
உணவு, குடிநீர், மூச்சுக்காற்று, தூக்கம், உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குப் படுத்தினால் உடல் நன்கு இயங்கும்; வாழ்வு சிறக்கும்.
1. உணவு (நிலம்) : பசி இல்லாதபோது சாப்பிடக் கூடாது. நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், பின்னும் நீர் அருந்தக்கூடாது. குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது. முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
முக்கியத்துவம்: உணவு என்பது உயிரின் ஆதாரம் மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளமும் ஆகும். சரியான உணவுப் பழக்கங்கள் நம்மை நோயின்றி, உற்சாகமாக வாழச் செய்கின்றன.
2. குடி தண்ணீர் (நீர்) : தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கொதித்து ஆறிய நீரை மண்பானையில் ஊற்றி 2 மணி நேரம் கழித்து பின் பயன்படுத்த வேண்டும். தாமிரம் பாத்திரத்தில் ஊற்றி வைத்துப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. தாகம் இன்றி தண்ணீர் அருந்தக்கூடாது. சிறுநீர் கழித்தால் உடனே நீர் அருந்த வேண்டும். நீரை அண்ணாந்து குடிக்காமல் மெதுவாக சப்பிக் குடிக்க வேண்டும்.
முக்கியத்துவம்: நீர் என்பது உயிரின் ரத்தமாகும். ஒரு துளி நீருக்கு கூட மதிப்புள்ள சமயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
3. ஓய்வு (ஆகாயம்): வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது. வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 5 மணி நேரம் தூங்க வேண்டும். மனதுக்கும், மூளைக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இரவில் பல் துலக்கி விட்டுப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும். தலையில் உச்சிக்கும், சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
முக்கியத்துவம்: ஓய்வு என்பது உடலுக்கும், மனதுக்கும் தேவையான புத்துணர்ச்சியை அளிக்கும் அத்தியாவசிய நிலையாகும். தொடர்ந்து செயல்படவும், உழைப்பில் ஒழுங்கையும் தக்கவைத்துக் கொள்ளவும், ஓய்வு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
4. காற்று (வாயு) : வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கையறை எங்கும் எப்போதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். தூங்கும் போது இயற்கை காற்று வரும் படி அமைத்துக் கொள்வது நல்லது. கொசுவர்த்திகளை பயன்படுத்தக் கூடாது கொசுக் கடிக்காமல் இருக்க கொசு வலைகள் பயன்படுத்தலாம். படுக்கை அறையில் நல்ல வாசமுள்ள மலர்களை மற்றும் துளசி வகைகளை வைத்துக் கொள்ளலாம்.
முக்கியத்துவம்: காற்று என்பது வாழ்க்கையின் இரண்டாவது நரம்பு. இது இல்லாத உலகம் என்பது சாத்தியமே இல்லை. நாம் தினமும் சுவாசிக்கிற காற்றை தூய்மையாக வைத்திருக்க மரம் நடும் பழக்கம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஆகியவை நமக்கு மிக முக்கியமான பொறுப்பாகும்.
5. உழைப்பு (நெருப்பு) : உழைப்புக் கேற்ற உணவு அல்லது உணவுக் கேற்ற உழைப்பு வேண்டும். தினமும் உடலில் உள்ள அனைத்து மூட்டு இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிணநீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது இதுதான் பல நோய்களுக்குக் காரணம் ஆகும்.
முக்கியத்துவம்: உழைப்பு என்பது மனித வாழ்வின் தாரக மந்திரம். உழைத்தால் மட்டுமே வெற்றி, வளர்ச்சி, மகிழ்ச்சி என்பவை கிடைக்கும். தொழில் பழகு, வாழ்வு அழகு என்பது போல், உழைப்பினாலே தன்மானம் உயருகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)