கொத்தவரை காய்கறி கடைகளில் கிடைக்கும் மிக எளிமையான காய் ஆகும். ஆனால், அதில் இருக்கும் மருத்துவ குணங்களோ ஏராளம். நமக்கு அது தரும் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் தாராளம் என்றே சொல்லலாம். குறிப்பாக, இந்த மனித சமுதாயத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்னை என மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கடிய எல்லா நோய்களுக்குமே கொத்தவரங்காய் மிகப்பெரிய மருத்துவ வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கொத்தவரங்காய் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்குக் காரணம், இதன் பெருமைகளை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதில் உள்ள முக்கியமான எட்டு ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கொத்தவரங்காயில் உள்ள கிளைக்கோ நியூட்ரியன்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. வாரம் இரு முறை கொத்தவரங்காய் சாப்பிடுபவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
2. கொத்தவரங்காயில் உள்ள கால்சியம், எலும்புகளை பலப்படுத்தும். எலும்பு தேய்மானம் அடைவதை இது தடுக்கிறது.
3. கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்து இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவினை குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும். மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப் பயன்படுகிறது.
4. கொத்தவரங்காயில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இரத்த சோகை மற்றும் இரத்தம் இல்லாததால் ஏற்படும் வியாதிகள் தடுக்கப்படுகின்றன.
5. கொத்தவரங்காயில் உள்ள கால்சியம், இரும்பு சத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்று ஆகும். இதில் உள்ள ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகள் இல்லாமல் வளர உதவும்.
6. இரைப்பை மற்றும் குடல் சீராக இயங்க வைத்து, செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் கொத்தவரங்காய் ஒரு வரப்பிரசாதம்.
7. சருமப் பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. கொத்தவரங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் சருமம் மினுமினுப்புடன் காணப்படும்.
8. கொத்தவரங்காயை உணவில் சேர்த்து வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது.
இனி, உங்கள் வீட்டு சமையலில் வாரத்திற்கு இரண்டு நாள் கண்டிப்பாக கொத்தவரங்காய் நிச்சயம் இடம்பிடிக்கும்.