

பால் என்பது நம்முடைய அன்றாட உணவில் இடம் பெறும் ஒரு சத்தான பானமாகும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கால்சியம், புரதம், வைட்டமின்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன. ஆனால், இரவில் பால் குடிப்பது (Drinking milk at night) நல்லதா? அல்லது கெட்டதா? (என்ற கேள்வி பலருக்கும் வருவதுண்டு. வாருங்கள் இதை பற்றி தெரிந்துகொள்ளலாம்
இரவில் பால் குடிப்பதின் நன்மைகள்:
பாலில் உள்ள ட்ரிப்டோபான் என்ற அமினோ அமிலம், உடலில் மெலட்டோனின் மற்றும் செரட்டோனின் உற்பத்திக்கு துணைபுரிகிறது. இதனால், சிலருக்கு தூக்கத்தின் தரம் மேம்படும். குறிப்பாக வெதுவெதுப்பான பால் குடிப்பது உடல் மற்றும் மன அமைதியை ஏற்படுத்தி, தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
சிலருக்கு, வெதுவெதுப்பான பால் செரிமானத்திற்கு உதவும் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தாது; குறிப்பாக பால் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதம், எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. இவை எப்போது எடுத்தாலும் உடலுக்கு பயன் தரும்.
ஒரு கப் சூடான பால் குடிப்பது, மன அமைதியை தரும். இது நேரடியாக மன அழுத்தத்தை குறைக்காது; ஆனால், உடலுக்கு ஓய்வு உணர்வை ஏற்படுத்தி மனநிலையை மென்மையாக சீராக்க உதவும்.
இரவில் பால் குடிப்பதின் பாதிப்புகள்:
லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமை உள்ளவர்களுக்கு, பால் குடித்தால் வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சினைகள் ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் இரவில் மட்டுமல்ல, பொதுவாகவே பாலைத் தவிர்ப்பது நல்லது.
பாலை அதிக அளவில் குடிப்பது அல்லது சர்க்கரை சேர்த்து குடிப்பது தேவையற்ற கலோரி உட்கொள்ளுதலை அதிகரித்து, உடல் எடை கூடும் அபாயத்தை உருவாக்கலாம். அதனால் அளவோடு மற்றும் குறைந்த சர்க்கரையுடன் குடிப்பது முக்கியம்.
பால் குடிப்பதால் சளி அதிகரிக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், இதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. சிலருக்கு பால் குடித்த பிறகு தொண்டை கெட்டியாக இருப்பது போல உணர்வு ஏற்படலாம்.
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மருத்துவர்களின் கருத்துப்படி, இரவில் பால் குடிப்பது பொதுவாக பாதுகாப்பானது. ஆனால், இது அனைவருக்கும் ஒரே மாதிரி வேலை செய்யாது. ஒருவரின் செரிமானம், லாக்டோஸ் சகிப்பு தன்மை, வாழ்க்கை முறை போன்றவற்றைப் பொறுத்து அதன் விளைவுகள் மாறும்.
படுப்பதற்கு 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன் தினமும் ஒரு கப் அளவு பால் குடிப்பது நல்லது. வெதுவெதுப்பாக குடிப்பது உடலுக்கு சௌகரியமாக இருக்கும். அதிக சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகள் சேர்க்காமல் இருப்பது ஆரோக்கியமானது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)