தாட்பூட், பேஷன் ஃபுருட் என்று அழைக்கப்படும் பாசிப்பழம் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. இது தமிழில் குடந்தை பழம் என்றும் பாசிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
பாசிப்பழத்தில் மிகுந்துள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்பு அடர்த்தியை பராமரிக்கின்றன. உடைந்த எலும்புகள் விரைவாக ஒட்ட உதவுகின்றன. இந்தப் பழம், பெண்களின் ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்துவதோடு, மாதவிடாய் சுழற்சியையும் சீராக்க உதவுகிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்த இந்தப் பழத்தின் சாறு உயர் இரத்த அழுத்தம், புற்று நோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை வெகுவாகக் குறைக்க வல்லது. இதில் உள்ள மெக்னீசியம் கவலை மற்றும் மன அழுத்தத்தை விரட்டும் தன்மை கொண்டதாகும்.
பாசிப் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை கண்களுக்கு நன்மை பயக்கிறது. வயது மூப்பு தொடர்பான மஸ்குலர் சிதைவு மற்றும் கண் புரை அபாயத்தைக் குறைக்கிறது.
கசப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட பாசிப்பழம், சர்க்கரை நோய்க்கும் சிறந்த நிவாரணியாக இது செயல்படுகிறது. உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க வல்லது இந்தப் பழம்.
இந்தப் பேஷன் பழங்களில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.