுகிறது?

A

முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் (Choline) என்ற முக்கிய ஊட்டச்சத்து உள்ளது. இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு தேவையானது. குழந்தைப் பருவத்தில் மூளை வேகமாக வளர்வதால், கோலின் போன்ற ஊட்டச்சத்துகளுக்கு முக்கியத்துவம் உள்ளது.

Q

கண் பார்வைக்கு என்ன பயன்?

A

முட்டையில் வைட்டமின் ஏ, லூட்டின் (Lutein), ஸீயாசாந்தின் (Zeaxanthin) போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை கண்களின் இயல்பான செயல்பாட்டிற்கும் பார்வை ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

Q

எலும்புககளின் ஆரோக்கியத்திற்கு முட்டை உதவுமா?

A

முட்டையில் சிறிதளவு வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இவை எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. ஆனால் எலும்புகளின் முழுமையான வளர்ச்சிக்கு முட்டை மட்டும் போதாது, கால்சியம் நிறைந்த உணவும், தேவையான சூரிய ஒளியும் முக்கியம்.

Q

நோய் எதிர்ப்பு சக்திக்கு என்ன பங்கு?

A

வைட்டமின் ஏ, பி₁₂, செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் பங்கு வகிக்கின்றன. எனவே முட்டை ஒரு நல்ல சமச்சீர் உணவை முழுமையாக்கக் கூடியது.

Q

இரத்தச் சத்துக்கும் பயன்படுமா?

A

முட்டையில் வைட்டமின் பி₁₂, ஃபோலேட் உள்ளிட்ட பல நுண்ணூட்டச்சத்துகள் உள்ளன. இவை இரத்த அணுக்கள் உருவாக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டில் பங்கு வகிக்கின்றன. ஆனால் இரும்புச்சத்து முட்டையில் குறைவாக இருப்பதால், பருப்பு வகைகள், கீரைகள், இறைச்சி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முட்டை
முட்டை
Q

முட்டையில் உள்ள கொழுப்பு தீமையானதா?

A

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பும் உள்ளது. ஆனால் 'கொலஸ்ட்ரால் இருக்கிறது; குழந்தைக்கு முட்டையே கொடுக்கக்கூடாது' என்பது சரியான வாதம் அல்ல. குழந்தையின் முழுமையான உணவுமுறை, உடல்நிலை மற்றும் தனிப்பட்ட மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டே உணவை திட்டமிட வேண்டும்.

Q

தினமும் முட்டை கொடுக்கலாமா?

A

ஆரோக்கியமான குழந்தைகளுக்கு வயதுக்கும், மொத்த உணவுமுறைக்கும் ஏற்ற வகையில் முட்டையை வழக்கமான சமச்சீர் உணவில் சேர்க்கலாம். ஆனால் 'தினமும் முட்டை சாப்பிட்டால் மட்டுமே எல்லா ஊட்டச்சத்துகளும் கிடைத்துவிடும்' என்பது தவறான கருத்து. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் அல்லது மாற்று உணவுகள் ஆகியவையும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் நகத்தில் இந்த அறிகுறிகளா? பெற்றோர் கவனிக்க வேண்டிய 9 விஷயங்கள்!
Baby & Egg - குழந்தைகளுக்கு முட்டை
Q

முட்டையை எப்படி கொடுப்பது?

A

குழந்தைகளுக்கு முழுமையாக வேகவைத்த முட்டை கொடுப்பது பாதுகாப்பான நடைமுறை. அரைவேக்காடு அல்லது பச்சை முட்டையில் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால், குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

முட்டையை அதிக எண்ணெயில் பொரிப்பதைவிட, வேகவைத்தோ அல்லது குறைந்த எண்ணெயில் சமைத்தோ கொடுப்பது சிறந்தது.

Q

முட்டை மட்டும் போதுமா?

A

முட்டை ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவு; ஆனால் அது முழுமையான உணவு அல்ல.

குழந்தையின் தட்டில் பல்வேறு நிறங்களும் பல்வேறு உணவுகளும் இருக்க வேண்டும்.

முட்டை புரதத்தைத் தரும்…

காய்கறிகள் நுண்ணூட்டச்சத்துகளைத் தரும்…

பழங்கள் நார்ச்சத்தையும் பல வைட்டமின்களையும் தரும்…

தானியங்களும் பருப்பு வகைகளும் தேவையான ஆற்றலையும் ஊட்டச்சத்துகளையும் வழங்கும்...

இதையும் படியுங்கள்:
குழந்தைக்குக் காய்ச்சல், வாயில் புண்களா? கை-கால்-வாய் நோய் அறிகுறிகளும் தீர்வும்!
Baby & Egg - குழந்தைகளுக்கு முட்டை

எனவே, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான ரகசியம் ஒரே ஒரு 'அதிசய உணவில்' இல்லை, பல்வேறு இயற்கை உணவுகளை சரியான அளவில் சேர்ப்பதில்தான் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com