உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் ஒரு விஷயமாக கருப்பை அல்லது கர்ப்பப்பை கட்டிகள் உள்ளன. இது வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உடலில் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் வளர்ச்சியிலும் , அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த வைட்டமின் தேவைப்படுகிறது.
பல பெண்களின் கருப்பை தசை சுவர்களில் வளரும் கட்டிகளைப் பற்றி அவர்களுக்கே தெரியாது. ஒரு சிலர் இடுப்பு வலி, அதிகப்படியான இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் மூலம் கருப்பைக் கட்டிகள் இருப்பதை அறிந்துக் கொள்கிறார்கள். கருப்பை கட்டிக்கு வைட்டமின் டி குறைபாடும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி கருப்பை ஃபைப்ராய்டு கட்டிகளை கொண்டவர்களின் உடலில் வைட்டமின் டி சத்து மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வைட்டமின் குறைபாடு ஃபைப்ராய்டு கட்டிகள் உருவாக காரணமாக அமைகிறது. பைப்ராய்ட்டு கட்டியின் அளவு பெரிதாக ஆகும் போது அவர்களின் உடலில் வைட்டமின் டி அளவு பெரிதும் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
வைட்டமின் டி ஆனது உடலில் உள்ள திசுக்களுக்குள் செல் வளர்ச்சி மற்றும் செல் இறப்பு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தும் ஒரு பொருளாக உள்ளது. மேலும் செல் பெருக்கத்தை அளவாக வைப்பதிலும் திட்டமிடப்பட்ட செல் இறப்பை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி, ஃபைப்ராய்டு கட்டி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உள்ளிட்ட ஹார்மோன் அளவையும் அதிகரிக்க விடாமல் செய்கிறது.
வைட்டமின் டி அளவுகள் குறையும் போது பாதுகாப்பு கட்டுப்பாட்டு முறைகள் பலவீனமாகிறது. இதன் விளைவாக கருப்பை செல்கள் அவற்றின் வழக்கத்தை விட அதிகமாக பெருகத் தொடங்குகிறது. அதனால் ஃபைப்ராய்டு கட்டிகள் வளரத் தொடங்குகிறது.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி வைட்டமின் டி மருந்துகள் பைப்ராய்டு கட்டியின் அளவை குறைக்கவும் அவற்றின் வளர்ச்சியை தடுக்கவும் முடியும் என்பதை காட்டுகிறது. வைட்டமின் டி மருந்துகளை குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொண்டவர்களுக்கு , சிறிய அளவு ஃபைப்ராய்டு கட்டிகள் கரைந்துள்ளது என்பது பரிசோதனைகள் மூலம் தெளிவாகி உள்ளது. இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
சிறிய கட்டிகளை வைட்டமின் டி மாத்திரைகள் குறைக்கிறது என்றாலும் , அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். இது பற்றி மருத்துவரே தகுந்த சிகிச்சைகளை அளிப்பார்.
இந்த ஆராய்ச்சியில் , கருமையான சருமம் கொண்ட ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க நாட்டுப் பெண்கள் உடலில் இயற்கையாக வைட்டமின் டியை தயாரிக்க முடியாது. இவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இந்த மக்களில் கருப்பை ஃபைப்ராய்டு கட்டிகள் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் உடல் பருமன், மோசமான உணவு முறைகள் , தினசரி சூரிய ஒளியில் சருமம் படாமல் இருப்பதாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.
பெண்கள் கருப்பை கட்டி வராமல் தடுக்க சில ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தினமும் பெண்கள் சூரிய ஒளியில் சராசரியாக 20 நிமிடங்கள் வரை வெளிப்பட வேண்டும். சூரிய ஒளி சருமத்தின் மீது பட்டால் , இயற்கையாகவே உடல் வைட்டமின் டி யை உற்பத்தி செய்கிறது. அதோடு வைட்டமின் டி நிறைந்த காளான், மீன், பால், பன்னீர், முட்டை போன்ற உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். மேலும் மருத்துவரின் பரிந்துரையில் வைட்டமின் டி மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)