எச்சரிக்கை! குறைந்த ரத்த அழுத்தமும் ஆபத்து! என்னென்ன சாப்பிடலாம்?

diet for low BP
low blood pressure
Published on

உயர் இரத்த அழுத்தம் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறதோ , அது போல குறைந்த இரத்த அழுத்தமும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறைந்த இரத்த அழுத்தம் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக இரத்த அழுத்தம் குறையும் போது போதுமான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை உடலில் பிற பாகங்களுக்கு கடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் அவருக்கு தலைசுற்றல் , சோர்வு , பார்வை மங்கல் , மயக்கம் , இதய துடிப்பு குறைவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் இதயம் , மூளை , சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சுய நினைவற்ற நிலைக்கோ அதற்கும் மோசமான நிலைக்கோ கொண்டு செல்லும்.

குறை இரத்த அழுத்தம் , குறைந்த சர்க்கரை போன்ற நிலைகளுக்கு தகுந்த மருந்துகள் கிடையாது. இவற்றை உணவு பழக்கங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இவர்கள் உணவில் கட்டாயம் உப்பினை சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பில் உள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவும். உடலில் நீர் சத்து குறைந்தாலும் இரத்த அழுத்தம் குறையக் கூடும். அதனால் எப்போதும் உடலை நீரேற்றுமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். தினமும் தண்ணீரை 2 லிட்டருக்கும் அதிகமாக குடிக்க வேண்டும். இளநீர்,  மோர் , எலுமிச்சை சாறு போன்ற பானங்களை தினமும் பருகலாம். இது மட்டுமல்லாமல் ஓஆர்எஸ் பானங்களை தேவைப் படும்போது பருகலாம்.

குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.  தினமும் இரு வேளைகள் பால் , காபி , தயிர் , லஸ்ஸி போன்ற பானங்களை பருகி வரலாம். இவர்கள் ஊட்டச்சத்து பானங்களை கூட பருகலாம்.

காபியில் உள்ள காபின் என்ற வேதிப்பொருள் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடியது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்கக் கூடிய பீட்ரூட் , மாதுளை , வாழைப்பழம் , முட்டை , இறைச்சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும். 

இதையும் படியுங்கள்:
சிவப்பான காய்கறிகள் மற்றும் பழங்களில் இரும்புச்சத்து அதிகம் என்று சொல்வது உண்மையா?
diet for low BP

தினமும் அதிக அளவு 3 வேளை சாப்பிடுவதற்கு பதில், அதே அளவு உணவை 5 ஆகப் பிரித்து , 5 வேளை சாப்பிட வேண்டும். உணவில் கீரை , பிராக்கோலி, பழங்கள் , இனிப்பு வகைகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் இரத்த ஓட்டம் சமநிலையாக்கப்பட்டு குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது.

உப்பு போட்ட வேர்கடலை , பாதம் , பிஸ்தா , மக்கானா,  ஊறவைத்த திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம் , கொண்டைக்கடலை சுண்டல் , பட்டாணி அல்லது பயறு வகை சுண்டல்களை தினமும் மாலையில் ஒரு கப் அளவில் எடுத்துக் கொள்ளலாம். இவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்தவும்,  ஆற்றலை வழங்கவும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உண்மையிலேயே இரும்புச்சத்தை அதிகரிக்குமா?
diet for low BP

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சில உணவு வகைகளை தவிர்ப்பது நலம். வெந்தயத்தை உணவில் சேர்ப்பதை இவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். சுக்கு மல்லி காபி , ஜிகர் தண்டா , சப்ஜா விதைகள் போடப்பட்ட குளிர் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது மிட்டாய்கள் , இனிப்புகள் , எலக்ட்ரோலேட் பானங்களை எடுத்து செல்லலாம். இரத்த அழுத்தம் குறைவதாக தோன்றினால் உடனடியாக இவற்றை சாப்பிட்டு விரைவில் சமநிலை அடையலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com