நம் உணவில் அதிகமாக எண்ணெய் எடுத்துக்கொள்வது ஆரோக்கியக் கேடு என்று சொன்னாலுமே, உணவில் எண்ணெய் சேர்த்துக்கொள்வது பல வகையில் பயனளிக்கத்தான் செய்கிறது. அதிலும் ஒரே எண்ணெய்யை தொடர்ந்து எடுத்துக்கொள்ளாமல் விதவிதமான எண்ணெய்களை அவ்வபோது சாப்பிட்டு வருவது நல்லதாகும். அந்த எண்ணெய்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. சூரியகாந்தி எண்ணெய்: சூரியகாந்தி எண்ணெய்யில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிகமாக Polyunsaturated fats உள்ளதால், இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதனால் இதய செயல் திறனும், ஆரோக்கியமும் மேம்படும்.
2. கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தி சாப்பிட்டு வர செரிமான பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகளை அழிக்கும். இதில் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், பாக்டீரியாவை அழிக்கும். கடுகு எண்ணெய்யை கால் வெடிப்புக்குப் பயன்படுத்துவதால், வெடிப்பு விரைவில் குணமாகும். பங்ளாதேஷ் போன்ற நாடுகளில், கடுகு எண்ணெய்யை பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யப் பயன்படுத்துகின்றனர். இதனால், குழந்தைகளின் சருமம் பளபளப்பாகும் என்று நம்பப்படுகிறது.
3. தேங்காய் எண்ணெய்: சமையலில் தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வர, முடி நன்றாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். நம்முடைய வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
4. நல்லெண்ணெய்: நல்லெண்ணெய்யை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் சூடு குறைந்து உடல் நன்றாக குளிர்ச்சி அடையும். நல்லெண்ணெய்யை எடுத்துக்கொள்வதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கிறது. இதில் Tyrosine என்னும் அமினோ ஆசிட் உள்ளதால், இது உடலில் உள்ள செரடோனினை தூண்டி விடுவதால், ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரஷனைப் போக்குகிறது.
5. பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ உள்ளதால், இது உடல் எடை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை உணவில் எடுத்துக்கொள்வதால், கூந்தல் மற்றும் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், மெக்னீசியம், வைட்டமின் ஈ, செலினியம் ஆகியவை இருப்பதால், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மூளையின் செயல் திறனையும் அதிகரிக்கிறது.