

'உறக்கம் ஒரு ஆடம்பரம் அல்ல; உடல் நலத்திற்கான அவசியம்' என்று எச்சரிக்கிறார் குவைத்தின் முபாரக் அல்-கபீர் மருத்துவமனை மற்றும் குவைத் உறக்க மருத்துவ மையத்தின் மூத்த நிபுணர் டாக்டர் முகம்மது அப்துல் சலாம். ஐம்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில், சுமார் 5 லட்சம் மக்கள் உறக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறார்.
இந்த ஆண்டில் மட்டும் குவைத் உறக்க மருத்துவ மையத்தில் 2500 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உறக்கம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தூக்கக் கோளாறுகள் பெரும்பாலும் உடல் மற்றும் மனநிலை சார்ந்தவை என்பதால், நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆகவேதான், உறக்க மருத்துவ மையத்தில் மூச்சுக்குழாய், நரம்பியல் மற்றும் மனநல நிபுணர்கள் இணைந்து பணியாற்றுவதாக டாக்டர் சலாம் கூறினார்.
குவைத் உறக்க மருத்துவ மையத்தில் தூக்கம் தொடர்பான பிரச்னைகளோடு வரும் நோயாளிகள் சிறப்பு வசதிகளுடன் கூடிய அறைகளில் உறக்க ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயாளிகள். அந்த அறைகளில் கேமரா மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், நோயாளியின் உடல் அசைவுகள், மூச்சுத் துடிப்பு, மற்றும் இதய இயக்கம் போன்றவை பதிவு செய்யப்பட்டு, துல்லியமான நோய்கள் கண்டறியப்படுகின்றன.
குவைத்தில் அதிகம் காணப்படும் தூக்கம் தொடர்பான கோளாறுகளைப் பட்டியலிடுகிறார் டாக்டர் சலாம்:
30% நோயாளிகளுக்கு இன்சோம்னியா என்ற தூக்கமின்மை.
20% நோயாளிகளுக்கு ஸ்லீப் ஆப்னியா என்ற உறக்கத்தடுப்பு.
உறக்கச் சுழற்சி கோளாறு, தூக்கத்தின் போது நடப்பது, சாப்பிடுவது, கத்துவது போன்ற அசாதாரண நடத்தைகள்.
நார்கோலெப்சி, மூச்சுத் தடுமாற்றம், இடைவேளையுடன் கூடிய தூக்கம்.
இப்படி பலதரப்பட்ட தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள்.
'உறக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சுமார் 25–30% நேரம் பிடிக்கிறது. அது உடலின் நச்சு நீக்கமும், சீரமைப்பும் நடக்கும் முக்கியமான கட்டமாகும். உறக்கக் குறைபாடு அதிக எடை, உயர் இரத்த அழுத்தம், மனநிலை குறைபாடு, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது,' என அவர் எச்சரிக்கிறார்.
மேலும், 'பல உறக்கக் கோளாறுகள் மனநலத்துடன் தொடர்புடையவை. தூக்கத்தின் போது கனவு காணுதல், நடப்பது போன்றவை தூங்கும் மூளை மற்றும் செயல்படும் உடல் இடையேயான ஒத்திசைவு கோளாறுகள் ஆகும். எனவே நோயாளிகளுக்கு மனநல மற்றும் நரம்பியல் மதிப்பீடுகள் அவசியம்,' என்று டாக்டர் சலாம் கூறுகிறார்.
நல்ல உறக்கத்திற்கான அவரது டிப்ஸ் பின்வறுமாறு:
தினமும் 7–9 மணி நேரம் உறங்க வேண்டும்
இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்குச் சிறந்த நேரம்.
உறங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் உணவு சாப்பிடக்கூடாது.
உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மொபைல் மற்றும் டிவி திரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு பழக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.
'நல்ல உறக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அடிப்படைத் தூண் ஆகும். அதை ஒரு ஆடம்பரம் என ஒரு போதும் நினைக்காதீர்கள். அல்லது நேர விரயம் என்று சொல்லி தூக்கத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். மனித வாழ்க்கையின் ஒரு அவசியம் எனக் கருதுங்கள்,' என டாக்டர் முகம்மது அப்துல் சலாம் வலியுறுத்துகிறார்.
