ஃபாக்ஸ் நட்ஸ் என்று அழைக்கப்படும் தாமரை விதைகள் தாமரை பூவிலிருந்து கிடைக்கின்றன. இது ஃபாக்ஸ் நட்ஸ் அல்லது மக்கானா, தாமரை விதைகள், பூல் மக்கானா என்றும் அழைக்கப்படுகிறது. மக்கானாவில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, மாவுச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குறைந்த கொழுப்பு, சோடியம் அளவை கொண்டது.
ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் மத்தியில் மக்கானா ஒரு நன்கு அறியப்பட்ட சூப்பர்ஃபுட் ஆகும். ஆரோக்கியம் பற்றிய உணர்வுள்ள நபர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் இது சிறந்த சிற்றுண்டியாகும். உடற்பயிற்சி உலகில் மக்கானா ஒரு சத்தான தேர்வாக பரவலாகக் கருதப்பட்டாலும், அதிகப்படியான நுகர்வு சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
பொதுவாக மக்கானாவை தினமும் சாப்பிடலாம். ஆனால் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்காமல் பலன்களைப் பெற, அவற்றை மிதமாக அளவில் உட்கொள்வது மிகவும் அவசியம், ஏனெனில் அதிகளவில் சாப்பிட்டால் அதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து காரணமாக செரிமான கோளாறு (குறிப்பாக சரியாக மென்று சாப்பிடாவிட்டால்), வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம். ஒரு சிலருக்கு இவை ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நட்ஸ் அல்லது விதைகள் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மக்கானா ஒவ்வாமையை ஏற்படுத்தும். மக்கானாவை சாப்பிட்ட உடன அரிப்பு, வீக்கம் அல்லது சிவத்தல் போன்ற ஏதேனும் ஒவ்வாமை அறிகுறிகளை அனுபவித்தால், மருத்துவ உதவியை நாடுங்கள்.
தினமும் ஒரு சிறிய கைப்பிடி சுமார் 1 அவுன்ஸ் அல்லது 28 கிராம் எடுத்துக்கொள்வது பொதுவாக ஒரு திருப்திகரமான சிற்றுண்டிக்கு போதுமானது. மக்கானாவை கவனமாக சாப்பிடுவது, அதன் சுவை மற்றும் நன்மைகளை அதிகமாக அனுபவிக்க உதவுகிறது.
மக்கானாவை உண்ணும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்..
இதய நோய்கள், செரிமானக் கோளாறுகள், அஜீரணம், கீல்வாதம், சிறுநீரகக் கற்கள், தூக்கக் கோளாறுகள் உள்ளவர்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாமரை விதைகளை உட்கொள்ளும்போது, உடல்நல அபாயங்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு மக்கானாவை சிறிய அளவில் நன்கு சமைத்து உணவில் பிசைந்து கொடுக்கும் போது ஒவ்வாமை ஏதும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்கவும். ஒவ்வாமை அல்லது அஜீரணத்தின் அறிகுறிகள் தோன்றினால், பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.
உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், மக்கானாவை மிதமாக அளவில் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். எனவே பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியம்.
மக்கானா லேசானது மற்றும் ஜீரணிக்க எளிதானது என்றாலும், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் இதை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அது நிலைமையை மோசமாக்கும்.
இதில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளதால் அதிகமாக சாப்பிடும் போது எலும்புகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் கால்சிஃபிகேஷன் ஏற்படலாம்.
மேலும் மக்கானாவை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.