
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது பல உடல் நலன்களை தரும் என்ற கருத்து நிலவி வருகிறது. நீர் தெரபி எனப்படும் மருத்துவத் தெரபிகளில் இது போல் தண்ணீர் குடிப்பதும் ஒரு அங்கமாக இருக்கிறது. எந்த அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்படி குடிக்க வேண்டும்? அதனால் என்ன பலன்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தண்ணீர் என்பது என்ன? ஹைட்ரஜன் அணுக்களும், ஆக்ஸிஜன் அணுவும் இணைந்து H₂O என்ற மூலக்கூறை உருவாக்கும் வேதியியல் கலவை தான் நிறமற்ற மணமற்ற திரவமாக தண்ணீராக நமக்கு கிடைக்கிறது.
உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும் தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமானது. இது உடலின் செல்கள் மற்றும் திசுக்களின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. கழிவுகளை வெளியேற்றவும் மற்றும் உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கும் உதவுவதில் தண்ணீர் தவிர்க்க முடியாத பங்களிக்கிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க தண்ணீரை நாம் காலை எழுந்ததும் குடிக்கும் போது நிறைய பலன்களை அடையலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது . காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் சுமார் ஒன்றரை லிட்டர் அதாவது ஐந்து முதல் ஆறு டம்ளர் குடிக்க வேண்டும் என்றும் அதன் பின் நமது அன்றாட கடமைகளில் ஒன்றான முகத்தை கழுவுவது புத்துணர்ச்சி தரும் எனும் என்றும் சொல்லப்படுகிறது.
முக்கியமான விஷயமாக சொல்லப்படுவது தண்ணீரை குடிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பும், ஒரு மணி நேரம் பின்பும் எதுவும் உணவு அருந்தாமல் வயிற்றை வெறுமனே விட்டு வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும்.
மேலும் இந்த நீர் தெரபியை கடைப்பிடிக்க எண்ணி புதிதாக ஒருவர் தண்ணீரை அருந்த துவங்கும் போது முதலில் ஒன்றரை லிட்டர் நீர் என்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். ஆனால் நாட்கள் போகப்போக பழகிவிடும். முதலில் 2 டம்ளர் அடுத்து 4 டம்ளர் என சிறிது இடைவெளி விட்டு மீதமுள்ள நீர் என அதிகரித்துக் கொண்டே போகும்போது நமக்கு பழகிவிடும்
முதன் முதலில் இது போல் நீர் குடிக்க ஆரம்பிக்கும் போது குடித்த சில மணி நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும். ஆனால் இதுவும் உடல் நீரை ஏற்றுக் கொள்ளத் துவங்கியதும் சீராகும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளாக சொல்லப்படுபவை...
நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
எடை பராமரிப்பு மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சருமத்துக்கு பொலிவையும் வழங்கும் நீரேற்றமாக இருக்கும்.
உடல் சூட்டை தணித்து உடல் சமநிலையுடன் வைத்திருக்க உதவுகிறது.
உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுப் பொருட்களை எளிதாக வெளியேற்ற இந்த தண்ணீர் குடிக்கும் செயல் உதவுகிறது.
இந்த வாட்டர் தெரபியை முறையாக கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் மலச்சிக்கலையும் வயிற்று உப்புசம், பொருமல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும்.
அத்துடன் மன அழுத்தத்தில் இருந்தும் தீர்வு கிடைக்கும் என்று குறிப்புகள் செல்கிறது.
இது போன்று நீர் அருந்துவதால் மேலும் பல நன்மைகளை பெறலாம் என்றாலும் நீர் தெரபியை கடைப்பிடிக்கும் முன் நமது உடல் நலத்தின் தன்மை என்ன என்பதை அறிந்து தகுந்த மருத்துவ ஆலோசனையின் மூலம் ஆலோசனை பெற்ற பின்னே இது போன்ற முறைகளை கடைபிடிப்பது அவசியம் எனவும் வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)