காதை பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வது சரியா? தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

Ear cleaning | காது
Ear cleaning | காது
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

காதுகளை பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வது முற்றிலும் தவறான செயலாகும். காது தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் உறுப்பு என்பதால் மருத்துவ ரீதியாக இயர் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வதை மருத்துவர்கள் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.

பட்ஸ் பயன்படுத்தும் பொழுது நாம் செய்யும் சில தவறுகளால் காதிற்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும். காதுப் பாதை என்பது மிகவும் மென்மையானது. பட்ஸை ஆழமாக நுழைக்கும் போது அவை காதில் ஜவ்வை நேரடியாகத் தாக்கி துளை அல்லது கீழிவை ஏற்படுத்திவிடும். பட்ஸின் பஞ்சுப் பகுதி காதின் உள்பகுதியில் உராய்வை ஏற்படுத்தி மென்மையான தோலில் புண்களை உண்டாக்கிவிடும். சில நேரங்களில் பட்ஸின் முனைகளில் உள்ள பஞ்சு தளர்ந்து காதின் உள்பகுதியிலேயே மாட்டிக்கொண்டு விடும். இதை எடுப்பதற்கு முயற்சிக்கும் பொழுது செவித்திறன் பாதிக்கும் வகையில் ஆபத்து ஏற்படலாம்.

காது அழுக்கை ஆழமாக தள்ளுதல்:

பஞ்சு முனைகளைக் கொண்ட பட்ஸ்களை பயன்படுத்தும் போது காது அழுக்கு (Earwax) வெளியே வருவதற்கு பதிலாக, அது காதின் ஆழமான பகுதிக்கு தள்ளப்படுகிறது. இதனால் அழுக்குகள் ஒன்றாகச் சேர்ந்து பாறை போல் இறுகி, காது அடைப்பு, கடுமையான காது வலி மற்றும் தற்காலிக செவித்திறன் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

செவிப்பறையை சேதப்படுத்தும்:

காதின் உள்பகுதியில் உள்ள செவிப்பறை (Eardrum) என்பது மிகவும் மென்மையான ஒரு ஜவ்வாகும். பட்ஸை ஆழமாக நுழைக்கும் போது அது எதிர்பாராத விதமாக செவிப்பறையை கிழித்து விடக்கூடும். இது நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு (Hearing loss) வழிவகுக்கும்.

Ear cleaning | காது
Ear cleaning | காது

காது தொற்று ஏற்படுதல் (Ear Infection):

பட்ஸ் கொண்டு காதைக் குடையும் பொழுது காதின் உட்புறத் தோலில் நுண்ணிய கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன. குளிக்கும் பொழுதும், முகம் கழுவும் பொழுதும் காதுக்குள் செல்லும் தண்ணீர் இந்தக் காயங்களில் படும்போது கிருமித்தொற்று ஏற்பட்டு சீழ் வடியத் தொடங்கும்.

இயற்கை மெழுகை முழுமையாக நீக்க முயலுதல்:

காதுக்குள் சுரக்கும் மெழுகு என்பது அழுக்கு அல்ல; அது காதுக்கு பாதுகாப்பு தரும் ஒரு கவசமாகும். இது தூசி, பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் காதுக்குள் செல்வதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பான அரணாகச் செயல்படுகிறது. பட்ஸைக் கொண்டு இதை முழுமையாக துடைத்து எடுப்பதால் காது வறண்டு போய், கடுமையான காது அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும்.

இதர ஆபத்தான பொருட்களை பயன்படுத்துதல்:

பட்ஸ் கிடைக்காத பொழுது காதில் அரிப்பு ஏற்படும் சமயம் ஹேர் பின், சாவி, குச்சி அல்லது தீக்குச்சி போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவது மிகப் பெரிய தவறாகும். இவை மிக எளிதாக காதை காயப்படுத்தி தீவிர ரத்தப்போக்கு அல்லது நிரந்தர காது கேளாமைக்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகளா நீங்கள்? பாதங்களை இப்படிப் பாதுகாக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து!
Ear cleaning | காது

காதை எவ்வாறு பாதுகாப்பாக பராமரிப்பது?

நாம் பேசும் போதும், உணவை மெல்லும் பொழுதும் தாடை அசைவுகள் மூலமாக காது அழுக்கு தானாகவே வெளியேறிவிடும். குளித்து முடித்த பிறகு காதின் வெளிப்புறத்தில் (மடல் பகுதியில்) இருக்கும் ஈரத்தையும் மெழுகையும் மட்டும் ஒரு மென்மையான பருத்தித் துணியால் துடைத்தாலே போதுமானது.

மருத்துவர் ஆலோசனையின்றி காதில் எண்ணெய் அல்லது கண்ட சொட்டு மருந்துகளை விடுவது காதுத் தொற்றை அதிகமாக்கிவிடும். எனவே சுய மருத்துவம் செய்வது கூடாது. காது அழுக்கு அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி இயர் டிராப்ஸ் (Ear drops) பயன்படுத்தி அதை மென்மையாக்கலாம்.

காது அடைப்பு அல்லது அதிகப்படியான அழுக்கு இருந்தால், நாமாகவே எடுக்க முயலாமல் ஒரு காது, மூக்கு, தொண்டை மருத்துவரை (ENT) அணுகி சுத்தம் செய்து கொள்வதே பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
தாய்ப்பால் அதிகமாக சுரக்க என்ன சாப்பிட வேண்டும்? தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
Ear cleaning | காது

Reference:

logo
Kalki Online
kalkionline.com