
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பது ஒரு புகழ்பெற்ற தமிழ்ப் பழமொழியாகும். ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும், பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது இதன் முதலடியின் பொருள். அடுத்த அடியில் வரும் நாலும், இரண்டும் என்பவை முறையே நாலடியாரையும், திருக்குறளையும் குறிக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.
நம்முடைய தமிழர்கள் பல் துலக்கப் பயன்படுத்திய ஆலமரக்குச்சி, வேலமரக்குச்சிகளைப் போன்று, இசுலாமியர்கள் உகாய் மரத்தினாலான குச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். 7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற இக்குச்சி நவீன பற்தூரிகைக்குப் பாரம்பரியமானதும் மற்றும் இயற்கையானதுமான மாற்றீடாக இருக்கிறது. இதனை இசுலாமியர்கள், ‘மிஸ்வாக்’ (Miswak) என்றழைக்கின்றனர்.
நபிகள் நாயகம் முகம்மது நபி சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதியான ஹதீஸில் மிஸ்வாக் பயன்பாடு குறித்துப் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
மார்க்க கடமைகளுக்கு முன்னர், மற்றொரு நபரின் வீட்டிற்கு நுழையும் முன், ஒரு பயணத்திற்கு செல்லும் முன் மற்றும் சென்ற பின், வெள்ளிக்கிழமை நாட்களில், தூங்குவதற்கு முன் மற்றும் தூங்கி எழுந்த பின், பசி அல்லது தாகம் ஏற்படும் போது மற்றும் நல்ல ஒன்று கூடலிற்கு நுழையும் முன் போன்ற வேளைகளில் மிஸ்வாக் பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மிஸ்வாக் குச்சிகள் மலிவானவை, பயனுள்ளவை, பொதுவானவை, எளிதில் கிடைக்ககூடியவை மற்றும் பல மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளது. பல் ஈறுகளை பலப்படுத்துதல், பற்சொத்தையை தடுத்தல், பல் வலியை இல்லாமற் செய்தல் போன்றவற்றிற்கும் மேலதிகமாக, மிஸ்வாக் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பற்சொத்தையை மேலும் வராமல் தடுக்கின்றது. இது மட்டுமல்லாமல், அது வாயில் நறுமணத்தை உண்டாக்குகின்றது; வாய் துர்நாற்றத்தை இல்லாமற் செய்கின்றது மற்றும் சுவை அரும்புகளின் உணர்திறனை அதிகரிப்பதுடன் சுத்தமான பற்களைத் தருகின்றது.
மிஸ்வாக் ஐ தேர்ந்தெடுக்கும் போது, அது ஒரு கை சாண் வரை இருக்க வேண்டும். அது வரண்டு காணப்படும் நிலையில், அதன் இரு ஓரங்களையும் மென்மையாக்குவதற்காக பன்னீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும்.
சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அதன் ஓரங்கள் புதிதாக வெட்டுப்பட வேண்டும் அத்துடன் கழிவறை அல்லது கழுவு கிண்ணத்திற்கு அருகாமையில் வைக்கக்கூடாது. பற்தூரிகை உகாய் மரத்தின் கிளைகளில் இருந்து வெட்டாமல், வேர்களில் இருந்து வெட்டப்படுகிறது. வேர்கள் கிளைகளை விட, ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளகூடியது என்பதே இதற்கான காரணம். இது நீண்ட நாள் பாவனைக்கு வழி வகுக்கின்றது.
மிஸ்வாக் குச்சிகள் பயன்பாடு முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதன்மையானதாக இருக்கின்றன. பொதுவாக, அராபியத் தீபகற்பம், ஆப்பிரிக்காவின் கொம்பு, வடக்கு ஆப்பிரிக்கா, சகேலின் பாகங்கள், இந்தியத் துணைக்கண்டம், நடு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா போன்ற இடங்களில் வசிக்கும் இசுலாமியர்களால் மிஸ்வாக் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தபடுகிறது. மலேசியாவில் மிஸ்வாக் குச்சியானது, மலாய் மொழியில் பற்களைச் சுத்தம் செய்யும் குச்சி எனும் பொருள் தரும் "காயு சுகி" என அழைக்கப்படுகிறது.