

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்னையாக உடல் எடைகுறைப்பு இருக்கிறது. தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பதே உடல் எடையைக் குறைக்க அனைவரும் கூறும் முதல் கருத்தாக இருக்கிறது. ஆனால் வாக்கிங் ஆர்வலர்களை ஜப்பான் வாக்கிங் முறை அதாவது இடைவெளி நடைப்பயிற்சி (Interval Walking Training - IWT) அனைவரையும் கவர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் ஜப்பான் வாக்கிங் முறையை இப்பதிவில் விரிவாகக் காண்போம்.
குறைந்த நேரத்தில் அதிக பலன்களை தருவதால் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஜப்பான் வாக்கிங் முறையை ஜப்பானின் ஷின்ஷு பல்கலைக்கழக பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஜப்பானின் இடைவெளி நடைபயிற்சி மேற்கொள்ளும் முறை
நடைப்பயிற்சி என்றாலே சீரான வேகத்தில் குறிப்பிட்ட தூரம் நடப்பது தான் நாம் அறிந்தது. ஆனால் ஜப்பானிய முறையில் 3-3 என்ற அடிப்படை ஃபார்முலாவை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு முறையும் வேகத்தை மாற்றி மாற்றி நடக்க வேண்டும்.
நம்மால் எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு வேகமாக நடக்க ஆரம்பித்த முதல் 3 நிமிடங்களில் இதயம் வேகமாக துடிப்பதை உணர்வது போல் நடக்க வேண்டும். அடுத்து வரும் 3 நிமிடங்களில் உடல் நிதானம் அடைவதற்கு ஏதுவாக சாதாரணமாக நிதானமாக நடக்க வேண்டும். இதனால் உடல் மீட்சி பெறும். இதேபோல் தினமும் 5 முறை என 3-3 சுழற்சியை 30 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும்.
வழக்கமான நடைப் பயிற்சி மேற்கொண்டு 10,000 அடிகள் நடப்பதை விட இந்த 3-3 ஃபார்முலாவை அடிப்படையாக வைத்து நடக்கும் 30 நிமிட இடைவெளி நடைப்பயிற்சி அதிக பலன்கள் கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் இந்த 2026 ஆம் ஆண்டில் 'லைப் ஹேக்' ஆக ஜப்பான் வாக்கிங் முறை பார்க்கப்படுகிறது.
ஜப்பான் வாக்கிங் முறை பயன்கள்
ஜப்பானின் இடைவெளி நடைப்பயிற்சியால் இதய தசைகள் நன்கு வலுவடைவதோடு ,இரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது.
ஜப்பானின் இடைவெளி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது சாதாரணமாக நடக்கும் பத்தாயிரம் அடிகளை விட கலோரிகள் 20 முதல் 30% வரை எரிக்கப்படுவதால் உடல் எடை விரைவாக குறைகிறது.
அவரவர் உடல் எடைக்கேற்ப வயதானவர்களும் ,மூட்டு வலி உள்ளவர்களும் வேகத்தை ஜப்பான் நடைபயிற்சியின் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.
வாரத்திற்கு 4 அல்லது 5 நாட்கள் ஜப்பான் இடைவெளி நடைப்பயிற்சியை செய்வதன் மூலம் உடலில் நல்ல மாற்றத்தை உணர முடியும் என்பது பிட்னஸ் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
முதியவர்களுக்கும் ,மூட்டு வலி உள்ளவர்களுக்கும் ஏற்ற ஜப்பானின் இடைவெளி நடைபயிற்சி அனைவரும் மேற்கொண்டு உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)