‘எண்சாண் உடம்புக்குத் தலையே பிரதானம்!’ என்றார்கள் நம் முன்னோர்கள்! தலையில் மூளையும், கண்களும், காதுகளும், வாயும் இருப்பதன் காரணத்தால் அவ்வாறு சொல்லி வைத்தார்கள் போலும். ஆனால், நவீன விஞ்ஞானம் சொல்வது தலைகீழாக, அதாவது ரிவர்சாக இருக்கிறது! பாதங்களும், கால்களுமே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது யுனிவர்சிடி ஆப் டென்மார்க் ரிசர்ச் (University of Denmark Research).
டென்மார்க் நாட்டின் இந்த ஆய்வுக் குறிப்பை நாம் எளிதாகப் புறந்தள்ள முடியாது. ஏனெனில், 2025-26 நிலவரப்படி, உலகில் மக்கள் வாழ்க்கைக்கு மிகவும் உகந்த முதல் 5 நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று. சுவிட்சர்லாந்து, நார்வே, பின்லாந்து, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகியவையே அந்த ஐந்து நாடுகள்.
டென்மார்க் நாட்டின் ஆராய்ச்சிக் குறிப்பு சொல்வது இதைத்தான். ”எந்த மனிதர் தன் கால்களில் மூவ்மெண்ட் இல்லாமல், அதாவது கால்களைப் பயன்படுத்தாமல் இரண்டு வாரங்களைப் போக்குகிறாரோ, அவர் அந்தப் பதினாலு நாட்களிலேயே பத்து ஆண்டுகள் முதுமையை எட்டி விடுவாராம்.
அதன் பொருள், கால்களே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம் என்பதுதான்.” வயதாகும்போது மூளையின்மீது வைக்கும் நம்பிக்கைக்கு மேலாகக் கால்களின் மீது நம்பிக்கை வைத்து அவற்றை வலுவாக்கி, வாழ்வைச் சுகமாக்க வேண்டுமாம்.
வயது கூடுகையில், நரைக்கும் முடிக்கும், சுருங்கும் சருமத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்துக் கால்களுக்கும், பாதங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் அதிகக் கவனம் செலுத்துவதே ஆரோக்கியத்திற்கு வழி வகுக்குமாம்.
அமெரிக்காவின் தடுப்பு மருத்துவ இதழில் (American Journal of Preventive Medicine), ’வலுவான கால் சதைகளே (கெண்டைக்கால் சதை) உடலின் முக்கியத் தசை என்றும் அதுவே மனிதர்களின் நீண்ட ஆயுளைத் தீர்மானிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது’.
மனித ஆரோக்கியம் குறித்த ஆய்வுகள் பலவும், ‘பத்துப் பதினைந்து நாட்களுக்கு அசைவுகளே இல்லாத கால்கள் ஒருவரை 20, 30 ஆண்டுகளைக் கடந்த வயதானவரைப்போல் ஆக்கி விடும்!’ என்று கூறுகின்றன.
கால் தசைகள் வலுவாக இல்லையென்றால், உடலின் வேறு சில குறைபாடுகளை நீக்குவதற்காக ஒருவர் மேற்கொள்ளும் புனரமைப்பு உடற்பயிற்சிகள் (Rehabilitation Exercises) பலனளிக்க நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ளுமாம். உடற்பயிற்சிகளின் மூலம் உடனடிப் பலனைப் பெற கால் தசைகளின் ஆரோக்கியம் முக்கியம்.
தொடர் நடைப்பயிற்சி கால்களுக்கு வலுவூட்டும். நினைவில் வையுங்கள்! நம் உடலின் மொத்த எடையையும் தாங்கியபடி நம்மைப் பல இடங்களுக்கும் கொண்டு செல்வது நமது கால்களே.
நமது எடையில் பாதி (50%) எலும்புகள்தான். அந்த எலும்புகளில் பாதி (50%) நமது கால்களில்தான் உள்ளன.
நமது உடலின் பெரிய மற்றும் வலுவான மூட்டுக்களும் எலும்புகளும் கால்களில்தான் உள்ளன.
உடலின் 70% செயல்பாட்டு ஆற்றல் (Activity Energy) எரிந்து வெளியேறுவது கால்கள் மூலமே. எனவேதான் உடல் எடையைக் குறைக்க நடக்கச் சொல்கிறார்கள்.
ஓர் இளைஞன் தன் தொடையைப் பயன்படுத்தி ஒரு காரையே தூக்கி விட முடியுமாம்.தொடையின் பலம் அவ்வளவாம்.
நம் உடலின் இயக்க மையம் (Center of Movement) பாதங்களும், கால்களுமே. உடலின் பாதி நரம்புகளும், பாதி ரத்தக் குழாய்களும், பாதி ரத்த ஓட்டமும் கால்களில் உள்ளனவாம். இதிலிருந்து உடலின் பாதி (50%) நம் கால்களே என்பதை உணரலாம்.
வலுவான கால்களையும், பாதங்களையும் கொண்டவர்களின் ரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். கால் கெண்டைத் தசை வலுவுள்ளவர்களுக்கு இதயமும் வலுவுள்ளதாகவே இருக்குமாம்.
நமது வயோதிகம் கால்களில் ஆரம்பித்துத்தான் மேல் நோக்கி நகருகிறதாம். வயதாகும் போது மூளையின் கட்டளைகளைக் கால்கள் சரிவர (Accurate) பெறும் நிலை குறைந்து விடுகிறதாம். இளமையில் அவ்வாறு நேராதாம். எனவேதான் கவிஞர் கண்ணதாசன் “இருபதே வயதாய் என்னை இருநூற்று ஐம்பதாண்டு பருவத்தில் அவன் வைத்தானேல்…” என்று பாடி, நடக்காதே என்று வருத்தமுறுவார்.
வயதாக ஆக எலும்பிலுள்ள சுண்ணாம்பு (calcium) சத்து குறைந்து விடுவதால், முதியவர்களின் எலும்பு எளிதாக முறிந்து (fracture) விடுகிறது. முன்னோர்கள் வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பைச் சேர்க்கக் காரணம் இதுவே.
கால்களில் முறிவு ஏற்பட்டால், அது மூளை நோய்களுக்கும் வழி வகுத்து, உயிருக்கு உலை வைத்து விடுகிறதாம். முதியவர்களின் தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டால்,முறிவு ஏற்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் ஓராண்டுக்குள்ளாகவே இறந்து விடுவதாக ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இது வரை உடற்பயிற்சியே செய்யாத 60 வயதைக் கடந்தவர்கள் கூடக் கால்களுக்கான எளிய பயிற்சிகளை இப்போதும் தொடங்கிச் செய்யலாம்.
இப்பொழுதெல்லாம் படுக்கையில் படுத்தபடியே கால்களுக்குப் பயிற்சி அளிக்கும் முறைகளெல்லாம் வழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. தேவை பயிற்சி செய்ய வேண்டுமென்ற எண்ண உறுதி மட்டுமே.
பாதங்களுக்கும் கால்களுக்கும் வயதானாலும், தொடர்ந்த உடற்பயிற்சிகள் மூலம் அவற்றின் இளமையைக் காக்கலாம்.
இருங்க சார்! ஓடாதீங்க! அறுபது வயதைக் கடந்துட்டீங்க. நிதானமா போங்க. நீங்க உடற்பயிற்சி செய்யத்தான் போறீங்கங்கறது உங்க முகத்திலேயே தெரியுது சார்.
ஆல் தி பெஸ்ட்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)