காலை உணவுதான் நமது நாளில் மிகவும் முக்கியமான உணவு. இது நமது உடலுக்கு ஆற்றலை அளித்து நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. சமீபகாலமாக, பலர் தங்கள் காலை உணவை, புரோட்டீன் ஷேக் குடிப்பது மூலமாகத் தொடங்குகின்றனர். புரோட்டீன் என்பது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. எனவே, காலை உணவாக புரோட்டீன் ஷேக் குடிப்பது உடலுக்கு நல்லதா? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நன்மைகள்: புரோட்டீன் நிறைந்த உணவுகள் நம்மை நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கும். இதனால், நாள் முழுவதும் தேவையில்லாத உணவுகளை சாப்பிடும் ஆசை குறையும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புரோட்டீன் மிகவும் முக்கியம். இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசை சேதத்தை சரி செய்ய உதவுகிறது.
புரோட்டீன் நிறைந்த உணவுகள் நம்முடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக கலோரிகளை எரித்து, எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும், புரோட்டீன் நமது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பதால், சருமத்தை மென்மையாகவும், முடியை வலுவாகவும் வைத்திருக்கிறது.
தீமைகள்: புரோட்டீன் ஷேக்குகளில் புரதம் மட்டுமே அதிகமாக இருக்கும். மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் இதில் குறைவாகவே இருக்கும். ப்ரோட்டீன் ஷேக் சிலருக்கு செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், புரோட்டீன் ஷேக்குகளை தொடர்ச்சியாக குடிப்பதால், சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க முடியாமல் போகலாம்.
காலை உணவாகப் புரோட்டீன் ஷேக் குடிப்பது நல்லதா?
காலை உணவாக புரோட்டீன் ஷேக் குடிப்பது நல்லதுதான் என்றாலும், அனைவருக்கும் இது பொருந்தும் எனச் சொல்ல முடியாது. உங்கள் உடல்நிலை, உடற்பயிற்சி செய்யும் வழக்கம், உணவு ஒவ்வாமை போன்ற காரணிகளைப் பொறுத்து இது மாறுபடும். உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் தசைகளை வலுப்படுத்த புரோட்டீன் ஷேக் காலையில் குடிக்கலாம். ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. சீரான உணவுடன் இணைந்து புரோட்டீன் ஷேக்குகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
எடை இழக்க விரும்புபவர்கள் ப்ரோட்டீன் ஷேக் குடிப்பது நல்லதுதான் என்றாலும், இத்துடன் குறைந்த கலோரி உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சி செய்வது அவசியம். பொதுவாகவே காலை உணவாக புரோட்டின் ஷேக் குடிப்பதை விட சீரான உணவை எடுத்துக்கொள்வது நல்லது. எனவே, பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்து ஒரு சிறந்த காலை உணவை தயார் செய்து சாப்பிடுங்கள்.